10/16/2016

தமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அமைப்புக்கள் இலங்கையில் கால்பதிக்கின்றன.


தமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அமைப்புக்கள் இலங்கையில் கால்பதிக்கின்றன.
Afficher l'image d'origine


சிவசேனா  என்னும் காவி பயங்கரவாதிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க தயாராகியுள்ளார் மறவன் புலவு சச்சுதானந்தம்.  இது இந்தியாவில் இருந்து சர்வதேச ரீதியாக தனது கிளைகளை பரப்பிவரும் காவி பயங்கரவாதிகளுக்கு மேலும் ஒரு வெற்றியாகும். ஏற்கனவே கலாசார பண்பாட்டு புனிதம் பேணிவரும் யாழ்ப்பாணத்து காவலர்களுக்கு  இது தித்திக்கும் செய்தியாகவும் இருக்கும்.

ஆனால் தமிழர்களின் போராட்ட பாதையில் யார் எதிரிகள்? யார்  நேச சக்திகள் ?  என்பதை இன்றுவரை அறியாததன் காரணமே இதுவாகும். 1980களின் ஆரம்பத்தில் போராட்டம் என்பதற்கு முன்னுதாரணமாக பலஸ்தீனமும் கியூபாவும்  ரஸ்யாவும்  வியட்நாமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாயின. வர்க்கம் பற்றியும் புரட்சி பற்றியும் சர்வதேச முதலாளித்துவம் பற்றியும் தெளிவான பார்வைகளை அது பரப்பியது. அதனுடாக பாசிசமும்  நாசிசமும்  சியோனிஸமும் எவ்வாறான ஆபத்தானவை  என்பதை நமது போராட்டம் கற்று தீரவேண்டும் என  முற்போக்கு சக்திகள்  உந்தப்பட்டன .

ஆனால் துரதிஷ்ட வசமாக இத்தகைய இடதுசாரிய, முற்போக்கு சக்திகளில் கைகளில் இருந்து தமிழரது போராட்டம் பறித்தெடுக்கப்பட்டது. தமிழ் இன வெறியர்களும் இடதுசாரி என்ன வலதுசாரி என்ன என்று தெரியாத தற்குறிகளும் போராட்ட தலைமையை கைப்பற்றியதன் விளைவாகவே இன்று தமிழ் சமூகம் முச்சந்தியில் நின்று முழிக்கின்றது.

இன்று இஸ்ரவேலை எமக்கு முன்மாதிரியாகவும் யூதர்களை தமிழருக்கு முன்னுதாரணமாகவும் காட்டுகின்ற நிலைமையில் எமது மக்களின் பெயரில் அரசியல் செய்பவர்கள் இருக்கின்றார்கள், உலகில் தனது உரிமைக்காக போராடுகின்ற எந்த ஒரு இனத்துத்துக்கும் இவ்வாறான கேவலமான  அரசியல் வறுமை இருந்தது கிடையாது.   இன்னும் கேவலம் ஹிட்லரின் "பொன்மொழிகளை"  தமிழின உணர்வாளர்கள் என்று தம்பட்டமடிக்கும் பலர் தமது முகநூல்களில் அடிக்கடி பிரசுரித்து மகிழும் நிலையில் தான் நமது இனம் இருக்கின்றது.

 உலக மகா இஸங்களை அறியாதது ஒருபுறமிருக்க நமது அண்மை இந்தியாவில் இருக்கின்ற அரசியல் கலாச்சாரத்தின் அடித்தளங்களை கூட நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இது  சுமார் அரை நூற்றாண்டுகால ஆயுத போராட்ட பாதையை கடந்து வந்த ஒரு இனம் என்னும் வகையில்  மிகவும் வேதனையான செய்தி ஆகும். இதனால் தான் நாம் யார் என்கின்ற அடையாளம் கூட தெரியாமல் ஆரிய மாயையில், இந்துத்துவ கனவில் எமதுமக்கள்  மிதக்க வைக்க படுகின்றனர். தமிழர்கள் என்போர் இந்துக்கள் அல்ல என்பது கூட தெரியாத நிலையில் இலங்கை தமிழர்களை சச்சுதானந்தம் போன்றோர் இந்த இந்து பயங்கரவாதிகளிடம் சரணடைய வைப்பது வேதனை மிக்கது. சுமார் 15 வருடங்களுக்கு  முன்னர் என்று எண்ணுகின்றேன் தொ.ப.பரமசிவம் என்கின்ற தமிழறிஞர் "நான் ஏன் இந்துவல்ல"   என ஒரு சிறு நூல் எழுதினார். அதை  வாங்கி ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். ஒவ்வொருவரும் படிப்பதற்கு முதல் இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் அதனை படிக்க வேண்டும்.

நமது பாரம்பரியம்  என்பது பல்லின பண்பாட்டுக்கும்  பகுத்தறிவுக்கும் மதிப்பளிப்பது என்பது கூட புரியாத அரசியல் வறுமை நிலையில் இருந்துதான்  இன்று சிவசேனாவும் விஷ்வ இந்து  பரிஷத்தும் எம்மால் வரவேற்கப் படுகின்றன. ஆன்மீகம் என்னும் பெயரில் பிரேமானந்தா போன்ற காம வெறியர்களின் கலைக்கூடங்களாக எமது மண் மாறிவருகின்றது. அதற்கு   கம்பளம் விரிப்பதில் கல்வி மான்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் அதிகம். அவர்களையே நாம் முதலமைச்சர்களாகவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.


இந்து கலாச்சாரம் என்கின்ற பெயரில் இந்த சிவசேனா என்னும் அமைப்பு இந்துத்துவ ஒற்றைக்கலாச்சாரத்தை போதிக்கின்றது., முஸ்லிம் கிறிஸ்தவ, மற்றும் சிறுபான்மை இனங்கள் மீது இனசுத்திகரிப்பை கோருக்கின்றது.காதலர்தினங்களை கூட பகிஷ்கரித்து அடாவடித்தனம் பண்ணுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள்  சமாதானத்துக்கு சகவாழ்வுக்கும் எதிரானதேயாகும்.  இதையெல்லாம் சச்சிதானந்தம் போன்றவர்களோ பாலியல் வன்முறையாளன் பிரேமானந்தாவுக்கு கிளைபரப்பும்  விக்கினேஸ்வரன் போன்றவர்களோ அறியாதிருக்கின்றார்களா?  இல்லை . அவர்கள் அறிந்தே செய்கின்றார்கள்.

ஆனால் இந்த அரசியலின் ஆபத்துக்களை புரியாதிருப்பவர்கள் அப்பாவி மக்கள்தான். அப்பாவிகளாக முப்பது வருட போரில் அழிந்து மீண்டும் சாம்பலில் இருந்து எழுவதுபோல  புதிய வாழ்வை தொடங்க நினைக்கும் எமது மக்களுக்கு இவர்கள் காட்டும் அரசியல் பாதை இதுதான்.


கிழக்கிலும்  மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்போன்றவர்கள்  விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றனர். அடிக்கடி இந்தியா சென்று இந்த காவி பயங்கர வாதிகளுடன் சந்திப்புக்களில் கலந்து கொண்டு வருகின்றார். "முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பை" கட்டுப்படுத்தவும் கையாளவும்  இதுதான் வழி என்று  மட்டக்களப்பு இளைஞர்களிடையே அவர் ரகசிய பிரச்சாரம் செய்து வருகின்றார்.

கல்முனையில் ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் சிவில் சமூக ஆர்வலர்களும்  முஸ்லிம்களுக்கு எதிராக சிஹல உறுமய, பொதுபல சேனா   முக்கியஸ்தர்களுடன் இணைந்து இரகசிய செயல் திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். "முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கமே" தமிழர்களின் காணி நிலம் பறிபோகின்றமைக்கு காரணம் என தமிழ் மக்கள் திசை திருப்ப படுகின்றனர்.இளைஞர்களிடையே இயல்பாக இருக்கும் இன, மான உணர்வுகளை  மாற்று இனங்களுக்கு எதிராக திருப்பி விடுவதில் இந்த அரசியல் வாதிகள் வெற்றிகண்டே  வருகின்றார்கள்.


இவையனைத்தும் எமது மக்களுக்கு சரியான அரசியல் பாதையை காட்டிட முடியாமையின் வெளிப்பாடுகளே ஆகும். துரதிஷ்ட வசமாக எமக்கு அரசியல் தந்தைகளாக இருப்பவர்கள்  அப்புக்காத்துக்களே தவிர சமூக விடுதலை போராட்ட பாதையில் வந்தவர்கள் இல்லை. இதுவே  இதற்கான காரணமுமாகும்.

தமிழ் தலைமைகளின் அரசியல் அறிவின்மையும் பிரச்சனைகளை சமூக பொருளாதார ,பண்பாட்டு அம்சங்களுடாக அணுக முடியாமையும், இராஜ தந்திரமற்ற அரசியல் நகர்வுகளும் காரணமாகவே எமது மக்களை உரிய முறையில் வாழவைக்க முடியாமால் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.

 ஆனால் அதை மறைத்து போருக்கு பின்னரான இன்றைய வாழ்வில் வேலைவாய்ப்புக்களோ வாழ்வாதாரங்களோ இன்றி  விரக்திக்கு தள்ளப்படும் மக்களின் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணம் முஸ்லிம்களும் சிங்களவர்களும் என்று இலகுவாக திசை திரும்புகின்றனர்இந்த அரசியல் வாதிகள்.   இனவாத மதவாத அமைப்புக்களிடம் இளைஞர்களை இலகுவாக இவர்கள் தள்ளிவிடுகின்றனர்.  தமிழர்களை பாதுகாப்பது என்னும் பெயரில்  இத்தகைய காவி பயங்கரவாதத்தை இந்தியாவில் இருந்து கூவி அழைத்து கொண்டு வருவதன் ஊடாக   எமது நாடு மீண்டுமொரு முறை பற்றியெரிய இதனுடாக திரி வைக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

எழுகதிரோன்








0 commentaires :

Post a Comment