10/10/2016

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

anzilhakeem-011முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சிலை, கட்சியை விட்டு வெளியேறுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை பகிரங்க நிகழ்வொன்றில் வைத்துக் கூறியமையானது கட்சிக்குள்ளும், வெளியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று,  தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஹக்கீம், இதற்குத் தலைமை தாங்கினார்.
இந்த செயலமர்வில் கலந்து கொள்ளுமாறு மு.காங்கிரசின் தற்போதை மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சர் மனோ கணேசன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் மற்றும் கலாநிதி சுஜாதா கமகே ஆகியோர், இச் செயலமர்வில் சிறப்புரையாற்றினர்.
இந்தச் செயலமர்வின் போது, தேர்தல் சீர் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் முன்மொழிவு எனக்கூறி, ஒரு வரைபு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கட்சியின் எந்தவொரு உயர்பீடக் கூட்டத்திலும் இவ்வாறானதொரு முன்மொழிவு தயாரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படவுமில்லை. அது தொடர்பான கருத்துக்கள் உயர்பீட உறுப்பினர்களிடமிருந்து பெறப்படவுமில்லை.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த தேர்தல் மறுசீரமைப்பு பிரேரணையில், பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட அதேவேளை – யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையினைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
ஆக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கே தெரியாமல் தயாரிக்கப்பட்ட தேர்தல் மறுசீரப்பு தொடர்பான அந்தக் கட்சியின் முன்மொழிவு தொடர்பில், அங்கிருந்த கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அதிருப்தி கொண்டனர்.
இந்த நிலையில், செயலமர்வில் கேள்வி நேரம் வழங்கப்பட்டது. இதன்போது எழுந்த உயர்பீட உறுப்பினர் அன்சில், தனது சந்தேகங்களை கேட்க முடியுமா என வினவியுள்ளார். காரணம், அங்கு மு.கா. தலைவர் இருக்கவில்லை. அவர் செயலமர்வின் இடையில் – தொலைக்காட்சி நிகழ்வொன்றின் ஒளிப்பதிவில் கலந்து கொள்ள வெளியேறிச் சென்றிருந்தார்.
ஆயினும், அன்சிலுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அன்சில் தனது கேள்விகளைக் கேட்டதோடு, கட்சியின் தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான தனது அதிருப்திகளையும் தெரிவித்தார்.
கட்சியின் உயர்பீடத்தில் தெரியப்படுத்தாமல், கட்சி உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படாமல், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் முன்மொழிவினை எவ்வாறு தயாரிக்க முடியும் என்று கேட்ட அன்சில், இது தொடர்பில் தனக்குள்ள சந்தேகங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது சபையில் இருந்த அமைச்சர் மனோ கணேசன், அங்கு கட்சி விவகாரம் பேசப்பட்டமையினால், நாகரீகமாக எழுந்து சென்று விட்டார்.
எவ்வாறாயினும்,  செயலமர்வில் அன்சில் பேசிய விடயம் பற்றி, மு.கா. தலைவருக்கு தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த ரஊப் ஹக்கீம் சற்று நேரத்தில் செயலமர்வு நடைபெற்ற மண்டபத்துக்கு வந்த கையோடு, நேரடியாக மேடையேறி, ஒலிவாங்கி முன்னால் நின்று, அன்சில் தொடர்பில் தனது கோபத்தைக் கொட்டித் தீர்த்ததோடு, இவ்வாறானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிப் போகட்டும் என்றும் கூறினார்.
மேலும், அன்சிலின் சொந்த ஊரான பாலமுனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என்று தன்னிடம் அன்சில் கூறியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமை அந்த நிகழ்வில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தமையினையும் இங்கு ஹக்கீம் நினைவுபடுத்தி பேசினார்.
மு.கா. தலைவர் இவ்வாறு கூறியமையானது, அந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கட்சியின் முக்கியஸ்தர்களிடையே பாரிய அதிர்வினையும், அதிருப்திகளையும் ஏற்படுத்தியது.
கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஒருவரை, கட்சியை விட்டும் விலகிச் செல்லுமாறு – ஹக்கீம் எவ்வாறு கூற முடியும் என்கிற கேள்வி அங்கு எழுந்தது.
மேலும், மு.கா. தலைவர் – முற்று முழுதானதொரு சர்வதிகாரியாக இதன் மூலம் தன்னை வெளிக்காட்டி விட்டார் என்றும் அந்த இடத்தில் பேச்செழுந்தது.
இத்தோடு விவகாரம் முடியவில்லை. குறித்த செயலமர்வு – நிறைவு பெற்றபோது, அன்சிலிடம் வந்த ஹக்கீம் “என்ன நடந்தது” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அன்சில்; “இதை நீங்கள் மேடையில் பேசுவதற்கு முன்னர் என்னிடம் கேட்டிருக்க வேண்டும்” என்றார். மேலும், “கட்சியை விட்டு விலக வேண்டுமென்றால், உங்களிடம் கடிதம் தர வேண்டுமா” என்று அன்சில் கேட்க, “கடிதத்தைத் தந்து விட்டு நீங்கள் விலகலாம்” என்று ஹக்கீம் கூறியுள்ளார்.
இப்படி இந்தப் பேச்சு சூடேறிச் சென்ற ஒரு கட்டத்தில், “நீங்கள் இந்தக் கட்சியின் லீடர்தானே (leader) தவிர ஓனர் (Owner) இல்லை” என்று கூறிய அன்சில், “இந்தக் கட்சி எனது தந்தைக்கும் உரியது, 1987 இல் எனது தந்தை இந்தக் கட்சியின் சார்பாக, தேர்தலில் போட்டியிட்டவர்” என்று கூறியுள்ளார்.
எது எவ்வாறாயினும், அன்சிலுக்காக தீட்டிய கத்தியை நேற்று  ஹக்கீம் சுழற்றிப் பார்த்திருக்கிறார்.
ஹக்கீமுடைய வெட்டுகளுக்கு, அன்சில் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்விகளாகும்.
இப்படியொரு நிலைமை அன்சிலுக்கு உருவாகும் என்பதை, ‘புதிது’ செய்தித் தளம், சில வாரங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டி செய்தியொன்றினை வெளிபிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment