9/01/2016

மயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் ?

DSCN0194
சா.நடனசபேசன்
நாற்பது வருடமாக இந்த நாட்டிலே இடம்பெற்ற யுத்தம் ஓய்ந்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மக்களின் மனங்களில் இருந்து அகலதவர்களாக பல கிரமத்து மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்
இந்த நாட்டிலே பல்வேறு கோணங்களில் அபிவிருத்திகள் இடம் பெற்றும் வரும் வேளையிலும் யாருடைய கண்களிலும் படதாதவாறு காட்சியளிக்கும் அந்தக்கிராமமும் அம் மக்களின் அவலக்குரலும் பற்றியதாகவே இக்கட்டுரை அமைகின்றது


புணானை மயிலந்தனைக் கிராமத்தின் அவலத்தினைக் கேள்விப்பட்ட நானும் சில நண்பர்களும் அக்கிராமத்தினை நேரடியாகப் பார்வையிடச் சென்று பார்த்த போது அக்கிராமம் ஒரு எல்லைக்கிராமமாக இருப்பதோடு கிரமத்துக்குள்ளும் அதனை அண்டிய பகுதிகளும் பற்றைக்காடாகவே காட்சியளித்ததே தவிர மக்கள் வாழும் இடமாகத்தெரியவும் இல்லை மக்கள் வாழும் இடமாக மாற்றுவதற்கான வசதிகளை யாரும் செய்து கொடுத்ததாகவும் தென்படாத நிலையினைக் கண்டு கொள்ளமுடிந்தது
நாம் இங்கு குறிப்பிடும் கிராமம் மட்டக்களப்புமாவட்டத்தின் எல்லைக் கிராமமாகும் அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்டதும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்டதுமான 210 ஈ கோரளைப்பற்று தெற்கு கிரான் புனை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டு மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியின் தெற்குப்புறமாக சுமார் 1 கிலோமீற்றர் தொலைவிலும் மாதுறு ஓயாவுக்கு வடக்கு எல்லையிலும் இருக்கும் ஒரு விவசாயத்தை நம்பி வழும் தமிழ் மக்கள் வாழும்கிராமமாகவே மயிலந்தனைக்கிராம இருக்கின்றது.

இக்கிராமத்தில் 90 குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இக்கிராமம் மிகவும் பழைமையானதாக இருப்பதுடன் 1957 ஆம் ஆண்டு செங்கலடி கிரான் வந்தாறுமூலைப்பகுதியில் இருந்து மக்கள் குடியேற்றப்பட்டதாகவும் அதன் பிற்பாடு 1972 ஆம் ஆண்டு மலையகப் பகுதியில் இருந்து பலர் குடியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்
தங்களுக்கான வசதிவாய்ப்புகள் எதுவும் சரியாக செய்துதரப்படவில்லை அதாவது நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் போது 1992 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஆயுதத்துடன் இக்கிராமத்துக்குள் நுழைந்தவர்கள் கொடூரமான முறையில் சிறுவர்கள் பெரியவர்கள் அடங்கலாக 35 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தில் 24 வது வருடத்தினை
ஆகஸ் 9 நினைவு கூரப்பட்டநிலையில் இருக்கிம் இந்த கொடுர சம்பவத்தில் இருந்து இன்னும் மீளமுடியாதவர்களாகவே இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கொலைசெய்யப்பட்டபின்னர் இடம்பெயர்ந்து பல இடங்களில் வாழ்ந்து மீள 2003 ஆம் ஆண்டு குடியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கும் இவர்களுக்கு வீடமைப்பு பாடசாலை போக்குவரத்து குடிநீர் மலசலகூடம் வைத்தியசாலை போன்ற அடிப்படைத்தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதுடன் மாலை 6 மணியானதும் அருகில் இருக்கும் காடுகளில் இருந்து காட்டுயானைகள் கிராமத்துக்குள் நுழைந்து வீடுகளையும் பயிர்களையும் சேதம் செய்துவருவதுடன் இரவில் வெளியில் செல்லமுடியாதவர்களாகவே இவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் அதேவேளை யானைகள் வராது தடுப்பதற்காக எவரும் எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் யானை வராது தடுக்க மின்சாரவேலி கூட அமைக்கப்படவில்லை.
1992 ஆண்டு நடைபெற்ற கொடூர சம்பவத்தினை நேரில் கண்ட ஒருவரான பெரியண்ணன் கறுப்பையா எனும் வயோதிபர் தெரிவிக்கையில். 1992 ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி மதியம் ஒருமணி இருக்கும் கிராமத்துக்குள் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது
நான் அருகில் உள்ள கொச்சித் தோட்டத்தில் வேலை செய்து இருந்தவாறு ஓடிவந்தேன் அப்போது சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து சுடுவதைக்கண்டு நான் பற்றைக்குள் மறைந்து இருந்து ஓடிவிட்டேன்.

பின்னர் மூன்று நாட்களின் பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வந்து பார்த்தேன் எனது மனைவி உட்பட என்னுடைய 3 பிள்ளைகளும் கொலைசெய்யப்பட்டு இருந்ததுடன் 35 பேர் கொலைசெய்யப்பட்டு இருந்தனர்.

இந்தச் சம்பவம் இன்னும் மனங்களில் இருந்து நீங்கவில்லை
இவ்வாறு வாழும் எமக்கு யாரும் உதவுவதும் இல்லை கிராமத்துக்கான வசதிவாய்ப்புக்களை சரியாக செய்துதரவும் இல்லை நாம் உழைத்தால் மாத்திரந்தான் சாப்பாடு 35 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். புணானைக்கு கால்நடையாக நடந்துசென்று கல்வி கற்று வருகின்றனர் பின்னர் பாடசாலையினை விட்டு விலகிக்கொள்கின்றனர்.

இந்நிலையினைக் கருத்தில் கொண்டு இப்பிள்ளைகளின் கல்வியினை முன்னேற்றவேண்டும் என்பதற்காக சுவிஸ் உதயம் 2004 ஆண்டில் இருந்து உதவிவருகின்றது இன்று அம்மாணவர்கள் கல்வி கற்பதற்காக உதவி வருவதுடன் மாலை நேர வகுப்பு நடைபெறும் கட்டிடத்தை திருத்தம் செய்வதற்கும் உதவியுள்ளனர் இவ்வாறு நல்லுள்ளம் படைத்த சுவீஸ் உதயத்தினருக்கும் இக்கிராமம் நன்றியுடையவர்களாக இருக்கும் என்றார்.
.

ஆகவே இங்கு கட்டாயம் பாடசாலை ஒன்று அமைத்து தரவேண்டும் என்றார்
இக்கிராமத்தில் பாடசாலை ஒன்று இதுவரையில் அமைப்பதற்கு யாரும் ஏற்பாடு செய்யவில்லை எனவும் சுமார் 4 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் புணானை பாடசாலைக்கு எவ்வித போக்குவரத்தும் இல்லாத அக்காட்டுவழிப்பாதை வழியே நடந்து செல்லும் நிலையிலே அப்பிள்ளைகளின் நிலைமை இருக்கின்றது அங்கு இருக்கும் வீதிகள் ஒற்றையடிப் பாதைபோன்று மணல் பரந்து காணப்படுகிறது அவ்வீதியால் துவிச்சக்கர வண்டிகள் கூட சரியாக செல்லமுடியாதவாறு காட்சி அளிக் கின்றது.

வீதியின் இருமருங்கிலும் பற்றைக்காடாக இருப்பதுடன் அதற்குள் யானைகளும் மறைந்திருந்து வீதியால் செல்பவர்ளைத் துரத்துவதாகவும் தெரிவித்தனர்.
அங்கு குடிப்பதற்கு நீர் பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன் கோடை ஏற்பட்டால் கிணற்றில் நீர் வற்றி விடுவதாகவும் கிராமத்தின் தென் புறமாக இருக்கம் மாதுறு ஓயாவில் குளிப்பதற்குப் பயன்படுத்துவதுடன் குடிப்பதற்கு நீரைப் பெறுவதில் பாரிய சிக்கல் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கும் அதேவேளை ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் இக்கிராமம் இருந்தும் பவுச்சர்மூலம் நீர் கூட வழங்குவதில்லை எனவும் சிலவேளை கிரான் பிரதேச செயலகத்தால் மாத்திரம் பவுச்சரில் நீர் வழங்க நடவடிக்கை ஏடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


அத்தோடு அக்கிராமத்தில் பல கிணறுகள் இருந்தும் நீர் இல்லாத பொருத்தமில்லாத இடங்களிலே அமைக்கப்பட்டு கிணறு நீர் இன்றி காட்சி அளிப்பதுடன் ஓட்டமாவடி பிரதேச சபையினால் சுமார் ஒருவருடத்திற்கு முன்னார் கிணறு அமைப்பதற்கு குழிதோண்டப்பட்டு இன்றும் அக்குழியில் பாரியளவு நீர் இருந்தும் அவ்விடத்தில் கிணறு அமைக்காது குழியாகவே காட்சி அழிப்பதுடன் அக்குழிகளில் மாடு ,ஆடு போன்ற மிருகங்கள் விழுந்து இறப்பதுடன் சிறுவர்களும் அக்குழியில் விழுந்து காப்பாற்றியதாக அம்மக்கள் குறிப்பிட்டனர்


மயிலந்தனைக் கிராமத்தினைச் சேர்ந்த வி.கோகிலதாஸ் எனும் இளைஞன் தெரிவிக்கையில் இந்தக்கிராமம் எங்களது பூர்வீக கிராமமாகும் கடந்த 1992 ஆம் ஆண்டு இக்கிராமத்திலே என்னுடைய தாய் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார் அப்போது எனக்கு இரண்டு வயதாக இருந்தது எனக் கவலையுடன் கதையினைத் தொடங்கினர் அந்த இளைஞன்
இவ்வாறு பல இழப்புக்களைச் சந்தித்த இக்கிரமததிற்கு போதிய வசதிவாய்ப்புக்கள் இல்லை இரவு நேரத்தில் விசஜந்துகளால் அல்லது வேறு விபத்துக்கள் ஏற்பட்டால் இங்கிருந்து காட்டுவழியாகவே சென்று பொலநறுவை மட்டக்களப்பு பிரதானவீதிக்குச் சென்றுதான் நீண்டதூரத்தில் இருக்கும் வைத்தியசாலைகளுக்குச் செல்லவேண்டும். அப்போதுயானைகள் அவ்வீதியில் நின்றால் வைத்தியசாலைக்குச் செல்லமுடியாது யானைகள் போகும் வரை காத்துக்கிடக்கும் நிலை ஏற்படும் ஆகவே இக்கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் .


இங்கு மின்சாரம் இருந்தும் பலவீடுகளுக்கு மின்சாரம் பெறப்படவில்லை ஏன் நீங்கள் மின்சாரம் பெறவில்லை என ஒரு தாயிடம் கேட்டபோது அந்தப் பெண் ஏக்கத்துடன் கதையைத் தொடங்கினர்.
இங்கு நாளாந்த உணவுக்காகவே கஸ்டப்படுகின்றோம் இந்நிலையில் வீட்டிற்கு மின்இணைப்பை எவ்வாறு பெறுவது அத்தோடு இங்கு ஒர் இரு வீதி மின் விளக்குகள் இருந்தும் அதுவும் எரிவதில்லை வீதி மின் விளக்குகள் இருந்தால் யானை கிராமத்துக்குள் வராது தடுக்கலாம் என்றார்.
இங்கு தேர்தல் காலம் என்றால் தமிழ் அரசியல்வாதிகள் மின்னல்வேகத்தில் பறந்து வருகின்றனர் தேர்தல் முடிந்ததும் மையிலந்தனை என்றால் எங்கு உள்ளது எனக் கேட்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களாகிய எமது நிலையினை யார் கவனிப்பது தமிழ்த் தலைமைகள் எனக் கூறி எமது உரிமை எனப் பேசினால் போதாது மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்து செயற்படவேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளே என்பதை மறந்து சிலர் செயற்படுவது தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கலாம் என அங்கு நின்ற பலர் தெரிவித்தனர்
அதே வேளை இம்மக்கள் குடியமர்த்தப்பட்ட வேளையில் மகாவிலி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு குடும்பத்திற்கு 2 அரை ஏக்கர் காணி 42 குடும்பங்களுக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டு இன்று அக் காணியினை அம் மக்களிடம் இருந்து மீளப்பெற்று அறபுக்கல்லூரி ஒன்று கட்டப்பட்டு விட்டாதகவும் தங்களுக்கு கிரான் பிரதேச செயலகப் பகுதியில் ஒன்ரரை ஏக்கர் காணி தருவதாக காட்டியும் அக்காணிக்கான சட்டரீதியான எந்த ஆவணமும் இதுவரை வழங்காது இழுத்தடித்து வருவதாகவும் இதனைப் பற்றி தமிழ்த் தலைமைகள் சிந்திக்காமல் இருக்கின்றனர் என அவர்கள் சுட்டிக்காட்டினர் அதேவேளை புணானையில் 1990 ஆண்டு தபால் நிலையம் இருந்ததுடன் அது இன்று ரிதி தென் எனும் இடத்திற்குப் மாற்றப்பட்டு இருப்பதனால் தபால் சேவைக்காக நீண்ட துரம் செல்லவேண்டி இருப்பதாக தெரிக்கின்றனர்
தமது தேசத்தில் உள்ள மக்களின் ஒரு சாரார் ஆடம்பரங்களின் உச்சத்தினை அனுபவித்துக்கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு சாராரின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது எவ்வளவு பெரிய துயரம்
எனவே சம்மந்தப்பட்ட அரசியல் தலைமைகளும் உயர் அதிகாரிகளும் மயிலந்தனை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய முன்வரவேண்டிய பொறுப்பு உள்ளது என்பதனை மனதில் கொண்டு விரைவில் அம் மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்புடுமா ?

0 commentaires :

Post a Comment