9/06/2016

நாம் தமிழர் கட்சியில் பிளவு

Afficher l'image d'origineநாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப்போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருக்கும் அய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை இன்று சந்தி்த்தனர்.
அப்பொழுது பேசிய அய்யநாதன், “தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை. மாறாக தமிழர் நலனுக்காக போராடிய  இவர்கள் இல்லாமல், புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார்.
இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுகட்டை போடுகிறார். அதற்காக தான் தமிழர் பிரச்னையில் நாங்கள் வீரியத்துடன் செயல்பட நாம் தமிழர் கட்சியில் தனித்து செயல்படுவது என்ற முடிவினை எடுத்துள்ளோம். எங்களுடன் எட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர். நாங்கள் நாம் தமிழர் கட்சியில்தான் இருப்போம். ஆனால் தனித்து செயல்பட உள்ளோம்.
இந்த கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து ஒரு ஆண்டு ஆகியும் எந்த பொறுப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் கட்சியில் எந்த உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடையாது. சீமானுக்கே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த நிலை தொடர்வதை நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டி அதன் மூலம் தான் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அறிவிக்க முடியும். சீமானால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. தற்பொழுது வரை சீமான் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தான் உள்ளார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைவராக ஏற்றுகொண்ட ஒரு இயக்கம் இப்படி செயல்படுவதை நாங்கள் பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றார்.
கடந்த சில நாட்களாகவே  சீமானின் செயல்பாடுகள் குறித்து அய்யநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலருக்கு அதிருப்தி நிலவி வந்த நிலையில், இன்று வெளிப்படையாக மோதல் வெடித்துள்ளது.

0 commentaires :

Post a Comment