9/18/2016

சமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. .நேர்காணல்

சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக -
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ என்ற அரசியல் அமைப்பொன்றினூடாக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் பொதுவெளியில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்தப் புதிய அமைப்புத் தொடர்பான மேலதிக விளக்கங்களை அறிவதற்காகவும் முருகேசு சந்திரகுமாரின் தற்போதைய, எதிர்கால அரசியல் செயற்பாடுகளைப்பற்றித் தெரிந்து கொள்ளவும் அவரை வீரகேசரி வாரவெளியீட்டினர் நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தனர். அந்த நேர்காணலின் முழுமையான வடிவம் இது.
நேர்காணல் -
சமத்துவம், சமூக நீதியுடனான
நவீன தேசியம் நோக்கி...
- முருகேசு சந்திரகுமார்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)


01. நீங்கள் EPDP யில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாகத் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் பல்வேறு அரசியல் தரப்பினர்களுடனும் இணைந்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தங்களுடைய தற்போதைய அரசியல் நிலைப்பாடு என்ன?

அரசியல் என்பது மக்களின் நலன்களுக்காக அவர்களின் உரிமைகள் மற்றும் சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காக உழைப்பது. அந்த அடிப்படையில்தான் நான் பல்வேறு தரப்பினருடனும் இணைந்து மக்களுக்குத் தொடர்ந்தும் பங்களித்து வருகிறேன்.
என்னுடைய அரசியல் நிலைப்பாடு என்பது சமத்துவம், சமூக நீதியுடன் கூடிய முற்போக்குத் தேசியம் நோக்கிப் பயணிப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

02. முற்போக்கு தேசியம் என்பதை நீங்கள் எவ்வாறு வரையறை செய்கிறீர்கள்?

முற்போக்குத் தேசியம் என்பது, முற்றிலும் ஜனநாயகத் தன்மையுடையதாகும். சாதியம், மதவாதம், பிரதேசவாதம், இனவாதம், பால்நிலைப் பாரபட்சம் என அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளையும் கடந்தது. அதேவேளை எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மக்களைக் கொண்ட தேசிய இனங்களையும் அவர்களின் தனித்துவமான மொழி, மதம், பண்பாட்டு அம்சங்களையும் அங்கீகரித்து கௌரவமான இருப்பிற்கு உத்தரவாதப்படுத்தும் போதே தேசிய ஒற்றுமை என்பது ஏற்படுத்தப்படும் என்ற புரிதலையும் கொண்டதாகும்.
தமிழ்த்தேசிய உருவாக்கமானது, ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் ஊடாகவே வளர்ச்சியடைந்த ஒன்றாகும். ஆனால், அதை நாம் நவீன எல்லைகளுக்கு நகர்த்த வேண்டியுள்ளது.
பல்லின, பன்மொழி, பல்கலாசாரக் கூறுகளைக் கொண்ட பன்மைச் சமூகங்களை சமஅந்தஸ்து, சமூகநீதி, மதச்சார்பின்மை, சுயநிர்ணய அடையாளங்களுடனான தன்னாட்சி அதிகாரம் (சுயநிர்ணயம்) கூட்டாட்சிப் பொறிமுறை, பொருளாதார அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி ஊடாக இந்த தேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமத்துவமான குடிமக்கள் என்னும் உணர்வை எற்படுத்துவதன் மூலமே நீடித்த, நிலையான சமாதானத்தை இந்த தீவில் உருவாக்க முடியும். இந்த பன்மைத்துவ அங்கீகாரமே சமஸ்டி அரசியல் தீர்வின் திறவுகோலாகவும் அமையும்.
இன, மத, மொழி, சாதிய கட்டமைப்பு, பால்நிலை வேறுபாடுகளைக் கடந்து சமத்துவம், சமூக நீதி, சமூகப் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள் என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படுவது அவசியமானது. இலங்கை ஒரு பல்லினத்தன்மை கொண்ட நாடு என்பதை அனைத்து தேசிய இனங்களும் ஏற்றுக்கொள்ளும்போதே முற்போக்கு தேசியம் சாத்தியமாகும்.
எனவே, யுத்தம் முடிந்த பின்னரான நிலைமாறும் காலத்தில் உண்மை, வெளிப்படைத்தன்மை என்ற அடிப்படையில் நல்லாட்சி மீதான நம்பிக்கையை ஏற்படுத்தப்படும் செயற்பாடுகள் அவசியமாகும்.

03. முற்போக்கு தேசியத்தை நோக்கி பயணிப்பதற்கான பொறிமுறை எவ்வாறு அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?


இதற்கான பொறிமுறையாக தேசிய இனங்களின் சபை ஒன்று பாராளுமன்றத்திற்கு வெளியே அதற்கு நிகரான அதிகாரங்களுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களான தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்களின், மொழி, சமயம், பண்பாட்டு மானுடவியல் அடையாளங்களை பாதுகாப்பதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் புதிய உலக கோட்பாட்டின் அடிப்டையில் பல்லினத் தன்மையின் இருப்பை அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.
தேசிய இனமொன்றின் மொழியுரிமை, அதனுடைய பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தப்பட வேணும். கல்வி, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் நிகழ்த்தப்படும் இனவிரோத சட்டவாக்கம், இனவாத அழுத்தங்கள் என்பவற்றை தடுத்துநிறுத்துவதற்கான அதிகாரம் தேவை. பன்மைத்துவ இருப்பை உறுதிசெய்வதற்குப் பொருத்தமான சட்டவாக்கங்களை ஏற்படுத்துவதற்கான உத்தரவாதங்களை வழங்குவதற்குரிய அதிகாரமும் தேசிய இனங்களின் சபைக்கு அளிக்கப்படுதல் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
நீதித்துறையில் உச்சநீதிமன்றில் இனவிவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும், மனித உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் அரசியல் அமைப்பின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும்.

04. எண்ணிக்கையிலான (சிறுபான்மை) தேசிய இனங்களின் பிரச்சினைகள் ஒற்றை ஆட்சிப் பொறிமுறையின் கீழ் தீர்க்கப்பட முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

எண்ணிக்கையிலான தேசிய இனங்களின் ஒன்றிணைவின் பலத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றுக்கூடாக தமிழ், முஸ்லீம், மலையக தேசிய இனங்கள் நிரூபித்துள்ளன. இதனை ஒரு பாடமாகக் கொண்டு எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஐக்கியத்தையும், ஒன்றிணைவையும் ஏற்படுத்துவதோடு தனித்தனியாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் பொது ஐக்கியம் ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

05. எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

அன்றாடம் ஊடகங்கள் வெளிக்கொண்டுவரும் இன ரீதியான பாகுபாடுகள் பற்றிய செய்திகளை மக்கள் அறிந்திருக்கிறார்கள். பலவந்தமான நில ஆக்கிரமிப்பு, தமிழ் மொழியை அரசகரும மொழியாக அமுல்படுத்துதலில் காட்டப்படும் பாரபட்சம், மலையக மக்களின் நிலம், வீடு நியாயமான ஊதிய அதிகரிப்புத் தொடர்பான விடயங்களில் காட்டப்படும் அசமந்தம், சிறுபான்மை இன மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது நடத்தப்படும் இனவாதத் தாக்குதல்கள், இராணுவமயமாக்கல், காணாமல் போனோர் விவகாரத்தில் வெளிப்படுத்தப்படும் பொறுப்பின்மை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பில் காட்டப்படும் அசிரத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்திப் பணிகளில் காட்டப்படும் பாராபட்சம் என்பனவாகும். இது இன்னும் தொடர்வதால், இன்று கூறப்படும் நல்லாட்சி, நல்லிணக்கம் என்பவற்றின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்படியான நடவடிக்கைகளே எதிர்காலத்தில் நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும்.

06. சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இனவாத உணர்விலிருந்து விடுபட்டு இன நல்லிணக்கத்தை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா?

இனவாத உணர்வு என்பது காலத்துக்குக் காலம் பேரினவாத அழுத்தும் குழுக்களால் ஏற்படுத்தப்பட்டது. இன்றும் அவ்வாறே தொடர்கிறது. அதுமட்டுமல்ல ஒரே நாடு – ஒரே தேசம் எனும் சுலோகமும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு எனும் கோரிக்கையும் இன்றும் வலுவுள்ளவையாகவே காணப்படுகின்றன.
பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும், அதனை தக்கவைப்பதற்கும் இனவாதத்தை கருவியாகப் பயன்படுத்தியதால் சிறுபான்மைத் தேசிய இனங்களும் அதே கருவியை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
தமிழ்த்தேசிய இனம் அரசியல் அதிகாரத்தில் தமக்குரிய பங்கு வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்து அவற்றை நிவர்த்திப்பதற்காக முன்னெடுத்த அகிம்சைவழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் கடுமையான இராணுவப் பலம் மூலம் அடக்கப்பட்டது. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள முற்போக்காளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் ஊடாக பரந்துபட்ட சிங்கள பொதுமக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அவர்கள் புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பதற்குமான வெளி ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டும். இதன் மூலம் 'சமஸ்டி என்பது பிரிந்து செல்லுதல் அல்ல. அது சமூகங்களுக்கிடையேயான நியாயமான அதிகாரப்பகிர்வு' என்ற புரிதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தப்படவேண்டும்.

07. சமத்துவம், சமூகநீதியுடனான முற்போக்குத் தேசியம் நோக்கிய பயணம் எனும் தங்களுடைய அரசியலத் கோட்பாட்டில் சமூகநீதி என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள்?

முற்போக்குத் தேசியம் என்பது அடிப்படையில் சமூகநீதியின் மூலமே ஏற்படுத்தப்படுகிறது. தேசிய இனங்களுக்கிடையே சமூகநீதி பேணப்பட வேண்டும். அதேபோன்று ஒரு தேசிய இனத்துக்குள்ளேயும் சமூகநீதி பேணப்பட வேண்டும். சமூகநீதி பேணப்படும் போது மட்டுமே தேசிய இனங்கள் ஆரோக்கியமானவையாக உருவாகும். இந்த முற்போக்குத் தேசியம் என்பது இன்றைய உலகின் புறச் சூழ்நிலைகளை கருத்திற் எடுத்துக்கொள்ளும் போது அது நவீன தேசியமாக பாிணமிக்கும்.
பிரதேச வேறுபாடுகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால்நிலை வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை கருத்தில்கொண்டு முரண்பட்ட நலவுரிமைகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போதே பலமான தேசிய உருவாக்கம் நிகழும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பவற்றின் மூலமே வலுவான தேசியக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.

08. இவ்வாறான பிரதேச, சாதிய, பால்நிலை, பொருளாதார வேறுபாடுகள் என்பன இன ஐக்கியத்தை சீர்குலைத்துப் பலவீனப்படுத்தும் எனும் கருத்தும், இவ்வாறான வேறுபாடுகள் எமது சமூகத்தில் இன்று இல்லை எனும் வாதமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?

இவ்வாறான அக முரண்பாடுகள் நீக்கப்பட்டதாக சொல்லப்படும் விடயங்களில் எவ்வித உண்மையும் இல்லை. இவை சாம்பல் பூத்த நெருப்புத் தணல்களாகவே இன்றும் காணப்படுகின்றன. சமயங்களில் அவை மீளவும், மீளவும் கொழுந்து விட்டெரியும் சம்பவங்கள் இன்றும் எமது சமூகத்தில் காணப்படுகிறது.
சமத்துவ இருப்பிற்காகப் போராடும் தேசிய இனம் என்ற வகையில் எம்முடைய சமூகத்திற்குள்ளேயும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். சமூக நீதியற்ற தேசிய கட்டமைப்புக்கள் நிலைக்காது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. சமூக நீதியற்ற தேசிய இணக்கப்பாடு அதிகாரத்தையும், பலத்தையும் மட்டுமே கொண்டு உருவாக்கப்படுவதனால் காலநீட்சியில் அவை சிதைவடைந்துபோகும் வாய்ப்புக்களே அதிகம். எனவே, சமூக நீதியுடன் அகமுரண்பாடுகளையும் தீர்க்கும் வழிமுறையிலான தேசிய ஒருமைப்பாடு என்பதே இன்றைய காலகட்டத்தில் எமக்கு மிக அவசியமாகிறது.

09. கடந்தகால ஆட்சியில் பல்வேறு வகையான ஊழல் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக இன்று பிரஸ்தபிக்கப்படுகிறது. கடந்தகால ஆட்சியில் பங்குபற்றியவர் என்ற வகையில் இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

கடந்தகால ஆட்சியில் அங்கம்வகித்த அனைவர் மீதும் இக்குற்றச்சாட்டுகள் எழுப்பப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஊழல் மற்றும் மோசடி என்பது வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடு, நிதி நிர்வாக பிரமாணங்களைப் பின்பற்றாத போக்கு ஆகியவற்றாலேயே ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியாக மக்கள் விழிப்புடன் செயற்திட்டங்களை அவதானித்துப் பங்குகொள்ளாமையின் விளைவாகும். நீதியான சட்டவாட்சி முறை ஏற்படுத்தப்படும் போது இவ்வாறான மோசடிகளையும் ஊழல்களையும் முடிந்த அளவு தடுத்து நிறுத்த முடியும். இது பிரதேசசபை, மாகாணசபை, பாராளுமன்றச் செயற்திட்டங்கள் அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும்

0 commentaires :

Post a Comment