9/30/2016

'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்

 டக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்புவதைப் பெற்றுக்கொடுக்க முடியாது. அவர் விரும்பும் தமிழீழமோ சமஷ்டி முறையிலான ஆட்சியையோ, புதிய அரசியலமைப்பில் உருவாக்கிவிட முடியாது” என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார். 
இவ்வாறானவர்களின் கருத்துக்களைக் கண்டு அஞ்சி, கலவரமடைய வேண்டாமென, தெற்கு வாழ் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகக் கூறிய அமைச்சர், புதிய அரசியலமைப்புக்கான அங்கிகாரத்தைப் பெற, மக்களிடமே வரவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார். 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 
“எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது, சிறுபிள்ளைத் தனமானது. ஒரு முதலமைச்சராக இருக்கவேண்டியவர் தெரிவிக்கக்கூடிய பொறுப்பான கருத்தல்ல அது.  ஜனாதிபதியின் தலைமையில், இந்நாட்டின் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதானது, தெற்கில் இனவாத அரசியலைப் பயன்படுத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும். அரசியலமைப்புச் சீர்திருத்தமானது, இன்னமும் உருவாக்கப்படவில்லை.
அதற்கு நீண்டதொரு படிமுறையொன்று உள்ளது. அதனைப் பிரயோகிக்காமல், அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, பிரதமரோ அல்லது நானோ விரும்பினாற்போல், அரசியலமைப்பொன்றை உருவாக்கிவிட முடியாது. சமஷ்டிக் கோரிக்கையோ, தமிழீழக் கோரிக்கை கொண்டோ, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், இவ்விரண்டையும் நாங்கள் நீக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்போம். எவ்வாறாயினும், அரசியலமைப்பு விடயத்தின் இறுதியில், மக்கள் தீர்ப்பெற்றதொன்று உண்டு. அது, மக்களின் அபிலாஷைப்படியே நிறைவேற்றப்படும். அதனால், இவ்வாறானவர்களின் கருத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. 
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இரண்டு பிளவுபட்ட கருத்துநிலை காணப்படுகின்றது. ஒரு தரப்பு, நடுநிலையுடன், நாட்டின் நிலைவரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் நடுநிலையுடன் செயற்படுகின்றது. மற்றைய தரப்பு, பிரபாகரனின் தமிழீழம் என்ற இனவாதக் கருத்தினைக் கொண்டு செயற்படுகின்றது. விக்னேஸ்வரனின் கருத்தானது, இரண்டாந்தரப்பினரை மாத்திரமே திருப்திப்படுத்தும். விக்னேஸ்வரனுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கட்சி என்ற வகையில் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்”   என்றார். 

0 commentaires :

Post a Comment