9/27/2016

பேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீணாக்காத நல்ல மனிதர் * .சி.மௌனகுரு

நம்பிக்கைத் துரோகம் மலிந்த இக்காலச் சூழலில் மனிதர்மீது வைக்கும் நம்பிக்கை வீணல்ல என்று எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அமைதியான மனிதரை வாழ்த்துவதிலும்,அவர் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதிலும் நான் பெரு மகிழ்வெய்துகிறேன்


கருணை யோகன் என்ற புனைபெயரில் 1960 களில் சின்ன இலக்கியக் கூட்டங்களில் பால்வடியும் முகத்துடன் கவிதை சொன்ன செ.யோகராசா, பேராசிரியர் யோகராசா என்ற பெயரில் இன்று இலக்கிய ஆய்வரங்குகளில் முதிர்ந்த முகத்துடன் கலந்து கொள்கிறார்.
அவர் இல்லாமல் கிழக்கில் இலக்கியக் கூட்டங்களில்லை,அவர் முன்னுரை அவர் முன்னுரை இல்லாமல் புனைகதை நூல்கள் இல்லை என்ற ஒரு நிலையை இன்று அவர் உருவாக்கியுள்ளார்
1960 களில் கருணையோகன் 2000 நடுப்பகுதிகளில் பேராசிரியர்
இந்த வளர்ச்சிக்குப் பின்னனால் ஒரு கடும் உழைப்பும் வரலாறும் உள்ளது
அக்கடும் உழைப்பை நாம் இன்று கௌரவிக்கிறோம்
நண்பர் யோகராசாவை நான் அறிந்தது 1970 களில்.கொழும்புப்பலகலைக் கழகத்தில்
என் துணைவியார் சித்திரலேகாவின் ஒருசாலை மாணாக்கர் அவர்.
அமைதியும்,பரந்த வாசிப்புத் திறனும் கொண்டவர் என்று அவரை எனக்கு சித்திரா அறிமுகம் செய்துள்ளார்
இருவரும் பேராசிரியர் கைலாசபதியின் விருப்பத்திற்குரிய மாணவர்கள்.
ஆட்களின் குணாதிசயங்கள் பற்றி கிண்டலாக நெற்றியடிக் கருத்துக் கூறுவது கைலாசபதியின் குணாம்சங்களில் ஒன்று
யோகராசா பற்றி ஒரு நாள் கைலாசபதி பின் வருமாறு கூறினார்
“எங்காவது ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களை அழைந்தபடி,அவற்றைத் தட்டிப்பார்த்தபடி மசிந்துகொண்டு ஒரு ஆள் நிற்கும் அவர்தான் யோகராசா
இன்றுவரை யோகராசா ஒரு புத்தகக் காதலர்தான்
.புதிய நூல்களை அறிந்து கொள்வதும்,தேடிச்செல்வதுமான அவரது இயல்பு
இந்த இயல்பு அவர் ஓய்வு பெற்ற பின்னும் மாறவில்லை
சில குணாதிசயங்கள் உடன் பிறந்தவை
கைலாசபதியின் மாணவராயிருந்த போதும் அன்றைய முற்போக்கு இலக்கிய முகாமுக்குள் அவர் சென்றுவிடவில்லை
இற்றைவரை கவனமாக அதனைப் பேணிவருகிறார்
பேராசிரியர் யோகராசாவின் வாழ்வு மிகச்சுவையானது.
யாழ்ப்பாணத்தில் கரணவாய் எனும் பாரம்பரிய சிற்றூர் ஒன்றில் பிறந்த இவர், கொழும்புப் பலகலைக் கழகத்தில் தன்பட்டப் படிப்பை முடித்தபின்னர். மகோவில் அஞ்சலகம் ஒன்றில் தபால் அதிபராகக் கடமைபுரிகிறார்
யாழ்ப்பாணம் இருந்து நான் குடும்பத்துடன் மட்டக்களப்புக்கு ரெயினில் வரும் காலங்களில் (1975) மாகோவில் இறங்கி அவருடன் நின்று வருவது வழமை
மாகோ அவரால் எனக்கு அறிமுகமானது
பின்னர் அவர் ஆசிரியராக மலைநாட்டில் கற்பித்துக்கொண்டு இருந்தார்
நாம் யாழ்ப்பாணப் ப்லகலைக் கழகத்தில் கற்பித்த காலங்களில் அங்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கீழ் முதுகலைமானி மாணவராக இருந்தார்
இதனால் 1970 களின் பிற்பகுதியிலிருந்து அவருடனான தொடர்பு தொடர்ச்சியாக இருந்தது
1991ல்; நான் கிழக்குப் பலகலைக் கழகம் வந்தேன். 1992 இல் என்மீது கலைப்பிடாதிபதி பொறுப்புச் சுமத்தப்பட்டது
.கலைப்பீடம் ஆரம்பிக்கப்பட்டபோது அதனை நடத்த சிரேஸ்ட விரிவுரையாளர்கள் இல்லை.பாடத்திட்டங்கள் போட வேண்டிய நிலை விரிவுரையாளர் பற்றாக்குறை .நாட்டு நிலை காரணமாக கிழக்குக்கு வரப் பலர் த்யக்கம் காட்டினர்.
கிழக்கிலே அதற்கானா ஆட்பலமும் இருக்கவில்லை
இந்நிலையில் என் வேண்டுகோளை ஏற்றுத் துணிந்துவந்தனர் பலர்
அதில் அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியிருந்ததாயினும் எனது வேண்டுக்கோளும் இருந்தது
அவர்கள் மீது நான் வைத்த எனது நம்பிக்கையும் இருந்தது
இதனால் .வடக்கிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறேன் என்ற அனாமதேயக்கடிதங்களையும் நான் எதிர் நோக்க வந்தது
அனைவரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தோம்.
வசதியின்மை,
மாலை ஆறுமணிக்குள் ஊரடங்கும் சூழல்.
இராணுவக் கெடுபிடி
மின்சாரத் தடைகள்
தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசல்
இன்னும் பல உள்ளூர்க் கெடுபிடிகள்.
இத்தனைக்கும் மத்தியில் என் அருகிலிருந்து பணிபுரிந்தனர் இவர்கள்
அனைத்துக்கும் அருகிலிருந்து தோள் கொடுத்தவர் நண்பர் யோகராசா
மட்டக்களப்புக்கு வந்த யோகராசா என் வீட்டில்தான் தங்கினார். அவர் குடும்பம் இங்கு வரும்வரைஎமது வீட்டிலேதான் அவருக்குச் சாப்பாடு
.ஆறு மணிக்கு ஊரடங்கிவிடுமாதலால் வீட்டில் அதிக நேரம் இருக்கவும் உரையாடவும் அதிக வாய்ப்புகள் கிடைத்தன
அவரோடு நெருங்கவும் உரையாடவும்,அவர் குணாதிசயங்களை அறியவும் எனக்கு இது ஓர் சந்தர்ப்பமாயிற்று.
நான் இருந்த 9,கொலட் லேன் மிக முக்கியமான ஒரு இடம் அங்குதான் எனது அரங்க ஆய்வுகூடம் 2010 இலிருந்து இயங்கி வருகிறது
யாழ்ப்பானத்திலிருந்து கிழக்குப் பல்கலைக் கழகக் கலைப்பீடத்துக்குத் தெரிவாகிவந்த பல ஆண் விரிவுரையாளர்களும் பெண் விரிவுரையாளர்களும் முதலில் வந்து கால் வைக்கும் தளப் பிரதேசம் 9.கொலட் லேனில் அமைந்திருந்த எமது இல்லமே அதில் கால் பதித்து சிறிது காலம் இருந்த பின்னர் .அங்கிருந்துகொண்டுதான் பலர் வீடுதேடி பின் சென்றனர்.புது வாழ்வு கண்டனர்.
இராசியான வீடு என்பர் ப்லர்
.இதனைப் பலர் அறியார்
யோகராசா வரும்போது நானும்,என் மாமனாரும் மாமியுமே அவ்வீட்டில் இருந்தோம்.
முன் அறையை யோகராசாவுக்குக் கொடுத்தோம்
மாமனார் பி.வீ. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர்.1930 களில் இங்கு வந்து மட்டக்களப்பு மண்ணின் மைந்தனகவே மாறிவிட்டவர். மட்டக்கலப்புக் கலை இலக்கிய முயற்சிகளில் 1940 தொடக்கம் தீவிரமாக ஈடுபட்டவர்.பல தமிழ் அரிஞர்களோடு நெரடித் தொடர்புடையவர்
மட்டக்களப்பு பற்றி தேர்ந்த ஞானம் மிக்கவர்
.யோகராசாவும் வடமராட்சியைச் சேர்ந்தவர்.அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை நான் கேட்பேன்.யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை அவர்கள் கதைக்குள் வரும்
வயதுபோன,என் மாமனாருக்கு யோகரசா பெரும் பேச்சுத்துணையுமானார்.
எனக்கும் பேச்சுத் துணையானார்
.மட்டக்களப்பு பற்றிய பல தகவல்களை ஆரம்பகாலத்தில் யோகராசாவுக்கு வழங்கியர்கள் நானும் என் மாமனாரும் என்றே நான் நினைக்கிறேன்
யோகராசாவை நான் வித்துவான் கமலநாதனுக்கும்,சிவசுப்பிரமணியம் மாஸ்டருக்கும் இன்னும் சிலருக்கும் அறிமுகமும் செய்துவைத்தேன்
எங்கள் வீட்டுக்கு இவர்கள் இருவரும் அடிக்கடி வருபவர்கள்
ஏற்கனவே தேடல் எண்னம் கொண்ட யோகராசாவின் அடிமனதில் மட்டக்களப்பு பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணம் எழ எம் வீடும் தொடர்பும் ஒரு காரணமாயிற்று
ஒரு நாள் என்னை யோகராசா என்னைத் தான் திருமணம் செய்த மண்ராசிக்கு அழைத்துச் சென்றார்.மலை நாட்டின் கடும் குளிரினுள் அதிகாலைப் பொழுதில் நடுங்கிய படி மண்ராசியில் காலடி எடுத்துவைத்தமை ஞாபகம் வருகிறது.யொகரசாவின் மனைவி,மைத்துனிமார் அவர்கள் பிள்ளைகள் அறிமுகமானார்கள் குரு மாமா என்ற அன்பான அழைப்போடு என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள்
யோகராசாவின் மனைவி என்னத் தன் சொந்தச் சகோதரன் போல வரித்துக்கொண்டார் அக்குடும்ப உறவு இற்றை வரை நிலைக்கிறது
1992-1996 வரை கிழக்குப்பலகலைக் கழக கலைப்பிடத்தின் வரலாறு சுவையானதுடன்,சாகஸங்களும் நிறைந்தது
பாடத் திட்டமில்லை, நூல் நிலையம் இல்லை,வகுப்பறைகள் இல்லை,போதிய தளபாடங்கள் இல்லை,கட்டிடங்கள் இல்லை,வாகனங்கள்
இல்லை,
இல்லை,இல்லை ஒன்றுமேயில்லை
அன்று உதயா மோட்டோர்ஸ் என அழைக்கப்பட்ட 50 நியூ ரோட்டில் கல்முனை வீதியில்இருந்தஒரு கராஜில்தான் கலைப்பீடம் இருந்தது.
பல்கலைக் கழகம் என்பதைவிட உதயா மோட்டோர்ஸ் என்றால் அனைவருக்கும் தெரியும்
மண்தோண்டி,பாத்திபிடித்து ,வேலியமைத்துத் த்ண்ணீர் ஊற்றி கலைபீடம் எனும் சிறு செடியை நாங்கள் வளர்த்த காலங்கள் அவை
உடம்பிலே முட்காயங்கள் படிய இரத்தம் வழிய பாதை வெட்டி வழி சமைத்த காலங்கள் அவை
துணை நின்றோர் பலர். .முக்கியமானவர்களுள் ஒருவர் யோகராசா
எனக்கு யோகராச வலதுகரமாக இருந்தார்
பாடத்தயாரிப்பு விரிவுரைகள்,மாணவர்பிரச்சனைகளைத் தீர்த்தல்,வெளியோரைப் பல்கலைக் கழ்கத்துடன் இணைத்தல்,இலக்கியக் கூட்ட ஒழுங்குகள் செய்தல் என்பனவற்றில் யோகராசாவின் அளப்பரிய பங்கு பற்றி விரிவாக எழுத வேண்டும்.அவை பலருக்குத் தெரியாது
வெறும் கை கொண்டு முளம் போட்டோம்
கலைப்பீடாதிபதி என்ற வகையில் காலையில் எழும்போதே பிரச்சனைகள் காத்திருக்கும்.ஆலோசனை சொல்பவராக,உடன் வருபவராக,களத்தில் என்னோடு நிற்பவராக யோகராசா நிற்பார்
அவர் அருகிருப்பு ஒரு பலம் தரும்
இரைந்து பேசத் தெரியாத அவர் இரைந்து பேசும் மாணவர்களை,விரிவுரையாளர்களை பார்த்தபடி இருப்பார்.ஒன்றும் பேசார்.இடைக்கிடை மெதுவாகக் கருத்துரைப்பார்
அவை எனக்குப் பிரசனைகளைத் தீர்க்க உதவும்
பின்னர் சாவகாசமாக உரையாடுகையில் என் பேச்சுகள் செயல்கள் பற்றி தம் அபிப்பிராயங்களைத் தயக்கமில்லாது கூறுவார்.என்னில் அப்படியொரு நம்பிக்கை அவருக்க.
எனக்கு ஒரு மதியூக மந்திரிபோல அவர் இருந்தார். நான் அவ்ரோடு மன்னனாகச் செயற்படவில்லை
பிரச்சனையைத் தீர்க்கும் வழிகள் பல.அவற்றில் ஒன்று அமைதி காத்தல்
யோகராசாவின் வழி அமைதி காத்தல் வழியாகும்
அவர் அமைதி காத்தாலும் அவர் மனம் கொதிக்கும் மனம் என்பது எனக்குத் தெரியும்
ஓரிரு வார்த்தைகளில் அது புலப்படும்.அல்லது கிண்டலாக வெளிப்ப்டும்
கலைப் பீடாதிபதி வெளியூர் செல்கையில் தனக்குப் பதிலாக ஒருவரை நியமித்துச் செல்ல வேண்டும்.
நான் யோகராசசாவை நியமித்துச் செல்வேன்
அது ஒன்றுதான் அவருக்குப் பிடிக்காதது.மிகக் கஸ்டப்பட்டு என் தெண்டிப்புக்காக ஏற்றுக் கொள்வார்
அப்போது திருமலையில் தமிழ் அறிஞர் கனகசுந்தரம் பிள்ளை பற்றிய ஒரு விழாவுக்கு கலைப் பீடாதிபதின் என்ற வகையில் என்னை அழைத்திருந்தனர்.
நான் எனது பிரதிநிதியாக யோகராசாவை அனுப்பினேன்கிழக்கு மாகாண அறிஞர் பற்றிய அவரது தேடல் அன்றிலிருந்து ஆரம்பித்தது என எண்னுகிறேன்
இதனை அவரே என்னிடம் சொல்லியுள்ளார்.
இன்று அத்தேடல் விரிந்து பரந்து மட்டக்களப்பின் இலக்கியங்கள்,பண்பாடுகள் என்பனபற்றி துல்லியமான் தகவல்களை ஆதாரங்களோடு தரும் ஒரு ஆய்வாளராக அவரை மாற்றியுள்ளது
பின்னால் நானும் யோகராசாவும் இணைந்து பல வேலைகள் செய்தோம்
நாடகப்பட்டறைகள்,இலக்கியக் கூட்டங்கள் ஆராய்ச்சி மாநாடுகள்,கண்காட்சிகள்,கருத்தரங்குகள்,உலக நாடகதின விழாக்கள் என அவை பலவகைப்படும்
இத்தனைக்கும் நேரடி சாட்சி அவர்
1992,1993,1994,ஆகிய ஆண்டுகளில் நாம் தயாரித்த கண்னகி குளுர்த்தி ஆற்றுகை,புதியதொருவீடு நாடகம்,கொழும்பில் நாம் ஆற்றுகை செய்த மட்டக்கள்ப்புப் பண்பாட்டறிமுகம் என்பனவற்றுக்கு பாலசுகுமாருடன் இணைந்து பக்கபலமாக நின்று ஊக்கமளித்தவர் யோகராசா
1999,2000,2001,2005 ஆகிய ஆண்டுகளில் நாம் தயாரித்த இன்னிய அணி,இராவணேசன்,கிழக்கிசை,ஆகியவற்றிற்கு பாலசுகுமாருடனும் ஜெயசங்கருடனும் இனஈந்து எனக்கு உற்சாகம் தந்தவர்களுள் முக்கியமனவர் யோகராசா
என் செயற்பாடுகளை ரசித்தும் நட்பு பூர்வமாக என்னை விமர்சித்தும் என்றும் எனக்கு ஊக்கம் தரும் ஒரு பலம் அவர்
நான் ஓய்வு பெற்ற பின்னர் அவரிடம்தான் நுண்கலைத் துறை ஒப்ப்டைக்கப் பட்டது.
அடிக்கடிவந்து ஆலோசனைகள் பெற்றுச் செல்வார்.தன்னால் இயன்றவரை அத்துறையைச் சிலகாலம் ஒழுங்குடன் நடத்தினார்.என்னை அடிக்கடி அழைப்பார்.மாணவர்களூடன் ஊடாட விடுவார்.ஓய்வு பெறாத உணர்வை எனக்குள் என்றும் வைத்துக்கொள்ள வைத்தவர் அவர்
பின்னால் என்னைப் பற்றி ஒரு சிறு நூலையும் என்னைப்பற்றிய நாடகம் தவிர்ந்த பேட்டியினையும் எடுத்து நூலாக வெளியிட்டு என்னை கௌரவப் படுத்தினார்
அவரது ஆய்வுகள் பல நூலாக வெளிவந்துள்ளன.அவர் ஒர் தகவல் களஞ்சியம். எமக்கு எதாவது தகவல்கள் வைப்படின் அவரிடமிருந்து பெறலாம்
தகவல்களை வைத்து கோட்பாடாக மாற்றும் ரச வாதத்தை அவர் செய்திருப்பாராயின் அவர் ஆய்வுகள் இன்னும்ஆழமாகியிருக்கும்.
திட்டவட்டமான தீர்மானம் கூறுபவராக அவர் இருக்கவில்லை
.தவல்களே இல்லாமல் பம்மாத்துப்பண்ணும் தமிழ் பண்பாட்டுச் சூழலில் தகவல்களைத் தேடித் தொகுத்துத் தந்த பேராசிரியர் யோகராசா மிகப் பெரும் மதிப்புகுரியவராகின்றார்
நம்ம்பிக்கையோடு நான் அவரை இங்கு சிபார்சு செய்தேன்,நம்பிக்கையோடு நான் அவரை அழைத்தேன்.நம்பிக்கையோடு அவருடன் இணைந்து செயற்பட்டேன்
அந்த நம்பிக்கையை அவர் என்றும் வீணாக்கியது கிடையாது.
இதற்கான பல உதாரணங்களை நான் தர முடியும்
1970 களிலிருந்து அவரை அவதானித்துவந்துள்ளேன்.எந்த நிலையிலும் வாசிப்பைக்கைவிடாத புத்தகங்களைத் தேடிப்போகின்ற அவர் குணாம்சம் எனக்கு மிகப்பிடித்திருந்தது
அறிவுத் தேட்டம் மிகுந்த அவருக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இடம் கிடைத்தால் நன்றாயிருக்குமே என அன்று நான் எண்ணியதுண்டு
அவ்வெண்ணம் இங்கு சித்தித்தது.
தோற்றம் சிறிது.உரத்துப் பேசார். இவர் என்ன செய்வார் என என்னிணோர் பலர்.
ஆனால் நான் அவர் திறமையை நம்பினேன்.அத் திறமையில் பாரிய நம்பிக்கை வைத்திருந்தேன்
கட்டுரைகள் எழுதினார்.நூல்கள் எழுதினார்,நூல்கள் பதிப்பித்தார்.ஆராய்வு மாநாடுகளில் பங்கு கொண்டார்.இலக்கியக் கூட்டங்களில் பிரதான பேச்சாளரானார். சிரேஸ்டவிரிவுரையாளரானார்.தன் ஆராய்ச்சிகளை முன் வைத்து பேராசிரியர் தகுதியினையும் பெற்றுக் கொண்டார்.தமிழ்த்துறைத் தலைவரும் ஆனார்
அவர் திறமையில் அறிவில் நான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை
நேர்மையும் உண்மையும் நிறைந்த அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து மிக முக்கிய பொறுப்புக்களை அவருக்கு அளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவற்றை ஒருபோதும் அவர் துஸ்பிரயோகம் செய்ததில்லை.
இலக்கியங்களை வாசிக்கும் அவர் மனித மனங்களைப்பற்றி மிக நன்றாக அறிந்து வைத்திருந்தார்
என்னை நன்றாகப் புரிந்துகொண்ட மிகச் சிலர்களுள் முக்கியமானவர் யோகராசா.
புரிந்து கொண்டவர்களுடந்தான் மனம் விட்டுப் பேசலாம்
நான் மனம் விட்டுப் பேசும் சிலருள் அவரும் ஒருவர்
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்
நம்பிக்கைத் துரோகம் மலிந்த இக்காலச் சூழலில் மனிதர்மீது வைக்கும் நம்பிக்கை வீணல்ல என்று எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அமைதியான மனிதரை வாழ்த்துவதிலும்,அவர் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதிலும் நான் பெரு மகிழ்வெய்துகிறேன்
அவரைப் பிற்காலத்தில் இந்நிலைக்குக் கொண்டுவந்ததில் அவர் மனிவிக்கு மிகப் பெரும் பங்குண்டு.அவர் மனைவி திலகிக்கு எனது வாழ்த்துக்கள்.
சமகால உலகை அவருக்கு அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பவள் நல்ல வாசகியும் புத்தி சாலியுமான அவரது மகள் சுவஸ்திகா
அவளுக்கும் எனது வாழ்த்துக்கள்

0 commentaires :

Post a Comment