9/05/2016

கிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

Uthumalebbe - 011கிழக்கு மாகாண சபையில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவும், மாகாண சபையின் செயற்பாடுகளில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறவில்லை எனவும் முதலமைச்சர் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபக்கம் – தங்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளையும் உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கிழக்கு மாகாண சபையில் எல்லா கட்சிகளையும் எல்லா சமூகங்களையும் சமமான முறையில் நடத்துவதாகவும், நமது நாட்டில் அமைந்துள்ள மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மாத்திரம் சிறந்ததாக அமைந்துள்ளதாகவும் அண்மையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்களை அறிந்த போது மிகவும் ஆச்சரியம் அடைந்தோம்.
கிழக்கு மாகாண சபையில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவும், கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறவில்லை என ஒருபக்கம் கூறிக் கொண்டு மறுபக்கம் முதலமைச்சர் தங்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், அபிவிருத்திப்பணிகளில் சமநிலை இல்லாத நிலையும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் தொடர்கின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் நிம்மதியாக நிரந்தர இன உறவுடன் வாழ்வதற்கு வழி அமைக்க வேண்டுமென, வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உச்ச நிலையில் இருந்த போது, தனது உயிரையும் துச்சமெனக் கருதி தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கிழக்கு தனியாக பிரிய வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு முதற் தடவையாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக எஸ். சந்திரகாந்தன் தெரிவு செய்யப்படுவதற்கு, தேசிய காங்கிரஸ் வெளிப்படையாகவே பூரண ஆதரவு வழங்கியது. மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற கோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக எஸ். சந்திரகாந்தன் வருவதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களும் ஆதரவு வழங்கினார்கள்.
இதன் மூலம் கொடூர யுத்தத்தினால் சமூகங்களுக்கிடையில் நிலவிய அச்சம் நீங்கி, உறவுகள் வளர்க்கப்பட்டன. மேலும், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதே போன்று 2012 ஆம் ஆண்டு, இரண்டாவது  முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் தேர்தலின் பின்னர், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் பதவி ஏற்ற போது, தமிழ் மக்கள் தங்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என வேதனைப்படவில்லை.
அதேபோல், 2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமட்,  எங்களிடம் வந்து – தான் முதலைமச்சராக வருவதற்கு சத்தியக் கடதாசி வழங்குமாறு கேட்டார். இதன்போது, முதலமைச்சர் பதவியில் மாத்திரம்தான் மாற்றம் ஏற்படும் எனவும், ஏனைய அமைச்சர்கள் தொடர்ந்தும் அவர்களின் பதவிகளில் இருப்பார்கள் எனவும் வாக்குறுதி வழங்கினார்.
இதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்குதவற்கு சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவினால், கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட், கட்சிகளுக்கிடையில் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி அவருக்கு ஆதரவு வழங்கிய எங்களையே கழுத்தறுப்பு செய்தார். தான் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்குத் துரோகம் இழைத்தார். இதனால் அவருக்கு ஆதரவு வழங்கிய கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்கள் ஆச்சரியமடைந்தனர். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயாக்காவை தனியாக அழைத்து அமைச்சுப் பதவியை பாரமெடுக்குமாறு அவர்கள் கோரிய போதும், உதுமாலெப்பைக்கு அமைச்சுப் பதவி வழங்காத நிலையில், தான் அமைச்சுப் பதவியை பாரம் எடுக்கமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளுக்காகவும் , நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவும் கொலைகள் கூட நடந்துள்ள எமது நாட்டில், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த விமல வீர திஸாநாயாக்க, முஸ்லிம் ஒருவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும் எனக்கூறி, தனக்குக் கிடைத்த  அமைச்சுப் பதவியை ஏற்க மறுத்தார். இந்த சம்பவம் அரசியல் வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும். இருந்தபோதும், “நீங்கள் கல்வி அமைச்சை பொறுப்பெடுங்கள்” என்று அப்போது விமலவீர திஸாநாயக்கவிடம் நான் அவரிடம் சொன்னேன்எனக் கூறினேன்.  அதற்கு “ஹாபிஸ் நஸீரின் இனம் என்று நீங்கள் என்னை நினைத்து விட்டீர்களா|” என்று விமலவீர என்னிடம் கேட்டார். இச் சம்பவத்தினால் நமது சமூகமே தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தனைச் சந்தித்த வேளையில், அவர் ஒரு முக்கியமான விடயத்தினை தெரிவித்தார். அரசியல் கட்சிகளுக்கிடையில் செய்து கொள்ளப்படும் கௌரவமான ஒப்பந்தங்கள் எழுத்தில் எழுதத் தேவையில்லை. வாயினால் அளிக்கப்படும் கௌரவான ஒப்பந்தங்கள் – கௌரவமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அதனை தலைவர் தந்தை செல்வநாயகம் செய்து காட்டியதாகவும் எங்களிடம் கூறினார்.
எமது பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூட அரசியல் கட்சிகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு கௌரவம் கொடுத்தே செயல்பட்டார். தலைவர் அஷ்ரபினால்  உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் துரோக செயல்பாடுகளினால், ஏனைய சமூகத்தின் அரசியல் தலைவர்களும் எங்களை விமர்சனம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

நன்றி *.புதிது

0 commentaires :

Post a Comment