8/15/2016

ரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா? ஒரு விவாதத்துக்கான முன் குறிப்புக்கள்-எழுகதிரோன்

Résultat d’images pour school srilankaa




















ரியூசன் சென்டர்கள் தடை செய்ய பட வேண்டுமா? ஒரு விவாதத்துக்கான முன் குறிப்புக்கள்


கல்வி என்பது வியாபாரமாகிவிட்ட இந்த உலகில் ரியூசன் முறை பலருக்கு ஒரு உழைப்பு ஆக தெரியலாம்..ஆனால் அது மறைமுகமானதொரு கொள்ளைதான். .

நாட்டில் அதிகரித்து வரும் இந்த ரியூசன் முறையின் அதீத வளர்ச்சி காரணமாக பல்வேறுபட்ட பாதிப்புக்களை நாடு எதிர்கொண்டு வருகின்றது.இந்த  நிலையங்கள் உருவாக்கும் போட்டிகள் காரணமாக இன்று விரும்பியோ விரும்பாமலோ அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களுக்கும் ரியூசனுக்கு செல்வது ஒரு சமூக கடமையாக மாறியுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு பெரும் சுமைகள் ஏற்றப்படுகின்றன.பாடசாலைகள் பெயரளவில் மட்டும் இயங்கினால் போதும் என்னும் நிலை உருவாகியுள்ளது.பாடசாலைகளின் பொறுப்புக்கள் இலகுவாக தட்டிக்கழிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலைமைகளை பயன்படுத்தி ரியூசன் நிலையங்கள் கருப்புப்பண மையங்களாக உருவாகி வருகின்றன.

மறுபுறம்  பரீட்சைகளில் மனப்பாடம் மூலம் மீள ஒப்புவிக்கப்படும் பதில்கள் மட்டுமே மாணவர்களின் திறைமைகளுக்கான அளவுகோல்களாக மாற்றப்பட்டு வருகின்றது. விளையாட்டு,பொழுதுபோக்கு,சமூக-இயற்கை சார்ந்த உறவுகள்,கலைகலாசார மரபுகள் பண்பாடுகள் போன்றவற்றின் முக்கியத்துவங்கள் மாணவர்களின் வாழ்விலிருந்து மறைந்து வருகின்றன.


இலங்கையில் அரசு தான் பாடசாலைகளை நடத்துகின்றது. கல்வியமைச்சு கோடிக்கணக்கான தொகைகளை பாடசாலைகளுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும்   செலவு செய்கின்றது.பல்கலைக்கழக மாணவர்களின் உணவு உறைவிட செலவுகளுக்காகக்கூட புலமைபரிசு உதவி தொகைகளை வழங்குகின்றதுஅரசு.
இத்தகைய நிலையில் மக்களின் வரிப்பணத்தில் கற்ற கல்வியை தாம் பட்டம் பெற்று வெளியேறியவுடன்  எமது கல்வி சமூகம் தாம் பெற்ற அறிவை வியாபாரமாக்குவது என்ன நியாயம்?

ஏழைமாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ரியூசன் வகுப்புகளுக்கு பணம் காட்டுகின்றார் என்பதை நாம் உணர வேண்டும். ரியூசன் இல்லாவிடில் படிக்க முடியாது என்கின்ற நிலைமை ஏன்? பாலர் பாடசாலை செல்லும் சிறுசுகள் கூட அதிகாலையில் எழுப்பப்பட்டு ரியூசன் வகுப்புகளுக்குள் கொண்டு வீசப்படுகின்ற அவலம் எமது நாட்டில் ஒரு கெளரவமாக வளர்ந்திருக்கின்றது. ஐந்தாம் தர புலமை பரிசு போட்டியில் சித்தி பெறுவது என்பது ஒன்றே ஒரு மாணவனின் குடும்பத்துக்கு உரிய அடிப்படை கெளரவமாக நிறுவப்பட்டுள்ளது. இவையனைத்தும் இந்த ரியூசன் ஆசிரியர்களின் வியாபார தந்திரத்திலிருந்து கட்டமைப்பப்படும் மேட்டுக்குடி சிந்தனை சார்ந்த உத்திகளாகும் ஆகும். பாடசாலைகளில் சரியாக கற்பிக்க மறுத்து, தாம் பெறும் சம்பளங்களுக்கு துரோகம் செய்து அதே ஆசிரியர்கள் அதே மாணவர்களுக்கு பின்னேர வகுப்புகளில் இந்த கல்வியை பணத்துக்கு விற்கின்ற செயல்பாடுகள் கொள்ளை மட்டுமல்ல சமூகவிரோத செயல்பாடும் ஆகும்.


இந்த ரியூசன் கல்விமுறை உருவாக்கியுள்ள "முதலாவது ஆள் சித்தி"முறைமை எவ்வளவு தூரம் மாணவர்களை அலைக்கழிச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் பொறாமை போட்டிக்கும்  வறுமைநிலைக்கும் ஆளாக்குகின்றது என்பதையிட்டு பாராளுமன்றில் யாரும் உரையாற்றுவதில்லை. மேலைநாடுகளில் எல்லாம் இந்த முதலாம் ஆள்,இரண்டாம்ஆள் தெரிவு முறைமைகள் எல்லாம்  ஏனைய மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றது என்பதானால் கைவிடப்பட்டு பல தசாப்தங்கள் கடந்து விட்டன.  

பாடசாலையில் நேர்த்தியான முறையில் கற்பித்தல் செயல்பாடுகள் இடம்பெற்றால் இந்த ரியூசன் முறைக்கு அவசியம் இல்லாது போய்விடும் ஆனால் இதையிட்டு எமது அரசியல் வாதிகள் யாரும் கவலைகொள்வதில்லை.   பாடசாலைக்கல்வியை உரியமுறையில் முழுமையானதாக மாற்றியமைத்து ஆசிரியர்களில் செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டும் என எந்த சமூக அமைப்புக்களும் குரல்கொடுப்பதில்லை.  பாடசாலையிலும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கின்ற நிலைமைதான்  இந்த தனியார் ரியூசன் நிலையங்களை நாடி மாணவர்கள் செல்லும் நிலைக்கு வழிவகுக்கின்றது. இதையிட்டு எந்த பாடசாலை நிர்வாகமும் வெட்கப்படுவதில்லை.மாறாக  ரியூசன் நிலையங்களில் விலைகொடுத்து படித்து பெறுகின்ற சித்திகளுக்கு   உரிமைகோரி வெற்று கூடாரங்களாய் இருக்கின்ற பாடசாலைகள் மார்புதட்டுகின்ற அவலம் வேறு நடக்கின்றது.


அடுத்ததாக இந்த ரியூசன் நிலையங்கள் கல்வியை சந்தைப்படுத்தும் பெரும் வியாபார ஸ்தாபனங்களாக மாறி வருகின்றன.இவர்கள் தமது லட்ஷக்கணக்கான ரூபாய்கள் வருமானங்களுக்கு வருமான வரி கட்டுவது கூட இல்லை. யார் வேண்டுமானாலும் எப்படியும் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கம் கண்களை மூடி கொண்டிருப்பதால்தான் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை ஏற்ற வேண்டியுள்ளது.எந்தவிதமான பதிவுகளுமின்றி வருமானங்களை வரிகட்டாமல் சம்பாதிக்கும் பணம் கருப்பு பணமாகும்.இத்தகைய கருப்புப்பண முதலைகள் சட்டத்தின் முன் கடுமையான குற்றவாளிகளாகும்.

அதேவேளை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தரும் தன்னார்வ இளைஞர் குழுக்கள் இன்றும் செயல்படுகின்றன. மட்டக்களப்பின் சில  கிராமங்களில் இன்றுவரை படித்த இளைஞர்கள் தமது சக கிராமத்து  மாணவர்களின் நலன் கருதி இலவச மாலை நேர வகுப்புக்களை இன்றுவரை நடத்திவருகின்றார்கள்.குறிப்பாக கழுதாவளையில் மட்டும்  மூன்று (eds,erc,esda) இளைஞர் குழுக்கள் பல நூறு மாணவர்களுக்கு இலவச பாடங்களை நடத்தி வருகின்றனர்.இவர்கள் வேலையற்ற வர்களாக இருந்தும் கூட  அதனை ஒரு சமூக சேவையாக செய்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாதபோது இந்த ரியூசன்களுக்கு அவசியமிருந்தது.ஆனால் இப்போது அனைத்து பாடங்களுக்கும் ரியூசன் செல்லுவது கட்டாயமாகிவிட்ட
நிலைமை கொடுமையானது.அதுவும் பாலர்பாடசாலை தொடங்கி பல்கலைக்கழக படிப்புவரை இது நிகழுவது மிகவும் வேதனையானது.
"காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்றுதான் சொன்னான் பாரதி. நாமோ  காலையும் அதன் பின்பும் மாலை முழுவதிலும் ரியூசன் ரியூசன் என்று, எமது சிறார்களின் நேரங்களை எமது கெளரவத்துக்குள் புதைத்து நிற்கின்றோம்.  அதனை வசதியாக பயன்படுத்தி ரியூசன் நிலைய முதலாளிகள் பெரும் பண முதலைகளாக மாறிவருகின்றார்கள்.


எழுகதிரோன்

0 commentaires :

Post a Comment