இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பகுதியல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய விசேஷ நீதிமன்றங்கள் அமைக்கப்போவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை எமது நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட எந்தவொரு தரப்பிற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி சிறிசேன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, போர் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள கட்டமைப்பிற்குள் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இவ்வாறான யோசனையொன்று ஜெனிவா மனித உறிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசியல் சாசனத்திற்கு அமைய அதனை மேற்கொள்ள முடியாதென்று அரசாங்கம் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.
அதன் பின்னர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணை கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு ஜெனிவா மனித உரிமை பேரவையினால் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment