7/05/2016

மாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர் நீதிமன்றம் -

தமிழ்ப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதி 2010ஆம் ஆண்டில் வெளியான 'மாதொருபாகன்' என்கிற நாவல் திருச்செங்கோட்டின் பிரபல கோவில் திருவிழாவையும், ஹிந்து மதக்கடவுளரையும், இந்து பக்தர்களையும் இழிவு செய்வதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.எழுத்தாளர் பெருமாள் முருகன்
'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடைவிதிக்க வேண்டும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த எஸ்.கே. கவுல், புஷ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, 'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடை விதிக்க முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் பெருமாள் முருகனிடம் எழுதி வாங்கிய ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறினர்.
பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

எழுத்தாளர்களுக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பளிக்கும் விதிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்து அரசு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
2010ஆம் ஆண்டில் மாதொரு பாகன் நாவல் வெளியிடப்பட்டது. திருசெங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவையும் குழந்தையில்லாத பெண்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் இந்து மதத்தையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவுபடுத்துவதாக பல்வேறு அமைப்புகள் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தலைமையில் 2015 ஜனவரி 12ஆம் தேதி ஒரு சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பெருமாள் முருகனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டது.
இதையடுத்து, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மரணமடைவதாக தனது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் அறிவித்தார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பெருமாள் முருகனும் அவரது மனைவியும் சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தனர்.

0 commentaires :

Post a Comment