7/09/2016

தொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து அடுத்த மாநாடு நோக்கிய பயணம் .....

1965 ஆம் ஆண்டு அமர்ர். வி.கே.வெள்ளையன் எனும் ஆளுமையினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் தன்பாதையில் பல மேடு பள்ளங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து கடந்த (2015) ஆண்டு தலவாக்கலை நகரில் தனது 'பொன்விழா' வை கொண்டாடியது..
2006 ம் ஆண்டு முதல் சங்கத்தின் தலைவராக அன்றைய மாகாண சபை உறுப்பினரும் இன்றைய அமைச்சருமான பழனி திகாம்பரம் துணிச்சலான தீர்மானங்களை எடுத்து வழிநடத்தி வருகின்றார்.
கடந்த பத்தாண்டுகளைக் கடந்து பார்க்கையில் இன்று 2016 ல் அமைச்சரவை அந்தஸ்துடனான அமைச்சர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், பத்துக்கு மேற்ப்ட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் (தற்சமயம் சபைகள் கலைக்கப்பட்டுள்ளது) என அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதுடன் , இதே காலப்பகுதியில் மலையகத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் ஒன்றிலும் இணைந்து பயணித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 'ஜனநாயக மக்கள் கூட்டணி' யிலும் (தொழிலாளர் தேசிய சங்கம் + மேலக (ஜனநாயக ) மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி ) 2011 ம் ஆண்டு 'மலையக கூட்டமைப்பிலும்' (தொழிலாளர் தேசிய சங்கம் + மலையக மக்கள் முன்னணி ) 2015 ஆம் ஆண்டு முதல் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' யிலும் ( தொழிலாளர் தேசிய சங்கம் - முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ) தொழிலாளர் தேசிய சங்கத்தின் வகிபாகம் முக்கியத்துவமிக்கது.
இத்தகைய வளர்ச்சிப்பாதையில் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் அதன் அரசியல் அங்கமான தொழிலாளர் தேசிய முன்னணியினதும் 'தேசிய மாநாடு' 2016 நவம்பரில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி பிரதேச மட்டத்தில் சங்கத்தினதும் முன்னணியினதும் செயற்குழு அங்கத்தவர் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன.
.

0 commentaires :

Post a Comment