6/03/2016

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்புத் திருமேனிகள், ஓவியங்கள் பிடிபட்டன

சென்னையில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த வீட்டில் மேலும் நடத்தப்பட்ட சோதனையில் சோழர் காலத்தைச் சேர்ந்த செப்புத் திருமேனிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கலைப் பொருட்கள் விற்கும் நிலையம் ஒன்றை நடத்திவரும் தீனதயாளன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக கற்சிலைகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, கடந்த 31ஆம் தேதியன்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வீட்டில் சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின், அங்கிருந்த 54 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன. அந்த வீட்டில் இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், அங்கு என்ன இருந்தன என்பது தெரியவில்லை.
தலைமறைவான தீனதயாளன்
இதையடுத்து, இது தொடர்பாக ஆஜராகி விளக்கமளிக்குமாறு தீனதயாளனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டின் இரண்டு அறைகளை உடைத்து சோதனையிட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
நேற்று அந்த அனுமதி கிடைத்ததையடுத்து, இன்று அந்த இரண்டு அறைகளையும் போலீஸார் உடைத்து சோதனையிட்டனர்.
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக சேதப்படுத்தப்பட்ட சிலைகள்
காலையில் துவங்கிய சோதனை மாலை வரை நடந்த நிலையில், பிற்பகலில் தொல்லியல் அறிஞர் நாகசாமி அந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாகசாமி, உடைத்துத் திறக்கப்பட்ட அறையில் பல சோழர் காலத்து செப்புத் திருமேனிகள் இருந்ததாகத் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காக பல சிலைகளின் அங்கங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
34 செப்புத் திருமேனிகள், 42 தஞ்சாவூர் ஓவியங்கள்
அந்த வீட்டில் இன்று நடந்த சோதனையில் 34 செப்புத் திருமேனிகளும், 42 தஞ்சாவூர் ஓவியங்களும், சில வேலைப்பாடு மிக்க பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு காவல் துறையின் ஐஜியான பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment