6/24/2016

'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது
அப்படி தாமதிப்பது ஸ்திரமின்மையை நீடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவு குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய தலைவர்களே இவ்வாறு கூறியுள்ளனர்.
தமது ஒன்றியத்தின் ஏனைய 27 நாடுகளும் அப்படியே தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூலஸ், ஐரோப்பிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டி ஆகியோருடன் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு குறித்து தாம் வருத்தமடைந்தாலும், பிரிட்டிஷ் மக்களின் முடிவை மதிப்பதாக கூறியுள்ளனர்.
பிரிட்டிஷ் மக்களின் முடிவை அமல்படுத்துவதை பிரிட்டன் முடிந்தவரை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், அது மிகவும் வேதனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும், தேவையற்ற ஸ்திரமின்மையை நீடிக்கச் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

0 commentaires :

Post a Comment