காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்குகளை எண்ணும்போது குளறுபடி நடந்திருப்பதாகவும் அங்கு மறுவாக்கு எண்ணிக்கையும், ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவும் நடத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.அந்தத் தொகுதியில் திருமாவளவன் 48,363 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகளையும் பெற்றனர்.
இது தொடர்பாக, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் திருமாவளவன், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
''தபால் வாக்குகளில் குளறுபடி''
தபால் வாக்குகளை எண்ணும்போது, வாக்காளர்களை அடையாளம் காண முடியாததால் 101 வாக்குகளை செல்லாத வாக்குகள் என தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும் அவர் முறையாக வாக்குகளை எண்ணியிருந்தால் தான் வெற்றிபெற்றிருப்பேன் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
அதேபோல, கலியாமலை கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இருந்து பெறப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் சரியாக இயங்கவில்லை என்றும், இருந்தபோதும் தேர்தல் அதிகாரி அதைக் கவனத்தில் கொள்ளவில்லையென்றும் திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஆகவே, தபால் வாக்குகள் உட்பட, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தையும் மறுபடியும் எண்ணவேண்டுமென்றும், கலியாமலை வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென்றும் திருமாவளவன் கோரியிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, சர்ச்சை ஏற்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் தேட வேண்டுமென்று கூறியுள்ளார்.
0 commentaires :
Post a Comment