5/10/2016

சூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மனநிலை விவாதம்-22

யுத்த அனர்த்தங்களையும், அதன் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களையும் பேசுபொருளாகக் கொண்ட இலக்கிய வெளிப்பாடுகளே எம்மிடையே மேலோங்கியிருந்தது. இன்று வாசிப்பு மனநிலைக்கு எடுத்துக்கொண்ட நூல்களில் அனோஜனின் சிறுகதை தொகுப்பின் உள்ளடக்கமானது தனிமனித உளவியலையும், தனிமனித முரண்பாட்டுப் பலவீனங்களையும் மையப்படுத்தி உரையாடும் வகைமையை கொண்டிருக்கிறது. யாழினியின் கவிதைத் தொகுப்பான ‘மரணமூறும் கனவுகள்’ பெண்நிலைவாத கருத்துநிலைகள் இன்றி சுயமன அழுத்தங்களின் வெளிப்பாட்டுப் பிரதியாகவே எனது வாசிப்பிற்கு புலப்பட்டது. எனவே இவ்இரு நூல்கள் தொடர்பாக நாம் தொடர்ந்து உரையாடுவோம். முதலில் அனோஜனின் ‘சதைகள் ‘ மீதான தனது வாசிப்பின் அனுபவத்தை தில்லைநேடேஸ் பகிர்ந்து கொள்வார் என அசுரா விவாதத்தை தொடக்கிவைத்தார்.


தனது இளம் பருவத்து மனநிலையோடு பேசுகிறார். ‘வேறயாக்கள்’என்ற அவரது முதலாவது கதையில் ஆரம்பகாலத்து எழுத்தாளர்களுக்குரிய பலவீனம் தெரிகிறது. இந்தக் கதையின் முடிவை வேறமாதிரி முடித்திருக்கலாம். சதைகள் கதையை பொறுத்த வரையில் இதில் வரும் விபரணங்கள் தேவையில்லாதது. சிறுகதைக்கு உகந்ததல்ல. விபரணங்கள் அடங்கிய பந்திகளை வெட்டி எறியலாம். எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளராக வரும் வாய்ப்புகள் உள்ளதை இவரது ஆராதனா என்ற கதை வெளிப்படுத்துகின்றது. இதம் என்ற கதை மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதோடு, மிகுதி கதைகளில் உள்ள குறை நிறைகளையும் தில்லைநடேஸ் பகிர்ந்து கொண்டார்.
இவரது கதைகளில் வரும் ‘சதைகள்’ சம்பந்தமாக வாசிக்கும்போது எனது அனுபவமும் நிறைந்து கிடப்பது போலவே உணரக்கூடியதாக இருந்தது. காரணம் நானும் ஆண்தானே. ஆண்களுக்கு ஏற்படும் அனுபவங்ளைத்தான் எழுதியிருக்கின்றார். ‘வேறயாக்கள்’ என்ற கதையில் அவர் சாதிய முரண்பாடுகள் குறித்து பேசியிருந்தாலும் குறிப்பிட்டு சாதிகளின் பெயர்களை தவிர்த்தவாறே கதையை முடித்துள்ளார். இவரது அனைத்து கதைகளையும் வாசித்த அனுபவத்தில் ஒரு தெளிந்த ஆற்றல் இவரிடம் தேங்கிக்கிடக்கிறது என்றே நான் கருதுகின்றேன். என துரைசிங்கம் சுருக்கமாக தனது அனுபவத்தை கூறினார்.

கடந்த வாசிப்பு மனநிலை விவாதத்தில் அனோஜனின் ‘அசங்கா’பற்றி அதிகம் விவாதித்தோம். தனிய ஒரு கதையாக ‘அசங்கா’வை வாசித்த எனது அனுபவத்திற்கும் தொகுப்பாக அனோஜனின் கதைகளை வாசித்ததற்கும் நிறைய வேறுபாட்டை நான் உணர்ந்தேன். உண்மையிலேயே மலைப்பாகவே இருந்தது. யுத்தத்தின் அதிக அனுபவத்தோடு வளராததே அனோஜனக்கு மிகவும் சாதகமாக இருந்திருக்கின்றது. இவரது வயதில் எனக்கு இல்லாத துணிவு இவருக்கு இருக்கிறது. லவ், காமம் என்பதெல்லாம் ஒரு புரட்சிகரமான விடயம். நாம் அடக்கி அடக்கி வெந்த விசயத்தை அனோஜன் மிக துணிவாக சொல்லுகிறார். என மனோ கருத்துரைத்தார்.
வேறயாக்கள் கதையில் சாதியம் பற்றிய அவரது பார்வை என்னவாக இருக்கின்றது எனும் ஒரு கேள்வியை நெற்கொழுதாசன் முன்வைத்தார்.
அந்தக் கதையின் மூலமாக தலைமுறை மாற்றங்கள் ஊடாக சாதியம் ஏனும் கருத்துநிலையிலும், நடைமுறை செயல்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழுகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றார். அதற்கான ஆதாரங்களாக சிறட்டையிலிருந்து மாபிள் கோப்பைக்கு மாறுகிறது. வெளியில் வைத்து பேசப்பட்டவர் உள்ளே அழைக்கப்படுகின்றார் போன்ற மாற்றங்கள் ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சாதியம் அடிப்படையில் எங்கே வேர் ஊன்றியுள்ளது என நாம் கூறிவரும் கருத்திற்கும், அதன் உண்மை நிலைக்கும் சான்றாக அக்கதையின் முடிவு அமைந்திருக்கின்றது. அகமண முறையூடாக ஏற்படும் விளைவின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு புறமணத்தின் அவசியம் முன்வைக்கப்படுகின்றது. இதைத்தானே நாங்களும் எதிர்பார்ப்பது என அசுரா பதிலளித்தார்.
மேலும் ‘சதைகள்’தொகுப்பில் ஆணாதிக்க கருத்துநிலை துலங்குவதாக பெண்களின் வாசிப்பில் உணரப்படுகின்றதா எனும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அனோஜனின் அசங்கா கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. அதிலும் வந்து ஆண் நிலைக்கருத்தே முன்வைக்கப்பட்டது. அதாவது வந்து ஆண்பார்வைதான் அது. ஆண் பார்வை என்பது வேறு, ஆண் ஆதிக்கப்பார்வை என்பது வேறு. என விஜி பதிலளித்தார்.
யாழினியின் ‘மரணமூறும் கனவுகள்’கவிதைத் தொகுப்பின் மீதான கருத்துரையை கவிஞர் நெற்கொழுதாசன் முன்வைத்தார். இவரது கவிதை மொழியானது அந்தக்காலத்து முதிர்வு மொழியாக உள்ளது. நிலைப்புச்சொற்களை தவிர்த்திருக்கலாம். 2006-2008ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இவரது கவிதைகளில் யுத்தப்பரப்பின் நிகழ்வு ஆழமாக பதிசெய்யப்படவில்லை. அதிக காலம் கொழும்பில் வாழ்ந்து அதற்கு காரணமாக இருக்கலாம். இவரது மொழியில் ரமேஸ்-பிரேம் சாயலும் தென்படுகின்றது. தனது சுய வருப்பும் வெறுப்பும் கலந்த அனுபவங்களே யாழினியின் கவிதையில் மேலோங்கியிருக்கிறது. எனவும் கூறினார்.
நவீன கவிதைக்குரிய தன்மைகள் எதுவும் இல்லை. அப்போதைய செல்வி, சிவரமணி போன்ற கவிஞைர்களின் மொழியின் நீட்சியாகக்கூட இவரின் கவிதை மொழி அமையவில்லை. என ஷோபாசக்தி தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.
பத்தாவது ஆக்காட்டியில் வெளிவந்த புஸ்பராணி அவர்களின் ‘தங்கமயில்’ சிறுகதை மீதான தனது வாசிப்பு அனுபவத்தை விஜி பகிர்ந்து கொண்டார். ஒரு ஆண் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதன் மீதான சமூகப் பார்வைக்கும், அதேநேரம் ஒரு பெண் பல ஆண்களோடு தொடர்பு வைத்திருந்தால் அந்த பெண் மீதான சமூகத்தின் பார்வையும், தீர்ப்பும் மிக கொடூரமானதாகவே இருக்கும். இப்படியான ஒரு பேசப்படவேண்டிய விசயத்தை புஸ்பராணி அக்கா தொட்டிருக்கின்றா. ஆனால் அக உணர்வெழுச்சியை தூண்டும் மொழியூடாக சொல்லப்படவில்லை. தகவல்களின் விபரிப்பாகவே உணர முடிந்தது. இக்கதையில் பேசப்பட்ட விடயம் தேர்ந்த மொழியூடாக விபரிக்கப்பட்டிருந்தால் தேம்பி அழுதிருக்கமுடியும். அந்தளவிற்கு அந்தப்பெண் பல ஆண்களாலும் சமூகத்தாலும் உறவினர்களாலும் பிள்ளைகளாலும் என அனைவராலுமே நிராகரிக்கப்படும் ஒரு அபலையாக தவிக்கின்றாள். என சுருக்கமாக கூறினார்.
இறுதியாக வழமைபோலவே பல உபஉரையாடல்களில் இரயாகரன், தில்லைநடேஸ், ஷோபாசக்தி, தேவதாஸ், விஜி, என பலரும் சூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது.

நன்றி -முகனூல் அசுரா

0 commentaires :

Post a Comment