5/20/2016

தமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்; ஒரு குறிப்பு -1. அ.மார்க்ஸ்



இந்த சட்டமன்றத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்றுள்ள வாக்கு வீதங்கள் இவை.


அதிமுக 40.9%
திமுக 31.3%
காங்கிரஸ் 6.4%
பாட்டாளி மக்கள் கட்சி 5.3%
பிஜேபி 2.8%
தேமுதிக 2.4%
நாம் தமிழர் 1.1%
மதிமுக 0.9%
விடுதலை சிறுத்தைகள் 0.8% சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
தமிழ் மாநில காங்கிரஸ் 0.6%
புதிய தமிழகம் 0.5%
மனிதநேய மக்கள் கட்சி 0.5%
முஸ்லிம் லீக் 0.7
பு.தமிழகம் 0.5%
எஸ்டிபிஐ 0.2%
பகுஜன் சமாஜ் 0.2%


இந்த எண்ணிக்கைகைளை அப்படியே ஒப்பிட்டு கட்சிகளின் பலங்களை மதிப்பிடுவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நாம் தமிழர், பாஜக முதலியன கிட்டத்தட்ட அத்தனை தொகுதிகளிலும் நின்றவை. சீமான் கட்சி 234 தொகுதிகளிலும் நின்றதுதானே. அவற்றை கூட்டணியில் இருந்து வெறும் 20 தொகுதிகளில் நின்ற கட்சியுடன் அப்படியே ஒப்பிட இயலாது. அவர்களுக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் இருந்தது எனச் சொன்னாலும் அப்படியே ஒப்பிட இயலாது.

பாமகவைப் பொருத்த மட்டில் இதுதான் இவர்களின் உச்ச பட்சம். இதற்கு மேல் பெரிய அளவில் அவர்களால் அதிகரிக்க இயலாது. அவர்கள் தங்கள் சாதியினர் அதிகமாயுள்ள ஒரு 20 தொகுதிகளைத் தேர்வு செய்து வேலை செய்தனர். தேர்தலுக்கு முன் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இதில் அவர்கள் 5 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனச் சொல்லி யிருந்தேன். அதே போல இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது 5 தொகுதிகளில் அவர்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து கடைசி நேரத்தில் வீழ்ந்தனர். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் தீவிரமாக வேலை செய்தால் எதிர்காலத்தில் அந்த 5 தொகுதிகளை அவர்கள் பிடிக்கலாம். அவ்வளவுதான்.

ஆனால் பிற அடையாள அரசியல் கட்சிகள், விசிக உட்பட, இந்த அளவுக்குத் தங்கள் ஆதரவுத் தொகுதியை ஒருங்கிணைத்து consolidate பண்ண இயலவில்லை. திருமாவளவன் நின்ற காட்டுமன்னார் தொகுதியெல்லாம் இளைய பெருமாள் காலம் முதல் தலித் தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதி. இன்று திருமா சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோற்கிறார் .இடையில் ரவிகுமார் வென்று, தொகுதிக்கே போகாமல் இருந்து அவர்களால் விரட்டப்படும் நிலை ஏற்பட்டது திருமாவின் இன்றைய தோல்வியில் ஒரு பங்கு வகிக்கிறது. பா.மக அப்படியெல்லாம் இல்லாமல் தங்கள் தொகுதிகளில் மிகவும் கவனமாக வேலை செய்தார்கள் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். .

மற்றபடி பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட்டு இந்த 2.8 சதத்தைப் பெற்றுள்ளது. தேசிய அளவில் அதிகரித்து வரும் இந்து உணர்வின் வெளிப்பாடு இது. இது கவலைகுரிய ஒன்றுதான். ஆனால் அதுவும் கூட தமிழகத்தில் பெரிய அளவில் செல்லுபடியாகவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டி உள்ளது. கிட்டத்தட்ட எல்லா தொகுதிகளிலுமே அவர்கள் டெபாசிட் காலியாகியுள்ளனர்

நோட்டா 1.3 சதம் விழுந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் இது.அதிகம். இன்னும் கூட பொருளாதாரப் பிரச்சினைகளை எல்லாம் பேசக் கூடிய இக் கட்சிகள், கார்பொரேட் எதிர்ப்பை வெளிப்படுத்தும் இக்கட்சிகள், திராவிடக் கட்சிகள் போல் அல்லாமல் தீண்டாமை ஒழிப்பைப் பேசும் இக்கட்சிகள், ஊழலற்ற கட்சிகள் இப்படி நோட்டா வாக்குகளைவிடக் குறைவாகப் பெற்றிருப்பது உண்மையில் கவலைக்குரிய ஒன்றுதான். ஆனால் இதுதான் எதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் பொருத்தப்பாட்டை இந்திய அளவில் இழந்து வருவது குறித்த என் முந்தைய பதிவு ஒன்று நினைவிருக்கலாம்.

மற்றபடி 'திராவிட' எனும் கருத்தாக்கத்தை எதிர்த்துக் கடந்த ஒரு இருபதாண்டுகளாக இங்கு பார்ப்பன ஆதரவு சக்திகளாலும் தமிழ் இனவாதக் கட்சிகளாலும் செய்யப்பட்டு வரும் பிரச்சாரம் பெரிய அளவில் இங்கு பாதிப்பை ஏற்படுத்த இயலவில்லை என்பது கவனத்துக்குரியது. வரவேற்பிற்கும் உரியது.

பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு வலுவான எதிர்க் கட்சி ஒன்றுடன் இந்த சட்டமன்றம் உருப்பெற்றுள்ளது வரவேற்கத் தக்க ஒன்று. அதை constructive ஆக திமுக பயன்படுத்த வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சிகளே இல்லாத சட்டமன்றம் இது. அவர்கள் மீது என்ன குறைகள் சொன்னாலும் சட்டமன்ற நடவடிக்கைகளில் கவனமாகச் செயல்படக் கூடியவர்கள் எனப் பெயருண்டு. கேடிகே தங்கமணி போன்றவர்களின் பங்களிப்புகளை அத்தனை எளிதில் மறந்துவிட இயலாது. திமுக வினர்தான் இந்த இடத்தை நிரப்ப வேண்டும்.
செய்வார்களா? 

*நன்றி முகனூல்

0 commentaires :

Post a Comment