3/08/2016

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம்

20160308_155452.jpg

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர்தினம் 08.03.2016 பி.ப.3.00 மணிக்கு வாவிக்கரை வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள் தலைமையில் மகளிரணித்தலைவி திருமதி செல்வி மனோகரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சுமார் 300 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதுடன் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


"பெண்கள் சிறுவர்களுக்கான தனியான நீதிமன்றங்கள் தேவை" என்னும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீர்தின அறிக்கை

பெண்ணுரிமையின்றி மண்ணுரிமை இல்லை என்பார் ஈ.வே.ரா.பெரியார் என்னும் பகுத்தறிவு சிந்தனையாளர். இவ்வுலகம் முழுக்க வியாபித்திருக்கும் சனத்தொகையில் ஏறக்குறைய 50சதவீதம் பெண்களாக காணப்படுகின்ற அதேவேளை இலங்கையின் சனத்தொகையில் 51.8வீதமானோர் பெண்களாக உள்ளனர். ஆனால் மனிதகுலம் இப்பெண்களை சரிசமமாக நடத்துகின்றதா? பெண்களுக்கான சமூக நீதி உறுதிப்படுத்தப்படுகின்றதா? என்கிற கேள்விகளுக்கான பதில்கள் எம்மை வெட்கி தலைகுனிய வைக்கின்றன.


இந்த நிலையில்தான் நாமெல்லோரும் வருடாவருடம் மார்ச் 8ஆம் நாளை சர்வதேச மகளீர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.அறிக்கைகளும் பிரகடனங்களும் வெளியிடுகின்றோம்.ஆனால் இதனை பிரக்ஞைபூர்வமாக செய்கின்றோமா?  அன்றி வெறும் சம்பிரதாயமாக  இம்மகளிர் தினம் மாறிவருகின்றதா? எமது ஒவ்வொரு குடும்ப அலகும் பெண்களுக்கான உரிமையை,ஜனநாயகத்தை பேண தயாராகியுள்ளதா? இவைபற்றியெல்லாம் தேடல்களும் சுய விமர்சனங்களும் மென்மேலும் அவசியமாகின்றன.

வீட்டுக்குள்ளேயே ஜனநாயகம் இல்லாவிடின் நாட்டில் எப்படி ஜனநாயகம் தழைத்தோங்கும்? இதனைத்தான் பெரியார் "பெண்ணுரிமையின்றி மண்ணுரிமை இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.ஆனால் நாம் மண்ணுரிமைக்கும் அரசியல் விடுதலைக்கும் கொடுக்கின்ற குரலில் ஒரு சதவீதம்கூட பெண்ணுரிமைக்காக கொடுப்பதில்லை.விடுதலையின் பெயரில் கடந்த கால யுத்தத்துக்காக  பயன்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் இன்றைய நிலை என்ன? அவர்கள் ஒவ்வொருவரும் மண் விடுதலை வந்தால் பெண்விடுதலை கிடைத்துவிடுமென்ற  கனவுகளில் மிதக்க விடப்பட்டார்கள்.இன்று அவர்களின் நிலையை எண்ணிப்பார்ப்போம்.ஊனமுற்றவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக எவ்வளவு
துயரமான வாழ்வை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது.

கலைகலாசாரம்,பண்பாடு,மதம் என்கின்ற பெயர்களில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதனை தொடர்ந்து கொண்டு பெண்ணுரிமை கோசங்களை  அள்ளி வீசுவதால் எந்தவித பயனுமில்லை.எமது குடும்ப,சமூக சிந்தனையோட்டங்களில் மாற்றத்தை உருவாக்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.


அரசியல் பரப்பில் இது பற்றிய தீவிர விவாதங்களும் முடிவுகளும் எய்தப்படவேண்டும்.இன்றைய நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஆனால் தூரதிஷ்ட வசமாக நமது மக்களின் ஆணையை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் தலைமைகள் இது பற்றி அக்கறை கொள்வதில்லை.வெற்று இனவாத அரசியல் கோசங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்றன. வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற காலாவதியாகி போன கடந்த நூற்றாண்டு  சிந்தனை  மீண்டும் தூசு தட்டி எடுத்து அரசியல் அரங்குக்கு கொண்டு வரப்படுகின்றது.இதனூடாகஇன்று பெண்கள் எதிர்கொள்ளுகின்ற குடும்ப வன்முறைகளும்,பாலியல் கொடுமைகளும், பெண் தலைமை குடும்பங்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சனைகளும்  புறமொதுக்கப்படுகின்ற அவலம் நிகழ்கின்றது.மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை திசை திருப்ப மட்டுமே இந்த இனவாத கோஷங்கள் அரசியல் வாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இவ்வேளை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


வடக்கு கிழக்கு இணைந்து விட்டால் மட்டும் பெண்ணடிமை தீர்ந்து விடுமா? இந்த குறிப்பாக தமிழ் சமூகம் கொண்டுள்ள பெண்கள் மீதான கேவலமான  ஆதிக்க மனோபாவம் எப்படி ஒழிக்கப்படும்? எனவே சமூக கொடுமைகளை திசை திருப்பி எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் தலைமைகளை  நாம் இனம்கண்டுகொள்ள வேண்டும்.

இந்த இனவாத அரசியலுக்கு அப்பால் நல்லாட்சி,இன பிரச்சினை தீர்வு, சமூக நீதி, சமாதானம்,அபிவிருத்தி போன்றவற்றில் எமது பெண்களின்  கருத்துக்களும் பங்களிப்புகளும் உள்வாங்கப்படுவதனூடாகவே அவை முழுமை பெறும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே

*கலை,கலாசார,அரசியல்,சமூக ,கல்வி,மற்றும் பொருளாதார விடயங்களில் தீர்மான சக்திகளாக பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்யும்பொருட்டு -உள்ளுராட்சி மன்றங்களில் 33வீதமும் உயர் சட்டவாக்க நிறுவனங்கள் சார்ந்த  சபைகளில் 50வீதமும் இடம்பெறும் வண்ணம் பெண்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பை   புதிய அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்
*பெண்கள் சிறுவர்களுக்கான தனியான நீதிமன்றங்கள் தேவை"

இக்கோரிக்கைகளை  சர்வதேச மகளிர் தினமான இன்று (08.03.2016) இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினராகிய நாம் பிரகடனம் செய்கின்றோம்.

மகளிர் அணி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
மட்டக்களப்பு


0 commentaires :

Post a Comment