மதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந் என்னும் மாணவனை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய செய்திருக்கின்றது.
மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்துள்ளது கல்குடாதொகுதி. இந்த கல்குடா தொகுதியில் அமைந்துள்ள வாகரை பிரதேசம் ஒருகாலத்தில் புலிகளின் முழு கட்டுப்பாடில் இருந்தது.இங்கிருந்து திருகோணமலை செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 11கிலோமீட்டர்கள் காட்டுவழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளதுதான் மதுரங்கேணி குளம் என்னும் குக்கிராமம் ஆகும். இந்த நெடும்தூர பயணம் ஆபத்தானதொன்று காட்டுவிலங்குகள் பலவற்றைக்கடந்துதான் இந்த கிராமத்தை அடைய வேண்டும்.அதில் காட்டுயானைகளும் அடக்கம்.ஆனாலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இங்கேயுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆசிரியர்கள் தினம்தினம் சென்று வருகின்றார்கள்.
அரசியல்வாதிகளோ ஐந்துவருடங்களுக்கு ஒருமுறைதான் வந்து செல்வார்கள்.
இங்குவாழும் மக்கள் வேட்டையாடுதல், தேன்வெட்டுதல்,மீன்பிடி,சிறு வேளாண்மை என்று பருவகாலங்களுக்கு ஏற்ற பல்வேறு தொழில்கள் ஊடாக தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.
யுத்தகாலங்களில் காடுகளுக்குள் சென்று தமது ஜீவனோபாய தொழில்களை செய்யமுடியாது அழிவின் விளிம்பில் தப்பி பிழைத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமன்றி புலிகளின் பிள்ளைபிடிக்கும் இராணுவத்தில் வெறியா ட்டங்களுக்கும் முகம்கொடுத்து இளம் சமூகத்தையே தொலைத்து நிற்கின்றனர் இங்கு வாழும் மக்கள்.
கடந்த காலங்களில் வெறும் ஆரம்ப பாடசாலையாக இயங்கி வந்த இங்குள்ள பாடசாலை முதலமைச்சர் சந்திரகாந்தனின் முழு முயற்சியால் 2010ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் வரை தரமுயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 1 தொடக்கம்11 வரையான தரங்கள் உண்டு. 1 தொடக்கம் 5 வரையான தரங்களுக்கு ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் எவருமில்லை. அத்துடன் கணிதம் விஞ்ஞான பாடங்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களும் இல்லை. பாடசாலை நிலவகுப்பறைகள் காணப்பட்டாலும் கற்பித்தலுக்கு பொருத்தமான வகுப்பறை தளபாடங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன .
இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் இருந்துதான் மதுரங்கேணி குளம் வரலாற்றில் முதன்முறையாக தினேஷ்காந் என்னும் மாணவனை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைய செய்திருக்கின்றது. அத்தனை கஷ்டங்களுக்கும் மத்தியில் பொது போக்குவரத்துக்களின்றி நாளாந்தம் பயணம் செய்து இங்கு கல்வி பணி புரியும் ஆசிரியர்கள் உண்மையிலேயே கனவான்கள்தான்.அவர்களுக்கும் இந்த மாணவனுக்கும் பாராட்டுக்கள்.
இப்போது இந்த பதினாறுவயது தினேஷ்காந் அந்த ஆபத்தான யானைகளையும் தாண்டி 11 கிலோ, மீட்டர் காட்டுவழியே நாளாந்தம் பயணம் செய்து தனது உயர் கல்வியை எங்கே எப்படி தொடரப்போகின்றான்? என்னும் கேள்விகளுக்கு விடைதேடி கொண்டிருக்கின்றது அந்த மதுரங்கேணி குளம்.
மீன்பாடும் தேனாடான்
0 commentaires :
Post a Comment