இன்று தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சி கண்டு வருகின்றது. எனவே, தமிழ்ப்பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பிரசவிப்பதற்கு முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செம்மை மாதர் விருதும், பெண்ணால் முடியும் சிறப்புக்கவியரங்கமும் கொக்கட்டிச் சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"எம்மைவிட ஏனைய சகோதர இனத்தவர்களின் சனத்தொகையும், மாணவர்களைப் பாடசாலைக்கு அனுமதிக்கும் விகிதத்திலும் அதிகரிப்புள்ளது. ஆனால் தமிழ் மாணவர்களின் வீதத்திலே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை வேதனையான விடயமாகும்."
எம் இனத்தின் விகிதாசாரம் குறைவடைந்து செல்வது எமக்கு நல்லதல்ல. சமூக, பொருளாதார விடயங்களில் சனத்தொகை வீதம் என்பது தாக்கம் செலுத்தக்கூடியது. நமது பிரதேசங்கள் ஸ்திரமாக இருக்க வேண்டுமானால் மாணவர் வளமும், மனிதவளமும் சிறப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் நிதிவளமும், பௌதீக வளமும் நிறைவாகக் கிடைக்கும்.
இலங்கை செம்மை மாதர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்ற பெண்கள் சமூகத்தில் எமது இனப்பரம்பலை பெருக்கக்கூடிய வகையிலான விழிப்புணர்வுத் திட்டங்களை கிராம மக்களிடையே முன்னெடுக்க வரவேண்டும்.
0 commentaires :
Post a Comment