புஸ்பராஜா ஒருகாலத்தில் தீவிர தமிழீழ விடுதலை போராளியாய் தன் சமூகவாழ்வை தொடங்கியவர்.காலப்போக்கில் புலம்பெயர்ந்தாலும் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று தன்வாழ்வை சுருக்கி கொள்ளாதவர். புலம் பெயர்ந்த தேசத்திலும் தனது அரசியல் வாழ்வை தொடர்ந்தவர்.விடுதலைக்காக எந்த வன்முறையை அவர்போன்ற மூத்த தலைமுறையினர் தொடக்கி வைத்தார்களோ அந்த வன்முறையே எமது சமூகத்தை விழுங்கி வருவதை கண்டு நெஞ்சம் வெதும்பியவர்.
புலம்பெயர் தேசங்களில் உருவாகிய புகலிட இலக்கியத்திலும் தனது எழுத்தாற்றல் மூலம் தடம்பதித்தவர்.புகலிட இலக்கிய சந்திப்பை கட்டி வளர்த்ததிலும் அவரது பங்கு காத்திரமானது.சுதந்திர வேட்கையும் மனித உரிமை தாகமும் கொண்டலைவதாய் வேசம்போட்டுக்கொண்டு பின்புறமாக பாசிச புலிகளுக்கு அவர் சாமரம் வீசவில்லை.பூரண சுதந்திரத்துக்காய் ஓயாது குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். கருத்து சுதந்திரத்தின் கழுத்தினை நெரிப்பது அரசுமட்டுமல்ல அது போராளிகளே ஆயினும் அதை எதிர்ப்பதில் அவர் பின்நிற்கவில்லை.
ஈழ போராட்டத்தில் எனது சாட்சியம் என்கின்ற அவரது நூல் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டியதொன்று.வரலாற்று குறிப்புகளை மட்டுமல்ல தான் சார்ந்த சரி பிழைகளை இசுய விமர்சனமாக அவர் தொகுத்தார்.
அவருக்கு புற்றுநோய் வந்து அவரது நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த போது எமது தேசத்தில் ஒரு முறை கால் பதித்துவிட வேண்டுமென்று தாயகம் சென்று திரும்பினார். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த யுத்தத்தை கண்ணுற்ற அவர் பிரான்ஸ் திரும்பி தான் இறந்து விட முன்னர் எழுதி வைத்த குறிப்புகள்தான் அவரது மனிதாபிமானத்துக்கு சாட்சியாகும் .அந்த கையெழுத்து குறிப்பு இப்படியிருந்தது. "கொலைகளை நிறுத்துங்கோடா" . ஆம் இப்போது கொலைகள் நிறுத்தப்பட்டுவிட்டது.ஆனால் எம் தேசத்தில் மீண்டும் கால் பதிக்க எங்கள் புஸ்பராஜா அண்ணன் இன்று எங்களோடில்லை.
எம்.ஆர்.ஸ்டாலின்-பாரிஸ்
0 commentaires :
Post a Comment