பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில் 56 பேருக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
2016ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பெயர்களை குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது. மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம் கர், அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை செயினா நெய்வால், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 112 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களில் 56 பேருக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
5 பத்ம விபூஷண், 8 பத்மபூஷண் மற்றும் 43 பத்மஸ்ரீ விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். திருபாய் அம்பானி, அவினாஷ் கமலாகர் தீக்சித், ஜக்மோகன், யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், ஹபீஸ் சொராபி, பர்ஜிந்தர் சிங் ஹம்தர்த், அனுபம் புஷ்கர்நாத் கர், பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி, செயினா நெய்வால், வினோத் ராய், அலா வெங்கடராமா ராவ், துவ்வுர் நாகேஸ்வர ரெட்டி ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மயில்சாமி அண்ணாதுரை, மதுர் ஆர்.பதன்தர்கர், அஜய் தேவ்கன், தீபிகா குமாரி, முகம்மது இம்தியாஸ் குரேசி உள்ளிட்ட 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் இன்று வழங்கப்பட்டன.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த், பிரியங்கா சோப்ரா, சானியா மிர்சா உள்ளிட்ட மீதமுள்ளவர்களுக்கு அடுத்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.
0 commentaires :
Post a Comment