2/21/2016

எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளன



எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மூன்று தனிநபர் பிரேரனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
uthumaan

• கிழக்கு மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் சிங்களப் பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க கோரும் தனிநபர் பிரேரனை:-
• கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பாடத்திற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் சிங்கள நூல்களை பயன்படுத்த முடியாத நிலமை தோன்றியுள்ளது. எனவே, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழிக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்
• வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை நிறைவு செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளக் கோரும் தனிநபர் பிரேரனை:-
• கடந்த 25 வருடங்களுக்கு முன் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் பல நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எனவே, யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு பல இன்னல்களை கடந்த 25 வருட காலமாக அனுபவித்து வரும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை அவசரமாக நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை ஏகமானதாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
• கிழக்கு மாகாணத்தில்; இயங்கி வரும் அரசாங்க மற்றும் தனியார் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை தொடர்ந்தும் இந்த மாவட்டங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனிநபர் பிரேரனைகளும் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளது.
• இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில்; அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை நகரங்களில் 04 அரசாங்க பயிற்சி நிலையங்களும், சில தனியார் பயிற்சி நிலையங்களும் இதுவரை இயங்கி வருகின்றன. இப்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று அன்னிய செலாவனியை ஈட்டித் தருகின்றவர்களுக்கான ‘ரட்ட விருவோ’ எனும் பெயரை வழங்கி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இவ்வலுவலகங்கள் ஊடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் திடீர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தவிசாளரினால் அனுப்பப்பட்டுள்ள 01/2016ம் இலக்க சுற்று நிருபத்தில் 20.01.2016ம் திகதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களையும் மூடி விட்டு இனிமேல், கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுச் செல்பவர்களுக்கான பயிற்சிகளை தங்கல்ல, மத்துகம, கண்டி, பணிப்பிட்டி, இரத்தினபுரி, மீகொட போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, கல்முனை, திருகோணமலை, மட்;டக்களப்பு நகரங்களில் இதுவரை இயங்கி வந்த பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளதால் டிகிழக்கு மாகாண மக்கள் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை நகரங்களில் இதுவரையும் இயங்கி வந்த அரசாங்க பயிற்சி நிலையங்களையும், தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது…..
மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தனிநபர் பிரேரனைகளும் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் முன்அறிவித்தல் செய்யப்பட்டு முன்வைக்கப்படவிருந்தது இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ஜெயந்த விஜயசேகர அவர்களினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பாக சமர்ப்;பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையின் போது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் திடீரென கிழக்கு மாகாண சபையின அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் மாதம் 23 திகதி நடைபெறும் என தவிசாளர் திரு.கலப்பதி; அவர்களினால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணத்தினாலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் கடந்த மாதம் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த தனிநபர் பிரேரனைகள் இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

0 commentaires :

Post a Comment