நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கச் செய்தமை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மை தரும் மகிழ்ச்சியான விடயமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. மீண்டும் அதனைத் தொடக்கியிருந்தது மகிழ்ச்சிதான். எனினும் தமிழ் மக்கள் பிறர் தயவில் வாழ வேணடியவர்களல்ல என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 68 வது சுதந்திர தினம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இம்முறை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே தமிழ் மக்கள் மத்தியில் இருந்ததுடன் நேற்றைய நிகழ்வில் எதிர்பார்த்திராத இறுதி சந்தர்ப்பத்தில் அது நிறைவேறியது.
உண்மையில் இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய உற்சாகத்தையும் தந்துள்ளது.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தரிவிக்கையில்,
“ஏற்கனவே இருந்த ஒன்று மீள நடைமுறைக்கு வந்துள்ளது. இது பெரிதான விடயமல்ல. எனினும் இதனை மீள் நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதேபோன்று மக்களுக்கும் நல்லதுதான்” என்றும் தெரிவித்தார்.
மலையக அரசியல் பிரமுகரான பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது,
உண்மையில் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுறக்கூடிய செயல் இது. தமிழில் தேசிய கீதம் பாடப்படக்கூடாது என எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையிலும் மக்களின் எதிர்பார்ப்பை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி நல்லதைச் செய்துள்ளார்.
சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனை எமது மக்கள் சார்பில் நாம் வரவேற்கின்றோம் என்றும் திலகர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment