2/16/2016

இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும்

அகில இலங்கை  மக்கள் மகாசபை
அன்புள்ள தலைவர் மற்றும் குழாமிற்கும்
இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் சம்பந்தமான சந்திப்பில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் புதிய யாப்பில் இடம்பெறுமென நம்பி அகில இலங்கை மக்கள் மகாசபையின் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றேன்.
நாம் வைக்கும் கோரிக்கைகள் இலங்கையின் தேசிய பிரச்சனைகளைவிட சற்று வித்தியாசமானவை. தேசிய பிரச்சனைக்கு இந்நாட்டில் வாழும் சகல இன மொழி மத மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாக சேர்ந்து சகலருக்கும் பொருத்தமான நல்லதொரு தீர்வை கொண்டுவரவேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்துவதோடு அதற்கு மேலும் வடகிழக்கில் குறிப்பாக வடக்கில் புரையோடிப்போய் இருக்கும் சாதியமைப்பாலும்       தமிழ்த்தலைமைகளாலும் தமிழர்களாலும் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டு அதற்கும் ஒரு தீர்வை இந்த யாப்பில் இடம் பெறவேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபின் வடமாகாண நிர்வாக கட்டமைப்பினுள் சாதி பார்த்து ஒடுக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. ஆயுதத்திற்கு முன்பு அமைதியாக இருந்த சாதியால் ஒடுக்கப்படும் நிலவரம் தற்போது அதிகாரத்தில் உள்ள மேட்டுக்குடியினரால் அதிகரித்துள்ளது. இன்று வடக்கில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தெரியப்படுத்தி எமது பிரேரணைகளை முன்வைக்கின்றோம். இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இன, மொழி, மத பிரிவினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் இப்- புதிய யாப்பு உருவாக்கத்தில் பல்லின சமூகங்களுக்கிடையேயான உறவுகளும், புரிதல்களும் வலுவடைவதற்கு சாதிய சமூக பின்புலங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நாம் கருதுகின்றோம்.

நீண்டகாலமாக ஆரம்பப் பாடசாலை முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியுரிமைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், தேர்தல் வேட்பாளர் நியமனங்கள் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு  வருகின்றனர். எமது மக்களது அடிப்படை உரிமைகள் யாவும் பேணப்பட்டு சகல பிரஜைகளுடனும் சமமாக மதிக்கப்படவேண்டும். உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வடபகுதியில் 50 வீதத்திற்கு மேலாக காணப்படுகின்ற போதிலும் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்மக்கள் சார்ந்து ஒருவர்கூட இல்லையென்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்களின் போதாமையும் மத, கலாசார, பாரம்பரிய பேணுகைகளும் குறிப்பிட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கின்றது. இவற்றினை கருத்தில் கொண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதற்காக கீழ்வரும் பரிந்துரைகளை அகில இலங்கை மக்கள் மகாசபையினராகிய நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.
1) ஒற்றையாட்சிக்குள் இலங்கை மக்கள் யாவரும் இன மொழி மத சாதி பாகுபாடின்றி சகல மக்களும் இலங்கையர்களாக அவர்களது தனித்தன்மை அடையாளங்கள் மாறாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யப்படல் வேண்டும். ஒற்றையாட்ச்சிக்குள் நியாயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். பல்லின சமூகங்களைகொண்ட எமதுநாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வுக்குள்ளே பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களும் இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுடனும் சமமான அந்தஸ்துகளுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
2) தேர்தலில் வட்டாரம் தொகுதி பிரிப்பதில் யாழ் மேட்டுக்குடி நிர்வாத்தினர் தங்களுக்கு ஏற்றமாதிரி தங்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாக பிரிப்பதற்குமுன் மக்களின் ஆணையை பெறல் வேண்டும். தற்போது இங்கே மேற்கொள்ளப்பட்ட எல்லை நி;ர்ணயங்கள் உயர்சமூக அதிகாரிகளினாலும் மேட்டுக்குடி அரசியல் தலைமைகளாலும் தமது தலைமையை தக்க வைப்பதன் அடிப்படையில் பெரும்பான்மைப் பலமுடைய மக்கள் சமூகங்களை இருகூறுகளாக பிரித்துள்ளனர்.
3) வடமாகாணத்தில் 50 வீதத்திற்கு மேல் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரச உள்ளுராட்ச்சி மாகாண தேசிய மட்டத்தில் இன மொழி சாதி விகிதாசாரப்படி தெரிவு செய்யக்கூடிய பொறிமுறை இயற்றப்படல் வேண்டும். ( பெண்களுக்கு 25 வீதமாக வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்படவேண்டும் என்றவரையறை போன்றது)
4) அரச நியமனங்களஇ; பல்கலைக்கழக ஆலோசகர்கள் திறமையுடன் கல்வித்தகமையுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வருபவர்களிற்கு விகிதாசாரப்படி முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
5) அரசாங்க பாடசாலைகளில் அரசு ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமை அடிப்படையில் ஆசிரியர்களாகஇ அதிபர்களாக நியமித்தாலும் யாழ் கட்டமைப்பு அதற்கு இடையூறாக இருப்பதுடன் ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து வருபவர்களை மேட்டுக்குடி பாடசாலைக்கு அனுப்பாமலஇ; 1970 களில் கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் 17 பாடசாலைக்கு போகும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 15 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமஇ; வடமாகாணத்தில் 5 மாவட்டங்களும் உள்ளன. ஆனால் 68 வருடங்களாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்புமஇ; ஒடுக்கப்பட்ட சமுகத்திலுருந்து திறமையிருந்துமஇ; இதுவரை ஒருவரும் அரசஅதிபர்களாக நியமனம் பெற்றதில்லை. எப்போதாவது ஒருவர் உதவி அரச அதிபர் நியமனம்தான் கிடைக்கபெற்றது.
ஆகையால் இலங்கை சுதந்திரம் அடைந்தபின் 1971ம் ஆண்டு இயற்றப்பட்ட சமூகபாகுபாடு செயல் சட்டம் மீண்டும் தற்போதய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் திருத்தி எழுதப்பட்டு முற்றாக நடைமுறைக்கு வருமாறு அமுல்படுத்தப்படல் வேண்டும்.
6) வடக்கில் இருக்கும் தேசவழமை சட்டம் பெண்களிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களிற்கும் எதிராகவே உள்ளது. எனவே இந்த சட்டம் மீள் பரிசோதனைக்கு கொண்டுவரப்படவேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டு தேசிய சட்டங்களிற்குள் ஏற்றதாக மாற்றப்படவேண்டும்.
7) வடகிழக்கு பிரதேசங்களில் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமையுடன் அவர்களும் சமமாக சகல நாட்டின் வழங்களும் வழங்கப்பட வேண்டும். அதேநேரம் வடகிழக்கில் வசித்த வசிக்கின்ற முஸ்லீம் மக்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்.

8) தமிழர் தமிழ்த்தலைமைகள் இன்றுவரை மாறி மாறி சிங்கள தலைமைகளால் ஒடுக்கப்பட்டே வந்துள்ளதாக கூறிக்கொண்டே வருகின்றார்கள். ஆனால் ஒரே இனம் மொழி மதம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி என்ற அவமானச் சின்னத்தால் தொடர்ந்தும் இன்றுவரை தமிழ்த்தலைமைகளால் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். கல்வி திறமையிருந்தும் அதிகாரங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிற்கு எட்டாத வகையில் எழுதப்படாத பொறிமுறை ஒன்றை கட்டிக்காத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தப் பொறிமுறையை உடைப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் மேட்டுக்குடியினரிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் அமையும் வகையில் உறுதிப்படுத்தும் முகமாக புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்;. அத்துடன் பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் செல்லக்கூடியவாறு தேர்தல் முறையும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அல்லது நியமனமுறையில் அல்லது தேசியப்பட்டியல் மூலம் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்க வழிவகை இருக்குமாறும் நீங்கள் தயாரிக்கும் யாப்பு அமையு வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம். தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாரம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும். மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்துவதோடு, மேலும் முஸ்லிம், சிங்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும். அனைத்து வேலைவாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடுகளில் வடமாகாணத்தில் வாழும் சகலசமூக பிரிவினர்களினதும் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஒதுக்கப்படக்கூடிய கோட்டா (இந்தியாவில் உள்ளதுபோல்) இருக்கவேண்டும். அதிகாரங்கள் கிராமத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். மத்திக்கோ மாகாணத்திற்கோ அல்ல.
9) காணி சம்மந்தமாக……….
- சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்
- வாழ்வாதாரங்களுக்கான தொழில்வளங்களுடைய முடிக்குரிய காணிகள் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
- கடந்த 25 வருடங்களாக முகாம்களில் வாழும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் 95 வீதமும் ஒடுக்கப்பட்டவர்களே. இவர்களின் காணிகள் சொத்துக்கள் மீள்அளிக்கப்பட்டு வாழ்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு கருதி இவர்களின் காணிகளை அரசு வைத்திருக்க விரும்பின் மாற்று நடவடிக்கைகளை அவர்களின் விருப்பத்திற்கு இணங்க உடனடியாக செயற்படுத்தப்படல் வேண்டும்.
10) பொலீஸ் அதிகாரம் சம்மந்தமாக……………..
- பொலிஸ் அதிகாரம் இலங்கை நாட்டின் அச்சுறுத்தலுக்கு பங்கம் ஏற்படாதவகையில் பகிர்ந்தளிக்கபடல் வேண்டும்.  தேசிய நலன்களுக்கு அமைவான மத்திய அரசின் பொலீஸ் பிரிவின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் மாகாண நிர்வாக கட்டமைப்பின் இறைமையைப் பேணுவதற்கும் மாகாண பொதுசன பாதுகாப்பிற்கான சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கான மாகாண பொலீஸ் பிரிவு அமைக்கப்படவேண்டும்.
- எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பொலீஸ் அதிகாரங்கள் யாழ் மேட்டுக்குடியினரிடம் கையளிப்பதை முற்றாக நிராகரிக்கின்றோம். மக்கள் விகிதாசாரப்படி இனம் மொழி சாதி அடிப்படையில் பொலிஸ் நியமனங்கள் நியமிக்கப்படல் என்பது முக்கியமான விடயம். உதாரணமாக பொலிஸ் கட்டமைப்பில் 50 வீதத்திற்குமேல் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அல்லது ஆட்சேர்ப்பு நடைபெறல் வேண்டும்.


உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்பு முன்வரைவில் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு இம்மக்கள் நலன்சார்ந்த தீர்வுகளையும் உள்ளடக்கும் வண்ணம் பரீசீலனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றிகள்.

என்.தமிழழகன்
கே. சின்னராஜா

0 commentaires :

Post a Comment