2/06/2016

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சர் திகா,ராதா, திலகராஜ் நியமனம்; ஆரவாரம் வேண்டாம் என அறிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ மற்றும் கொத்மலை ஆகிய தொகுதிகளுக்கான அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இதன்படி நுவரெலியா பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமும் , அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக கல்வி ராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும் கொத்மலை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் ஒருவர் மக்களின் பிரதிநிதி என்றவகையில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அரச அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களுக்கு நியாயமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இத்தகைய பதவிகள் வழங்கப்படுகின்றன.

 தற்போது தேசிய அரசாங்கம் நடைமுறையில் உள்ளதால் மாவட்ட மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் தேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்தும் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைத் தலைமைப்பதவிகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைத்தலைமைப் பதவிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது காலங்காலமாக நடைமுறையிலுள்ள ஒரு நியமனங்களாகும். எனவே இந்த நியமனங்களுக்காக பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தோ ஊர்வலம் சென்றோ மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்   வகையில் செயல்படவேண்டாம் என தமது கூட்டணி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,


இதனிடையே நுவரெலியா மாவட்ட இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவும், நுவரெலியா பிரதேச இணைத்தலைவராக பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment