சமஉரிமை மறுப்பவர்களின் சமஷ்டிக் கோரிக்கை
இலங்கை ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்தபோது தமிழர்களாகிய நாம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டோம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் "சமஷ்டி" கேட்டோம். மாவட்ட சபையை வென்றெடுத்தோம். "தமிழீழம்" வேண்டி ஆயுதப் போராட்டம் நடாத்தினோம். மாகாண சபையை வென்றெடுத்தோம். இன்று இலங்கையில் ஒரு புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் வரைவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியதனைத் தொடர்ந்து "பழையபடி வேதாளம் முருங்க மரம்" ஏறின கதையாக "சமஷ்டி" சந்தைக்கு வந்துள்ளது.
இன்றைய இந்த நிலைமை, கடந்த 68 வருட தமிழ் அரசியலில் அணுவளவேனும் மாற்றம் ஏற்படவில்லை என்பதனையும் - பாமர பாட்டாளித் தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாசைகளை தமிழ் அரசியல் அணிகள் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை என்பதனையும் வெகு துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
1949ல் நாம் கேட்ட "சமஷ்டி"யில் மலையகத் தமிழ் மக்கள் மானசீகமாக விலக்கப் பட்டிருந்தார்கள். "தமிழீழம்" நோக்கிய போராட்டத்தில் இஸ்லாமிய தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்தில் இருந்து ஆயுத முனையில் விரட்டியடிக்கப் பட்டிருந்தார்கள். இன்றைய "சமஷ்டி" கோரிக்கையில் கிழக்குத் தமிழ் மக்கள் சற்று ஒதுக்கியே வைக்கப்பட்டுள்னர். இதனைக் கணித முறையின் படி ஆராயந்து பார்த்தோமானால் இந்த "சமஷ்டி" என்பதன் தாற்பரியம் "ஆறுமுகநாவலனார்" கற்பித்துக் கொடுத்த"சைவத் தமிழ்ச் சமூக அமைப்பைக்"கட்டிக் காக்கும் ஒரு பொறிமுறைக்குள் அடங்குகிறது.
தமிழ் மக்கள் மேல் பாசம் கொண்டோ அல்லது சிங்கள மக்கள் மேல் கோபம் கொண்டோ நாம் இந்த "சமஷ்டி" கோரவில்லை. மாறாக இந்த "சைவத் தமிழ் சமூகத்தை" கட்டி ஆண்டு பாதுகாக்கும் ஆளும் அதிகாரத்தை எமது கையில் எடுத்துக் கொள்ளுமுகமாகவே நாம் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். அதனால்தான் நாம் இன்னும் "குண்டுச் சட்டிக்குள் குதிரை" ஓட்டுகிறோம். குடாநாட்டுச் சிந்தனைகளுடன் முட்டி மோதியபடி அயலவனின் நட்பை நாடாமல் ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அந்நியரை வரவழைத்து ஆலாத்தி எடுத்துக் கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் பற்றி ஒரு கணிப்பீடு செய்தோமானால் அவர்களில் 99 சத வீதத்தினர் ஆறுமுகநாவலரின் சிந்தனையில் திளைத்து வளரும் யாழ் மேட்டுக்குடித் தமிழர்களே. இவர்களின் முன்னோடிகள்தான் இலங்கையில் இன-மத-சாதி-பால்-வர்க்க பாகுபாடு அற்ற ஒரு அரசியல் சட்ட வரைவு கொண்ட சுதந்திரத்தைக் கோரி உழைத்த "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" அமைப்பை வேரோடு புடுங்கி எறிந்தழித்த வித்தகர்கள். நாமும் இன்றுவரை இந்த மேட்டுக் குடிகளைத்தான் எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த மேட்டுக் குடிகள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களை கட்டம் கட்டமாக பிரித்து வைத்து அம் மக்களை அடக்கி ஆள்வதில் சிங்கள இனவாத அரசுகளை விட அதீத திறமைசாலிகள். மலையகத் தமிழர்களை "தோட்டக் காட்டான்" எனவும் கிழக்குத் தமிழர்களை "பாயோடு ஒட்டவைப்பவன்" என்றும் வன்னித் தமிழர்களை "காட்டான்" என்றும் மன்னார் தமிழர்களைக் 'கழுதை" என்றும் இஸ்லாமியத் தமிழர்களை 'தொப்பி புரட்டி" என்றும் கூறு போட்டுப் பிரித்தவர்கள் குடாநாட்டுக்குள் கிராமங்களை சாதி-சமயக் கோடு போட்டு பிரித்து வைத்தனர். இதனை அரசியலிலும் சரி அரச நிர்வாகத்திலும் சரி தொடர்ந்தும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
சிங்களவருடன் சம உரிமையைக் கோரும் இவர்களுக்கு தமிழருக்குள் சம உரிமை என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாலேயே இன்று நாம் இந்த அவல நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். தேர்தல்களில் நாம் சாதிக் கூறு போட்டுப் பார்த்தே பிரதிநிதிகளை சிபாரிசு செய்தோம். போராளிகளையும் சாதிக் கண்ணாடி ஊடாகவே பார்த்து ஆதரித்தோம்.
1988ல் வட-கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக அண்ணாமலை வரதராஜப் பெருமாள் பதவி ஏற்றுக் கொண்டதை இந்த யாழ் மேட்டுக் குடிகளினால் சகிக்க முடியவில்லை. அன்று காணப்பட்ட இலங்கை-பிராந்திய-சர்வதேச அரசியல் சூழலில் தமிழ்ப் பேசும் மக்களின் நலனைப் பின் தள்ளி யாழ் மேலாதிக்கவாத மேட்டுக்குடி சிந்தனையில் "வடக்கத்தையான் பரம்பரை" எமக்கு முதலமைச்சாராக வருவதா? எனச் சிந்தித்து செயற்பட்டதனால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகின.
1981ல் எரியூட்டப்பட்டு மறுபடி மீளக் கட்டியெழுப்பட்ட யாழ் பொது நூலகம் பெப்ரவரி 2003ல் யாழ் நகர முதல்வர் செல்லன் கந்தையனால் திறந்து வைக்கப்பட இருந்ததை "எங்கட நூலகத்தை இந்த எளிய சாதி திறந்து வைப்பதா" என்று சொல்லி கொலை மிரட்டல் மூலம் தடுத்து மேட்டுக்குடிகள் தங்கள் தன்மானத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடத்திற்கு உரிய தகைமைகள் பெற்றிருந்த திருமதி நவமணி சந்திரசேகரம் 23.03.2010ல் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார். அமெரிக்க மிஸனறிகளால் மேட்டுக்குடிகளுக்கென ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரிக்கு ஒரு சாதி குறைந்தவர் அதிபராக வருவதா என்பதனால் அவருக்கு நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் கூட அனுப்பப்படவில்லை. தகைமை குறைந்தவர்கள் இருவருக்கு தொடர்ந்து அப்பதவி வழங்கப்பட்டது. 04.07.2013 திகதியில் அன்றைய ஆளுநரின் நடவடிக்கiயின் பயனாக 23.09.2013ல் இருந்து திருமதி நவமணிக்கு அதிபர் பதவி நியமனம் வழங்கப்பட்ட போது இதனை எதிர்த்து யாழ். நீதிமன்றத்தில் மனுக் கொடுக்கப்பட்டு பதவிக்கு இடைக்காலத் தடையுத்தரவு போடப்பட்டது. யாழ் நீதிமன்றத்தில் வழக்கு இழுபட்டுச் சென்றதன் காரணமாக அவர் கொழும்பு மேன்முறையீட்டு நீதின்றத்தில் மனுப் போட்டு தடை உத்தரவு நீக்கப்பட்டு பதவி நியமனம் வழங்கும்படி 05.05.2014ல் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அத்தீர்ப்பை அசட்டை செய்த வடமாகாண கல்விச் செயலாளரை மேன்முறையீட்டு நீதிமன்றம் 13.06.2014ல் கொழும்புக்கு அழைத்து கடும் உத்தரவு போட்டதன் விளைவாக 16.06.2014ல் இருந்து நவமணி அவர்கள் கல்லூரி அதிபராக பதவி வகிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
மேற்கூறிய அதிபர் பதவி மறுப்பில் திருமதி நவமணிக்கான சம உரிமை மறுப்புக்கு சாதியுடன் ஆணாதிக்க அடக்குமுறையும் சேர்ந்து கொண்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களில் ஏறக்குறைய 50 சத வீதத்தினர் பெண்களாவர். ஆனால் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகள் பற்றி பேசுபவர்கள்-கலந்துரையாடுபவர்கள்-குரல் கொடுப்பவர்கள் மத்தியில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏதாவது உள்ளதா? எங்களுக்குள்ளேயே பெண்கள் மீதான வன்முறைகள்-அடக்குமுறைகள்-அடிமைச் சம்பிரதாயங்களைக் கட்டிக் காத்தபடி நாம் "சமஷ்டி" கோருவதில் நீதி நியாயம் உண்டா? சந்தனப் பொட்டும் பட்டு வேட்டியும் சரிகைச் சால்வையும் அணிந்து விளங்கும் எமது ஆணாதிக்க கலாச்சாரத்தின் கீழ் பெண்கள் தலை குனிந்து பேசா மடந்தையராய் அடங்கியொடுங்கி அடிமைகளாக வாழ வைப்பதற்காகவா இந்த "சமஷ்டி"க் கோரிக்கை.
"சமஷ்டி" இல்லாத நிலையிலேயே சாதி கட்டுமானங்களை கட்டிக் காக்க வேண்டி சிங்கள அரச ஆணைகளை மீறிச் செயற்படுவதும் அவற்றிற்கு எதிராக கோடேறி வழக்காடுவதும் இவர்களால் முடியுமானால் "சமஷ்டி" ஆட்சி கையில் கிடைத்தால் சாதாரண தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளின் கதி என்னவாக இருக்கும்?
"நன்கு படித்தவர்களுக்கான பொருளாதாரம்" என்பதே இன்றைய நல்லாட்சி அரசு முன் வைத்துள்ள "வரவு-செலவு"திட்டத்தின் இலக்கு ஆகும். அப்படியாயின் படிக்காத பாமர-பாட்டாளி மக்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பு?
"கல்வி காசுள்ளவர்களுக்கே" என்கிற புதிய வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக எமக்கு ஏதாவது தெரியுமா? அல்லது தெரியப்படுத்தப்பட்டுள்ளதா? சுகாதாரம்-விவசாயம்-மீன்பிடி-சுற்றாடல் பாதுகாப்பு-வேலைவாய்ப்பு-சுயதொழில்' தொடர்பான விடயங்களில் நாட்டு மக்களுக்குரிய சாதக-பாதகங்கள் பற்றி-அனைத்து மக்களுக்கான சம வாய்பு;புக்கள் பற்றி "சமஷ்டி" கோரும் எம்மிடையே ஏதாவது உரையாடல்-அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா?
"சம உரிமை" என்ற வார்த்தைக்கு சாணி பூசும் கலாச்சாரம் கொண்ட எமக்கு "சமஷ்டி" ஆட்சியில் சந்தோஷமாக வாழக்கூடிய சாத்தியங்கள் உண்டா? சம உரிமையை மறுத்தபடி கோரப்படும் "சமஷ்டி" அரசமைப்பில் அடக்கி ஒடுக்கி மக்களை நசுக்கும் அதிகாரங்களின் மொழியில் மாற்றம் ஏற்படுமே தவிர எமது இன்றைய வாழ்வின் துன்பங்கள்- துயரங்கள்-அவலங்கள்-அடிமைத்தனங்கள் எதுவும் மாறாது.
எனவே தமிழ்ப் பேசும் மக்களாகிய நாம் அரசியலை நமது கையில் எடுக்கவேண்டும். புதிய அரசியல் சாசன வரைவுக்கான கருத்துக்கள் ஒதுக்கப்பட்ட-ஓரம்கட்டப்பட்ட-அடக்கியொடுக்கப்பட்ட-பாதிக்கப்பட்ட-பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படல் வேண்டும். அது குடாநாட்டுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் இலங்கையின் அனைத்துப் பிரிவு மக்களுடனும் பரிமாறல் செய்யப்படல் வேண்டும்.
இதில் நல்லவர்கள்-நாட்டு நலன் விரும்பிகள்-மனிதநேயம் உள்ளோர்-கற்றறிந்த சான்றோர் ஆகியோரது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நன்றி* புதிய ஜனநாயக மக்கள் முண்ணனி
0 commentaires :
Post a Comment