2/06/2016

காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த மாநாடு



கா த்தான்குடி மீடியா போர த்தின் 16வது வருடாந்த மாநாடு இன்று (6.2.2016) சனிக்கிழமையன்று காத்தான்குடியில் நடைபெறுகிறது.காத்தான்குடி மீடியா போரம் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் முயற்சியினாலும் அவர் எடுத்த நடவடிக்கையினாலும் இந்த போரம் ஆரம்பிக்கப்பட்டது.காத்தான்குடியிலுள்ள பல்வேறு ஊடகங்களிலும் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக ஊடகவியலாளர்களின் நலன் கருதி காத்தான்குடி மீடியா போரம் உருவாக்கப்பட்டது.ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் ஐக்கியம் ஒற்றுமை என்பவற்றை இலக்காக கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்களாக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, மற்றும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.ஏ.மஜீத் (மதியன்பன்) ஆசிரியர்களான ஆர்.ரி.எம்.அனஸ், ஐ.ஆதம்லெவ்வை, எம்.ஐ.எம்.அன்சார் ஏ.எச்.மகம்மது ஆகியோர் இருந்து செயற்பட்டுள்ளனர்.


காத்தான்குடி மீடியா போரம் தனது செயற்பாட்டினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்த நிலையில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைவராகவும் ஊடகவியலாளர் மௌலவி எஸ.எம்.எம்.முஸ்தபா செயலாளராகவும் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் பொருளாளராகவும் மற்றும் எட்டு நிர்வாக உறுப்பினர்களைக் கொண்ட நிருவாக கட்டமைப்புடன் செயற்பட்டு வந்தது.

பின்னர் 2014ம் ஆண்டு இதன் தலைவராக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் செயலாளராக ஊடகவியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் பொருளாளராக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் ஆகியோருடன் நிருவாக உறுப்பினர்களாக சில ஊடகவியலாளர்கள் இருந்து இந்த அமைப்பை வழிநடாத்தினர்.
இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் இந்த போரத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ் மற்றும் செயலாளராக ஊடகவியலாளர் எம்.எச்.எம்.அன்வர், பொருளாளராக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான், உப தலைவராக ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, உப செயலாளராக எம்.ஐ.எம்.நசார் , தகவல் பணிப்பாளராக எம்.ஐ.எம்.கமால்தீன் மற்றும் நிருவாக உறுப்பினர்களாக 11 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச் சபை உறுப்பினர்களாக 24 பேரும் உள்ளனர்.
காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள மேற்படி உறுப்பினர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாகவும், பல்வேறு அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் பிராந்திய செய்தியாளர்களாகவும், குறுஞ்செய்திச்சேவை ஊடகவியலாளர்களாகவும், பிராந்திய செய்தி இணையத்தளங்களின் ஆசிரியர்களாகவும் அதன் செய்தியாளர்களாகவுமுள்ளனர்.
மேற்படி காத்தான்குடி மீடியா போரம் தனித்துவ மிக்க ஒரு அமைப்பாக காத்தான்குடியில் செயற்பட்டு வருகின்றது.தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் உள்ள ஊடக அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுடன் சிறந்த ஊடக உறவினை பேணி வருகின்றது.
நமது நாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையில் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தனர்.இந்த சூழ் நிலையிலும் கூட காத்தான்குடி மீடியா போரம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து தனது ஊடகப் பயணத்தினை தொடர்ந்தே வந்துள்ளது.
சுனாமி அனர்த்தம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்த அனர்த்தம் போன்ற காலங்களிலும் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் ஊடகப் பணி என்பது மிகவும் காத்திரமாக இருந்து வந்துள்ளது.பிராந்திய மட்டத்தில் எதிர் நோக்கிய ஊடக ரீதியான சவால்களையும் காத்தான்குடி மீடியா போரம் காத்திரமாக எதிர் கொண்டதையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
கடந்த காலங்களில் ஊடகம் தொடர்பான பல் வேறு செயலமர்வுகளை காத்தான்குடி மீடியா போரம் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர் ,யுவதிகளுக்கு நடாத்தியுள்ளது.
அத்தோடு காலத்துக்குக் காலம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல செயலமர்வுகளையும் நடாத்தியுள்ளது.
வறுமையினால் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு கொலைக்குற்றச் சாட்டு ஒன்றில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் ஒன்றுசேர்க்கப்பட்டு தொகுத்து 'தேசத்தின் புதல்வி றிசானா நபீக்' எனும் புத்தக மொன்றும் காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்டு அந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் றிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும்.
அதே போன்று சிகரம் மண்முனைப்பற்று மற்றும் புதிய காத்தான்குடி பிரசேதங்களிலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொடர்ந்து வருடாந்தம் காத்தான்குடி மீடியா போரத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலொன்றை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தியது.
இவ்வாறு சிறப்பாக பிராந்திய மட்டத்தில் செயற்பட்டு வரும் காத்தான்குடி மீடியா போரம் தனது 16வது ஆண்டு வருடாந்த மாநாட்டினை இன்று காத்தான்குடி ஜுமைறா பெலஸில் நடாத்தவுள்ளது.
போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் விசேட விருந்தினராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் றஊப் ஏ மஜீட் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் காத்தான்குடியிலுள்ள முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் நினைவு மலர் ஒன்று வெளியீட்டு வைக்கப்படவுள்ளதுடன் காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளில் கடந்த ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் பாராட்டப்படவுள்ளதுடன் போரத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுமுள்ளனர்.
இந்த வைபவத்தில் தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.ஜி.எம்.தௌபீக்கின் சிறப்புரையும் இடமபெறவுள்ளது
இந்த மாநாட்டையொட்டி இன்று காலை தொடக்கம் மாலை வரை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 'இளம் செய்தியாளர்களை உருவாக்குவோம்' எனும் தலைப்பில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான ஒருநாள் செயலமர்வும் நடைபெறவுள்ளது.
இந்த செயலமர்வில்' விடிவெள்ளி' பத்திரிகையின் பிரதம ஆசியர் எம்.பி.எம்.பைறூஸ் சமூக ஊடகங்கள் பற்றியும், மற்றும் காத்தான்குடி பெண் எழுத்தாளர் ஜனாபா பாத்தும்மா முகம்மட் 'கட்டுரை, கவிதை ,சிறுகதை எழுதுவது எப்படி' என்பன பற்றியும் அருள் சஞ்சித் 'ஊடகத்துறையில் புகைப்படக்கலை' எனும் தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர்.
இந்த செயலமர்வின் இறுதியில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

0 commentaires :

Post a Comment