2/22/2016

தொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்று 100வது நாள்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரி – ரணில் கூட்டணியினர் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் திரும்ப வந்து செயற்படலாம் என உறுதி அளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, மகிந்த அரசால் அரசியல் காரணமாக உயிராபத்தை எதிர் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வசித்த குமார் குணரத்தினம் நாட்டிற்கு திரும்பி வந்திருந்தார். மேலும் தனது இலங்கை பிராஜாவுரிமையினை மீளப்பெற குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்பித்திருந்தார். குடிவரவு திணைக்களம் அவரின் விண்ணப்பத்திற்க்கான பதிலை வழங்காது மௌனத்தை கடைப்பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது நோயுற்றிருந்த தாயாரை பார்வையிட சென்றிருந்த வேளையில் கேகாலை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மைத்திரி  - ரணில் கூட்டாட்சி தேர்தல் கால வாக்குறுதிக்கு மாறாக இன்று அவரை ஒரு அரசியல் கைதியாக சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது.
குமார் குணரத்தினத்தை கைது செய்ததனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்து அவரின் அரசியல் செய்யும் உரிமையினை உறுதி செய்யுமாறு கோரி மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெறும் தொடர் எதிர்ப்பு சத்தியாகக்கிரகப் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இன்றைய தினம் குமார் குணரத்தினத்தினை உடனடியாக விடுதலை செய்து, அரசு உறுதியளித்த ஜனநாயகத்தை நிலைநாட்ட கோரி இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு போராட்டம் சத்தியாகக்கிரக மேடையில் இடம்பெற்றது.

0 commentaires :

Post a Comment