தமிழ்நாட்டின் நாகைமாவட்டம் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்கிற தலித் முதியவர் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதுமை காரணமாக மரணமடைந்தார்.
அவரது சடலத்தை வழக்கமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை மோசமாக இருந்ததால் அருகில் இருக்கும் வழுவூர் என்கிற ஊருக்குள் இருக்கும் சாலை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அவரது குடும்பத்தவரும் உறவினர்களும் முயன்றனர்.
ஆனால் அதற்கு வழுவூர்க்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழுவூர் என்பது தலித் அல்லாதவர்கள் வசிக்கும் ஊர். அந்த ஊரில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மரணமடைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழுவூர்ப்பாதை வழியாக செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும்படியும், அதற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கும்படியும் உத்தரவிட்டது.
ஆனாலும் வழுவூர்க்காரர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பின்னணியில் காவல்துறையினர் செல்லமுத்துவின் சடலத்தை பலவந்தமாகக் கைப்பற்றி ஊருக்கு வெளியில் இருக்கும் பழைய பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதை எதிர்த்த இறந்தவர்களின் உறவினர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழோசைக்கு விவரித்தார் மயிலாடுதுறையில் இருக்கும் செய்தியாளர் ஏ இளஞ்செழியன்.
0 commentaires :
Post a Comment