12/04/2015

வடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு முறைப்பாடு..!!

photoநிதிப் பிரமாணக் கோவைகளிற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிதி கையாளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரினால் 01.12.2015ம் திகதிய கடித்தின் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Joule Power மற்றும் Beta Power ஆகிய நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபை பளை பிரதேசத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அந் நிறுவனத்தின் வணிக நிதி நிறுவனங்களிற்கான சமூகக் கடப்பாடுகள் செயற்றிட்டத்தின் (Corporate Social Responsibilities) கீழ் கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை ரூபா 20 மில்லியன் பெறுமதியான நீர்த்தாங்கி வாகனங்களைப் பெற்றுக் கொண்டதோடு, இவ்வருடம் அவர்களிடமிருந்து பெற்ற ரூபா 20 மில்லியன் பணத்தை மாகாண சபையின் திறைசேரிக் கணக்கில் இட்டு சபையின் அனுமதியுடன் அதற்கான செலவீனங்களைச் செய்யாதது நிதிப்பிரமாணக் கோவைகளிற்கு முற்றிலும் முரணானதென அக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், அந் நிதியானது பிரதம செயலாளரின் பிறிதொரு கணக்கின் மூலம் கையாளப்படுவதாகக் கூறியிருந்தார்.
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் திறைசேரியில் வைப்பிலிடப்படாமலும், செலவீனம் சபையினால் அங்கீகரிக்கப்படாமலும் இந் நிதி கையாளப்படுவது நிதிப்பிரமாணக் கோவைக்கு முற்றிலும் முரணானது என்று எதிர்க்கட்சித் தலைவரினால் எடுத்துக் கூறப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தும் அந் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ரூபா 20 மில்லியன் நிதி தனியாக பிரதம செயலாளரின் கணக்கு ஒன்றில் வைத்து செலவீனம் செய்யப்படுகின்றது என்று 01.09.2015ம் திகதிய விவாதத்தின் போது முதலமைச்சரினால் எடுத்துக் கூறப்பட்டமையும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடு ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம்
வடக்கு மாகாணசபை

0 commentaires :

Post a Comment