12/04/2015

தோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையில் திலகராஜ் எம்.பி

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு    சேவை வழங்குவதில் தடையாக உள்ள சட்ட சரத்துகளை தீர்க்க கோரி ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை சமர்ப்பிப்பு.   எம்.திலகராஜ்  எம்.பி  கொண்டுவந்த பிரேரணைக்கு சபையில்  சாதகமான பதில் 

பிரதேச  சபைகளுக்கு  தோட்டப்பகுதி மக்கள் வாக்களித்தாலும் அவர்களின்   பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த பிரதேச சபைகளுக்கு உரித்தான நிதி வளங்களைக்  கொண்டு 'தோட்டப்பகுதிக்கு" சேவை வழங்குவதில் நடைமுறையிலுள்ள 1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச  சபைகள் சட்டத்தில் சில சிக்கல்கள் தடைகள் காணப்படுகின்றன.   

அந்த சட்ட சரத்துக்களை நீக்கி தோட்டங்களும் கிராமங்களாக அங்கீகரிக்க வேண்டும் என  தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணி யின் நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான எம் திலகராஜ் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை  நேற்று முன்தினம் (01-12-2015) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.               

பிரேரணைக்கு  ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், அ.அரவிந்த குமார்  மற்றும் வடிவேல் சுரெஷ் ஆகியோர் உரையாற்றியதுடன்  பிரேரணைக்கு பதில் அளித்து  உரையாற்றிய மாகாண சபைகள்    உள்ளுராட்சி அமைச்சர்   பைசர் முஸ்தபா மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாண  ஆகியோர்  தேசிய ஒற்றுமைக்கும் சமத்துத்துக்குமான இந்த பிரேரணையை  வரவேற்பதாகவும் எதிர்வரும் அமைச்சரவையில் இதற்கான பத்திரத்தை தாக்கல் செய்து இரண்டு மாதங்களளுக்குள் சட்டத்திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.  

ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆற்றிய உரையில்  கருத்து தெரிவிக்கையில் ,

இந்த  உச்ச சபையிலே இன்று நான் முன்வைத்திருக்கும் தோட்டங்களை கிராமங்களாக அங்கீகரிக்கக் கோரும்,   அதற்கு தடையாக   உள்ள  சட்டத்திருத்தங்களைக் கோரும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை இந்த சபைக்கோ அல்லது அமைச்சு மட்ட கலந்துரையாடலுக்கோ ஒரு புதிய விடயமல்ல.

புதிய நல்லாட்சி அரசாங்கம் திறந்த மனதுடன் முன்வைத்திருக்கும் யோசனைகள் பல கிராமங்களை தரம் உயரத்துவதாகும்.  கிராம ராஜ்ஜயம், கொத்தணி கிராமங்கள் என பல புதிய திட்டங்களை இன்றும் கூட மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்த சபையிலே விஷேட உரை ஒன்றின் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார்.   

அதேபோல  தோட்டங்களையும் கிராமங்களாக மாற்றும் யோசனையை முன்வைத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும்   ‘தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சு"  என இருந்த     அமைச்சினை ‘மலைநாட்டு புதிய கிராமங்கள்   உட்கட்டமைப்பு  மற்றும் சமூக  அபிவிருத்தி அமைச்சு’  என விரிவுபடுத்தியுள்ளார்கள்.   

இதற்காக மலையக மக்கள் சார்பில் நான்  அதிமேதகு ஜனாதிபதி பிரதமர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பும் முன்னெடுப்புகளும் அர்த்தமுள்ளதான  செயற்றிட்டமாக  நடைபெறவேண்டுமாயின் தோட்டங்கள் கிராமங்களாக மாறுவதில்  நிலவக் கூடிய சிறிய தடைகளை கலைவதே எனது பிரேரணையின் பிரதான நோக்கமாக அமைகின்றது. 

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இந்த நாட்டிலே சமூகக் கட்டுமானம் என்பது மூன்று நிலைப்பட்டதாக அமைந்து காணப்படுகின்றது.    

எமது நாட்டின் சமூக பொருளாதார குறிகாட்டிகள்   கிராமங்கள், நகரங்கள், தோட்டங்கள் என்பதாகவே மத்திய இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்திலே  பதிவு செய்யப்படுகின்றன.     

இதற்கு ஆதாரமாக ஒரு அட்டவணையை மத்திய வங்கி ஆண்டறிக்கையில் இருந்து சமர்ப்பிக்கின்றேன்.   இந்த தோட்டத்துறை என்பது காலனித்துவ ஆட்சியுடன் உருவான ஒரு துறை. 

இது தொழில்துறை மட்டத்தில் பெருந்தோட்டம் (Plantation )  என்றும் அந்த   தொழில்துறை சார்ந்து நிற்கின்ற மக்கள் வாழ்கின்ற பிரதேசம் தோட்டம் Estate  என்றும்  அழைக்கப்படுகின்றது.

அங்கு வாழும்   மக்களின் சமூக நிர்வாகமும் இந்த பெருந்தோட்ட நிர்வாக அலகுகளினாலேயே நிர்வகிக்கப்படும் கலாசாரம் ஆண்டாண்டு காலமாக இடம்பெற்று வருகின்றமை காரணமாக இந்த தோட்ட மக்கள் தொடர்ந்தும் தேசிய அரச பொது நிர்வாக முறைமைகளில் (Public administration) இருந்து துண்டிக்கப்பட்டவர்களாக, முழுமையாக உள்வாங்கப் படாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய 10 இலட்சம் ஆகும்.

நமது  நாடு ஜனநாயக சோசலிஷ குடியரசு என்கின்றோம்.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் என மூன்று நிலைப்பட்டு  மக்கள் தமது பிரதிநிதிகளை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்து வருகிறார்கள்.  

நான் குறிப்பிடும்,  நான் பிரதானமாக பிரதிநிதித்துவம் செய்யும் தோட்டப்பகுதி மக்கள் இந்த மூன்று மக்கள் பிரதிநிதிகள்   சபைக்கும் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் அதாவது இந்த நாடு சுதந்திரமடைந்ததோடு இந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு 1977க்கு பின்னர் சிறுக சிறுக அது மீளவும் வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பதாகவே இந்த மக்கள் வாக்குரிமை பெற்ற சோக வரலாறு பலரும் அறிந்ததே.

இன்றைய சபை  ஒத்திவைப்பு வேளை பிரேரணை மூலம்  இந்த மக்களின் பின்னணியில் உள்ள இன்னமொரு சோகத்தை இந்த உச்ச சபையிலே முன்வைத்து அதற்கு தீர்வை கோருகின்றேன். அந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இது வரலாற்றுக் கடமை என நினைக்கின்றேன்.

தோட்டப்பகுதி மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றங்களில்,  பிரதேச சபைகள் பிரதான ஒரு அங்கம். அதிகளவாக அடித்தட்டு மக்கள் பங்குகொள்ளும் ஒரு ஜனநாயக சபையாக அது அமைந்துள்ளது.

ஆனால் இந்த பிரதேச    சபைகளுக்கு தோட்டப்பகுதி மக்கள் வாக்களித்தாலும் அவர்களின்  பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த பிரதேச சபைகளுக்கு உரித்தான நிதி வளங்களைக்  கொண்டு 'தோட்டப்பகுதிக்கு" சேவை வழங்குவதில் நடைமுறையிலுள்ள 1987ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச  சபைகள் சட்டத்தில் சில சிக்கல்கள் தடைகள் காணப்படுகின்றன.

பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களினதோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களினதோ பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கங்களின் ஊடாக இந்த பிரதேசசபைகளின் ஊடாக  சேவை முன்னெடுக்கப்படுகின்றது.   அதே நேரம் தோட்டங்கள் செறிவாக உள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா போன்ற பிரதேசசபைகளில் சில பணிகள் பிரதேச சபைகளின் நேரடி நிதியீட்டத்தில் சேவையாற்றுவது தவிர்க்க முடியாத வகையில் இடம்பெற்றிருக்கக்கூடும்.

ஆனால், பிரச்சினை எங்கே வருகின்றது என்றால் தோட்டப்பகுதிக்கு பிரதேச சபைகளின் நிதியின் ஊடாகசேவை வழங்க முடியாது என காரணம் காட்டி நீதிமன்ற அனுமதியுடன் ஒரு சபை கலைக்கப்பட்ட வரலாறு இந்த நாட்டிலே இடம்பெற்றுள்ளது.

இது பாரிய ஜனநாயக உரிமை மீறல்.   ஒரு நாட்டின் பிரஜை தனது வாக்கினைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட   ஒரு சபையின் ஊடாக உரிய சேவையினைப் பெற்றுக்கொள்ள தடையாக  அந்த சபைக்குரிய சட்டமே காரணமாக அமைகின்றபோது அதனை ஒரு அடிப்படை உரிமை மீறலாகவும் ஜனநாயக உரிமை மறுப்பாகவும் கொள்ள முடியும்.

2006ஆம் ஆண்டு    கண்டி மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 'உடபலாத்த"   பிரதேச சபை கலைக்கப்பட்டமை இதற்கு பெரிய சான்றாகும்.   

அந்த  பிரதேச  சபையின்  இரு பிரதேச  உறுப்பினர்களான   அழகப்பன் நடராஜன்  மற்றும் பெருமாள் புவனேஷ்வரன்   ஆகிய இருவருக்கும் எதிராக   குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு  நீதி மன்ற ஆலோசனைப் பெற்று  மத்திய மாகாண சபை    தனது  அதிகாரங்களைக்   கொண்டு   உடபலாத்தை   பிரதேச சபையை கலைத்திருந்தது.    அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்  பத்து.  அதில்     ஒன்றை நான் இந்த சபையிலே எடுத்துக் கூறுகின்றேன்.

அதுதான்  குற்றச்சாட்டு 5ல் 3வது குற்றமான  நிவ் பீக்கொக் தோட்டத்திற்கு  தண்ணீர் தாங்கி  கட்டியமைக்காக  4958/=  ரூபா பிரதேச சபை நிதியை  பயன்படுத்தியதாகும்.

பிரதேச சபை     நிதி 4958/=  ரூபாவினை தோட்டப்பகுதியில் தண்ணீர்த்தாங்கி  அமைத்தமை பிரதேச சட்டத்திற்கு புறம்பானது என காரணம் காட்டி   அந்த சபை கலைக்கப்படுமிடத்து அந்த சட்டம்  திருத்தப்படல் வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது.

(இந்த சபை   கலைப்பு தொடர்பாக  மத்திய மாகாண சபை கொண்டு வந்த  குற்றப்பத்திரிகைiயின் பிரதியையும்  அந்த சபை கலைப்பின் பின்னணியை விளக்கும் விரிவான உரையின் எனது பகுதியையும் நான் ஹன்சாட் பதிவுகளுக்காக சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். )

1987 ஆம் ஆண்டு 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் 19வது பிரிவின் உரோமன் இலக்கத்தில் குறிப்பிப்படும் 14 வது பகுதி, 22 வது பகுதி மற்றும் 33 வது பிரிவு ஆகிய சரத்துகளைக் காரணம் காட்டி உடபலாத்த பிரதேச சபையை கலைக்கும் மத்திய மாகாண சபையின்  கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வாறு கலைக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு பிரதேசசபை தேர்தல் வரும்வரை உடபலாத்த  பிரதேச சபை செயலாளரின் பொறுப்பில் இயங்கிவந்தது. அங்கு மக்கள் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது.

நாம் அங்கம் வகிக்கும் பாராளுமன்றம் ஒரு சட்டவாக்கசபை என்ற வகையிலே நாம் எல்லாம் சட்டவாக்குனர்கள் என்ற வகையிலே இந்த சட்ட சிக்கலை உள்வாங்கி புரிந்துகொண்டு அவற்றை திருத்துவதற்கு முனைதல் வேண்டும் என்பதே எனது இந்த பிரேரணையின் நோக்கமாகும்.

இன்று மாகாண சபைகள்   உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பொறுப்பினை வகிக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபா கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளையம் பெற்று தனது முதலாவது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டவர். 

அதேபோல பிரதியமைச்சர் கருணாரத்ன  பரணவிதான                   இரத்தினபுரி    மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்.   இவர்  கொழும்ப பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் மாணவர் அரசியல் அமைப்புகளில் எங்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்ட எங்கள் சக தோழர்.   

இவர்கள் இருவருக்கும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தெரியும். எனவே எனது பிரேரணையின் அவசியம் புரிந்து அதனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஒரு வேளை சட்ட திருத்தம்  ஒன்றை கொண்டுவருவதற்கு சபை ஒத்திவைப்பு வேளை பிரேணை அதிகபட்சமானதாகக் கூட தெரியலாம். அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து  இலகுவாக மேற்கொண்டிருக்க முடியும்.

2007 ஆண்டு நடைபெற்ற இந்த  சம்பவத்தின் பின்னணியில்    அப்படியான முயற்சிகள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டபோதும் கூட அது நடைமுறைக்கு வரவில்லை என்பதை நான் மிகுந்த கவலையோடு இந்த உச்ச சபையிலே தெரிவிக்கின்றேன்.

கடந்த அரசாங்கத்திலே அப்போதைய ஆளும் கட்சி பிரதான அமைப்பாளராக, இருந்த தற்போதைய பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்திருக்கும் மதிப்புக்குரிய சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையிலே தெரிவுக்குழு                          நியமிக்கப்பட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.    

ஆனால் அந்த குழு பரிந்துரை செய்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வந்துடன் அது தள்ளிப்போடப்பட்ட ஒரு விடயமாக மாறிவிட்டது.

கடந்த   ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு முன்னாள் அமைச்சர் தற்போதைய உறுப்பினர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு அளப்பரியது.   

இப்போது அவர் எதிர்கட்சி உறுப்பினர், என்றாலும் நான் ஆளும்கட்சி உறுப்பினர் என்றாலும்  அவரது பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

நான் சிவில் சமூக பிரதிநிதியாக எமது சமூக பிரதிநிதிகளுள் ஒருவரான கண்டி சமூக அபிவிருத்தி நிறுவன தலைவர் பெ.முத்துலிங்கம் அவர்களுடன்   அவரைச் சந்தித்திருந்தேன்.   

எங்கள் இருவரையும் அழைத்து வந்த அப்போதைய அரச கரும மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் பழனி திகாம்பரம்                   அவர்கள் தெரிவுக்குழுவின் தலைவரான கௌரவ உறுப்பினர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கு விளக்குமாறு கோரியிருந்தார்.

பாராளுமன்ற குழுக்கூட்டங்கள் நடைபெறும் குழு அறைக்கு முன்பாக உள்ள வரவேற்பு கதிரைகளில் அமர்ந்து தெரிவுக்குழுவின் தலைவரான தினேஷ் குணவர்தன அவர்களுக்கு பிரச்சினைகளை எடுத்துக்கூறியமை நினைவு இருக்கிறது. 

பிரச்சினைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட கௌரவ உறுப்பினர் தினேஷ் தன் குணவர்தன அவர்கள் போதுமான சட்டத்திருத்தங்களை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக கொண்டு வருவதற்கு அரப்பணிப்புடன் செயற்பட்டார்.    

அன்று  ஒரு கட்சியின் செயலாளராக சிவில்       சமூக பிரதிநிதியாக பாராளுமன்ற குழு அறையின் கதிரையில் அமர்ந்து நான் அன்று எடுத்த   முயற்சி இன்னும் கைகூடவில்லை.

இன்று   அதே பிரச்சினையை   பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்து இந்த உச்ச சபையிலே எடுத்துச் சொல்லும்   வாய்ப்பினை   எனக்கு எமது மக்கள் வழங்கியிருக்கிறார்கள். 

அவர்களுக்கு உறுதியளித்தவாறு அவர்களின் பிரதிநிதி என்றவகையில் ஆதாரங்களுடன் எனது பிரேராணையை முன்வைத்துள்ளேன். இந்த வாய்ப்பினை வழங்கிய நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன்.

அப்போதைய உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளராக   கடமையாற்றிய ஆர்.ஏ.ஜே.கே.ரணவக்க அவர்கள் தெரிவுக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதம் மற்றும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டிய  பகுதிகளின் வரைபு ஆகியவற்றை அப்போது இந்த சபையிலே அங்கம் வகிதத்த   மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதிகளை அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது  அமைச்சராகவிருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சராகவிருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் அப்போதைய பிரதியமைச்சராகவிருந்து இப்போது கல்வி ராஜாங்க அமைச்சராகவிருக்கும் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அப்போதைய பிரதி அமைச்சராகவிருந்து இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவிருக்கும் பழனி திகாம்பரம்  முன்னாள்   பிரதியமைச்சர் கௌரவ பிரபா கணேசன் மற்றும் முன்னாள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த  கடிதத்தின் பிரதி என்  கைவசமுள்ளது.

(அதனையும் நான் மேலே குறிப்பிட்ட  பிரதேச சபை சட்டத்தின் திருத்தங்களையும்  உச்ச சபையிலே சமர்ப்பிப்பதோடு    அவற்றை   ஹன்சாட் அறிக்கையிலே  சேர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் )

இப்போது  நாங்கள்  வரவு செலவுதிட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால்,எதிர்வரும் சனவரியுடன்  நாங்கள்   பேசப்போகின்ற பிரதான தலைப்பாக மாறப்போவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பற்றிய விடயங்களே. அவை 'புதிய முறையிலா பழைய முறையிலா" எனும் விவாதம் தொடரும் '.. அது பற்றிய பேசுவதற்கும் எனக்கு பல விடயங்கள் உண்டு.

அதற்கெல்லாம் முன்பு எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் பிரதேச சபைகள் சட்டம் இடமளிக்காதபோது தோட்டப்பகுதி மக்கள் பிரதேச சபைகளின் மூலம் நன்மை அடைய முடியாது என்ற வகையில் மிகவும் துரிதமாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பதாக அமுலுக்கு வரும் வகையில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர்    அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தேவையான             திருத்தங்களை இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது நாட்டிலே சட்டங்களோ.. சட்டத்திருத்தங்களோ  கொண்டுவரப்படுமிடத்து சிங்கள தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும் என்கின்ற அடிப்படையில் நான்   பிரேரணையூடாக முன்வைத்து கோரிக்கை விடுக்கும் சட்டத்திருத்தங்களை சிங்களத்திலும்  ஆவணமாக இந்த சபையிலே சமர்ப்பிக்கின்றேன். 

அதே நேரம்  என்னுடைய  உரைகளில்   தோட்டம் பற்றி அதிகம் பிரஷ்தாபிக்கப்படுவதற்கான நியாயப்பாடுகளும் இன்றைய எனது பிரேரணையூடாக வெளிப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.  

இந்த நாட்டுக்காக ஆண்டாண்டுகளாக உழைத்தும் இந்த நாட்டில் தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொள்ள தத்தளித்துக்கொண்டிருக்கும் தோட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எனது கடப்பாடு என்றும் கருதுகின்றேன்.

இவ்வாறெல்லாம் சட்டங்களினாலும் நடை முறைகளினாலும்,  பின்தள்ளப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல. அவர்களுக்கென்று தனித்துவமான வரலாறு உண்டு. 

நான் பிறந்து வளர்ந்தது ஒரு தோட்டம்.   அந்த    மடகொம்பரை  தோட்டத்தில் இருந்து தெரிவாகியிருக்கும் 4வது பாடாளுமன்ற உறுப்பினர் நான் என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

1947 ஆம் ஆண்டு சி.வி.வேலுப்பிள்ளை அவர்களும், 1988 ல் எம்.எஸ்.செல்லச்சாமி அவர்களும் 2010 ஆண்டில் பழனி திகாம்பரம் அவர்களும் 2015 ஆண்டு பழனி திகாம்பரம் அவர்களுடன் இம்முறை   நானுமாக   இருவர்   ஒரு தோட்டத்தில்    இருந்து    வந்து   இந்த உச்ச சபையிலே அங்கம் வகிக்கின்றோம் என்பதை நினைவுபடுத்தி, எனது பிரேரணையின் தாற்பரியத்தையும் நியாயத்தையும் புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment