12/12/2015

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பதற்கான நகல் திட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பதற்கான நகல் திட்டத்தை, நுவரெலிய மாவட்ட செயலாளர் திருமதி. ஹெலன் மீகஸ்முல்ல, தன்னிடம் கையளித்துள்ளதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 
நவம்பர் 18ஆம் திகதியன்று சில விடயங்களை அமைச்சரவையில் முன்மொழிந்தார். அந்த முன்மொழிவுகளில் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அடங்கிய புதிய உத்தேச பிரதேச சபைகள் அமைவு தொடர்பான நகல் திட்டமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் எஸ். அபேசிங்க, தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்கவுக்கு, டிசம்பர் 3ஆம் திகதி இந்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் கடிதமொன்றை எழுதியிருந்தார். 

நுவரேலியா மாவட்டத்தில் வாழும் 706,588 ஜனத்தொகையில் தமிழ் மக்கள் 57.69 சதவீதமும் சிங்களவர்கள் 39.60 சதவீதமும் ,முஸ்லிம்கள் 2.47 சதவீதமும்  என்றடிப்படையில் இன்று வாழ்கிறார்கள். எனவே நுவரெலியா மாவட்டம் மலையக தமிழ் இந்திய வம்சாவளி மக்களின் இதயமாகும். எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் 6,500 ஜனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரெலியா மாவட்டத்தில்  200,000க்கு மேற்பட்ட ஜனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை என்ற நிலைமையே இருந்து வருகிறது. இது இந்த மாவட்ட மக்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். 

இதன்படி, அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நுவரெலியா, வலப்பனை, நோர்வூட், மதுரட்ட, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன ஆகிய பத்து புதிய பிரதேச சபைகள் நுவரெலிய மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விடயம், கொள்கையளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

0 commentaires :

Post a Comment