12/29/2015

வடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை: அமைச்சர்

Afficher l'image d'origineஇலங்கை வடமாகாணத்தில் மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெரும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறியுள்ளார்.
இங்குள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுகின்றன. அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே நிலவுவதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தாதியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல வைத்தியப் பிரிவுகளை மக்களுக்குத் திருப்திகரமான முறையில் நடத்திச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கையாக ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்திருக்கின்ற போதிலும், ஆளணி பற்றாக்குறையைப் போக்க முடியாதிருப்பதாவும் அமைச்சர் சத்தியலிங்கம் விவரித்தார்.
மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்காக ஓய்வு பெற்றவர்களைக் கண்டறிவதும்கூட கடினமான பணியாகியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, வைத்தியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வைத்தியர் இல்லாத வைத்தியசாலைகளுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களை வாரத்திற்கு இரண்டோ மூன்று மணித்தியாலங்கள் அங்கு சென்று பணியாற்றும் வகையில் ஒழுங்குகள் செய்திருப்பதாகவும் ஆனாலும் அதுவும் வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெரிய அளவில் பயன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியத் துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையைப் போக்குவதற்காக மாதம்தோறும் நடைபெறும் மாகாண சபைகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கான கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருவதாகவும், அவரும் அவ்வப்போது சிறிய அளவில் நியமனங்களை வழங்கி வருவதாகவும், எனினும் அது தேவையைப் பூர்த்தி செய்யப் போதவில்லை என்றும் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தற்போது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள 1200 வைத்தியர்களில் சிலரை வடமாகாணத்திற்கு நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியுடனான கடந்த மாதச் சந்திப்பின் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

0 commentaires :

Post a Comment