12/27/2015

அமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து ஆறு பேர் பலி

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது இருபத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது.
அவ்வூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸுக்கு கிழக்கே மிஸ்ஸிஸிப்பி, டென்னெஸ்ஸி, அர்கன்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் சூறாவளி வீசியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் மேலும் மோசமான வானிலை சீற்றங்கள் ஏற்படலாம் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் மக்கள், விமான நிலையத் தாமதங்கள், சாலையில் வெள்ளப்பெருக்கு போன்ற இடர்களைச் சந்திக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

0 commentaires :

Post a Comment