திருமதி அருண். விஜயராணி மறைவு
சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.
கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர்
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ
--- உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு )
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ
--- உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு )
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.
இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்; மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.
1989 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.
மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால் அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக அண்மையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: முருகபூபதி --- அவுஸ்திரேலியா
கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்
இலங்கை வானொலி ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு
இலங்கை வானொலி ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு
_ முருகபூபதி
( கடந்த ஒக்டோபர் மாதம் தேனீயில் எழுதிய குறிப்புகள் மீண்டும் வாசகர்களின் பார்வைக்கு )
" வணக்கம்.... பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை... வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா..... பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே...?
அதனாலை ஒண்டு சொல்லுறன் கோவியாதையுங்கோ... பாட்டியின்ர பிரதியளை இரண்டு மூண்டா முன்னுக்கே அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி பிழைச்சுப்போகும். தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ "
இக்கடிதம் இலங்கை வானொலி கலையகத்திலிருந்து 08-11-1976 ஆம் திகதி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு. விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர்.
அந்தப்பெண் அப்பொழுது பாட்டியல்ல. இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி. இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.
அக்காலத்தில் பல வானொலி நாடகங்கள் யாழ்ப்பாண பேச்சு உச்சரிப்பில் ஒலிபரப்பாகின. விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.
சமூகம் குறித்த அங்கதம் அதில் வெளிப்பட்டது. அங்கதம் சமூக சீர்திருத்தம் சார்ந்தது. அதனை அக்கால கட்டத்தின் நடைமுறை வாழ்வுடன் அவர் வானொலி நேயர்களுக்கு நயமுடன் வழங்கினார்.
வடக்கில் உரும்பராயைச் சேர்ந்த விஜயராணியின் முதலாவது சிறுகதை ' அவன் வரும்வரை ' இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் 1972 இல் வெளியானது.
தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன என்ற இவர் எழுதிய மற்றும் ஒரு வானொலி நாடகத்தை பின்னாளில் துணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக இயக்கித் தயாரித்து ரூபவாஹினியில் விக்னேஸ்வரன் ஒளிபரப்பினார்.
தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் மக்களிடம் வலிமையான ஊடகமாக செல்வாக்கு செலுத்தியிருந்தது வானொலி. அதிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் இலங்கைத் தமிழ் நேயர்களுக்கு மாத்திரமின்றி இந்தியாவில் தமிழ் நேயர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.
அதற்கான காரணம்: ஒலிபரப்பின் தரம். ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள். ஒலிபரப்பாளர்களின் குரல் வளம். வானொலிகள் இருந்த அனைத்து தமிழ் - முஸ்லிம் இல்லங்களிலும் காலை முதல் இரவு வரையில் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சிகளின் பெயர்ப்பட்டியலே நீளமானது.
இதில் தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்களை மிகவும் ஆகர்சித்த நிகழ்ச்சிகள், வானொலி நாடகங்கள், இசையும் கதையும், மாதர் மற்றும் கிராம சஞ்சிகை, இளைஞர்களுக்கான சங்கநாதம், சிறுவர்களுக்கான சிறுவர்மலர். இவற்றில் ஏராளமான நாடக எழுத்தாளர்கள், வானொலி கதாசிரியர்கள், சிறுவர் இலக்கியம் , சிறுவர் நாடகம், நேயர் கடிதம் எழுதுபர்கள் அறிமுகமானார்கள். அவ்வாறு வானொலி நேயர்களுக்கு அறிமுகமாகியவர் விஜயராணி.
கொழும்பில் தெகிவளையில் தமது பெற்றோர் சகோதரங்களுடன் வாழ்ந்த காலப்பகுதியில் - இலங்கை வானொலி தமிழ் நேயர்களினால் வரவேற்பை பெற்றிருந்த சில நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் கால்நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் முதல் வாழும் திருமதி அருண். விஜயராணி மெல்பனிலிருந்து அந்த வசந்தகாலத்தை நினைத்து நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.
படைப்பாளியிடம் எழுதிக்கேட்டு ஆக்கங்களை ஊடகங்களில் ஒலிபரப்பிய வானொலியும் - பிரசுரித்த பத்திரிகைகளும் இன்றைய நவீன யுகத்தில் அந்த மரபை கைவிட்டமைக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம்தான் அதிலும் கணினி - மின்னஞ்சல் யுகம்தான் பிரதான காரணம்.
வீரகேசரி வாரவெளியீட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய பொன். ராஜகோபால் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். 1970 - 1980 காலப்பகுதியில் அவர் சில பரீட்சார்த்த முயற்சிகளையும் வாரவெளியீட்டில் மேற்கொண்டார்.
ஏற்கனவே படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை, குறமகள் வள்ளிநாயகி, இ.நாகராஜன், கனகசெந்தி நாதன் ஆகியோர் இணைந்து எழுதிய மத்தாப்பு புதினத்தை படித்திருந்த அவர், அதுபோன்றதொரு தொடரை வீரகேசரி வாரவெளியீட்டிலும் வெளியிட விரும்பினார்.
நாளைய சூரியன் என்ற தலைப்பில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் வெளியானது. முதல் அங்கத்தை அருண். விஜயராணி எழுதியிருந்தார். தொடர்ந்து மண்டூர் அசோக்கா, தமிழ்ப்பிரியா, தாமரைச்செல்வி, தேவ மனோகரி ஆகியோர் எழுதினர். இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் பற்றி முன்பொரு தடவை எழுதியிருக்கின்றேன்.
ஆயினும் - இலங்கையில் இருந்தகாலத்தில் நான் இவரை சந்திக்கவில்லை. குறிப்பிட்ட நாளைய சூரியன் தொடரை ஒப்புநோக்கும் (Proof Reading) பொழுதே படித்திருந்தேன். அக்கால கட்டத்தில் நாளைய சூரியன் வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம் அந்தக்கதையின் கருப்பொருள். ஹிப்பிக் கோலத்தில் அலையும் ஒரு பாத்திரம் பற்றிய கதை. ஈழத்து இலக்கியத்தில் அதனை பெண் எழுத்தாளர்கள் எழுதியமையினால் துணிகர முயற்சி என்றும் சில விமர்சகர்கள் சொன்னார்கள்.
பின்னர் சிறிதுகாலம் விஜயராணியின் எழுத்துக்களை பத்திரிகையிலும் காணவில்லை. வானொலியிலும் அவரது படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.
வீரகேசரியில் விஜயராணியின் உறவினர் சோமசுந்தரம் ராமேஸ்வரன் பத்திரிகையாளராக பணியிலிருந்த எனது நண்பர் . அவர்தான் விஜயராணி திருமணம் முடித்து மத்திய கிழக்கில் ஒரு நாட்டிற்கு கணவருடன் சென்றுவிட்ட தகவலை தெரிவித்தார்.
காலங்கள் சக்கரம் பூட்டியது. விரைந்துவிடும்.
விஜயராணியின் குடும்பத்தினர் கலை, இலக்கியம், இசை, நடனம் முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவர்கள். விஜயராணியின் தந்தையார் இலங்கையின் மூத்த ஓவியர். யோகர் சுவாமியின் சீடர். இன்றும் நாம் பார்க்கும் நாவலியூர் சோமசுந்தரப்புலவரின் படத்தை தமது ஒளிப்படக்கருவியால் எடுத்த கமரா கலைஞருமாவார்.
அவருடைய தங்கையின் மகன்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் முனியப்பதாசன். விஜயராணியின் அக்காமார் , அண்ணன்மாரின் பிள்ளைகள் நடன, இசை அரங்கேற்றம் கண்டவர்கள். இவ்வாறு கலை, இலக்கிய, சமூகப்பார்வையுடன் வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்த விஜயராணியின் கணவர் அருணகிரி ஒரு பொறியியலாளர். பெரும்பாலான பெண் இலக்கியவாதிகளின் கணவர்கள் போன்று அவருக்கு இந்தத்துறையில் நாட்டம் இல்லையாயினும் தமது மனைவியின் எழுத்துப்பணிகளுக்கு உற்றதுணையாக விளங்குபவர்.
அதனாலும் விஜயராணி செல்வத்துரை என முன்னர் நாம் அறிந்திருந்தவர் பின்னாளில் இலக்கிய உலகில் அருண். விஜயராணி என்று அறியப்பட்டார்.
அருண். விஜயராணி எழுதத் தொடங்கியகாலம் முதல் பல நாடகங்களை சிறுகதைகளை, வானொலிச்சித்திரங்ளை எழுதியிருந்தபோதிலும் தமது நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர் மெல்பன் வந்தபின்னர் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை 25-06-1989 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தியபொழுது அருண். விஜயராணியும் உரையாற்றினார். சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும் வருகைதந்து உரையாற்றினார். இருவரும் அவுஸ்திரேலியாவில் ஏறிய முதல் மேடையாக அந்த இலக்கிய நிகழ்வு அமைந்தது.
தாம் பலவருடங்கள் இலங்கையிலும் லண்டனிலும் இருந்தும்கூட தமது ஒரு நூலைத்தன்னும் வெளியிட முடியாதிருந்த இயலாமையை அன்று அவர் மேடையில் சொல்லி, அந்த நிகழ்வு தனக்கு முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், வீரகேசரி வாரவெளியீட்டில் அந்த நிகழ்வு பற்றிய கட்டுரையையும் பின்னர் எழுதியிருந்தார்.
1990 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு புறப்படுவதற்கு முதல்நாள் மாலை தமது கணவருடன் எனது வீட்டிற்கு வந்த அவர், என்னிடம் ஒரு கோவையை கையளித்து, அதில் தனது சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை சென்னை தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் சேர்ப்பித்து அச்சிடுவதற்கு வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்றைய உரையாடலில் அதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவருடைய கணவர்தான் என்பதையும் அறியமுடிந்தது.
விமானத்திலேயே அந்தக் கதைகளின் மூலப்பிரதிகளை படித்தேன். தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்த முகப்போவியத்துடன் அந்தநூல் கன்னிகா தானங்கள் என்ற பெயரில் சென்னை தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்தது.
21-04-1991 ஆம் திகதி கன்னிகாதானங்கள் மெல்பனில் அதே வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது. இலங்கை வானொலியின் முன்னாள் தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் வருகைதந்து வாழ்த்துரை வழங்கியபொழுது அருண். விஜயராணியின் வானொலி நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.
குறிப்பிட்ட கன்னிகா தானங்கள் நூலை தமிழகத்தில் வாசித்த சுஜாத்தா ராணி என்பவர் Indian Express Weekend இதழில் நல்லதொரு விமர்சனம் எழுதியிருந்தார். அதனையும் தினகரன் வாரமஞ்சரியில் அந்தனி ஜீவா - தேவமலர் என்ற புனைபெயரில் எழுதிய பெண்பிரம்மாக்கள் என்ற தொடரில் அருண். விஜயராணி பற்றி எழுதியிருந்த குறிப்புகளையும் சிட்னியிலிருந்து கவிஞர் பாஸ்கரன், எஸ்.பொன்னுத்துரை, மாத்தளை சோமு இலங்கையிலிருந்து பொன். ராஜகோபால், சுடர் இதழ் ஆசிரியராகவிருந்த கனகசிங்கம் (பொன்னரி) மெல்பனிலிருந்து ரேணுகா தனஸ்கந்தா, முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து வானொலிக் கலைஞர் சண்முகநாதன் வாசுதேவன் ஆகியோர் எழுதிய குறிப்புகளையும் தொகுத்திருந்த சிறிய பிரசுரமும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.
அருண். விஜயராணியின் மெல்பன் வருகையின் பின்னர் இங்கும் சில கலை, இலக்கிய மாற்றங்கள் தோன்றின. 1990 தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் கலாசார செயலாளராக அவர் அங்கம் வகித்ததுடன் சங்கத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிட்னி - மெல்பன் குவின்ஸ்லாந்து தமிழ் வானொலிகளிலும் இவருடைய பல படைப்புகள் ஒலிபரப்பாயின. கவியரசு கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் இழையோடிய தத்துவக்கருத்துக்களையும், சமூகம், மொழி, பெண்கள் தொடர்பான சிந்தனைகளையும் தொகுத்து தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை எழுதி வான் அலைகளில் பரப்பினார்.
மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரை நாம் 2000 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டபொழுது, அந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்தார். அதில் இவர் எழுதிய தொத்து வியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்த தமிழக கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தாம் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை இராணி மேரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கொன்றில் விமர்சித்திருக்கிறார்.
அருண். விஜயராணியின் கன்னிகா தானங்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை கனடாவில் வதியும் சியாமளா நவரத்தினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆயினும் ஆங்கில வெளியீடு வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிக்கிறது.
அருண். விஜயராணி எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றிலும் அங்கம் வகித்து இவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர். அத்துடன் இந்த அமைப்புகளின் தலைவியாகவும் சில வருடங்கள் பணியாற்றினார். நாம் தொடர்ந்து நடத்திவரும் தமிழ் எழுத்தாளர் விழாக்களிலும் அவரது ஆதரவு தொடர்ந்தது.
ஒருவிழாவில் இவருடைய முயற்சியினால் வெளியான மறைந்த எழுத்தாள ர் முனியப்பதாசனின் சிறுகதைத்தொகுதி இலங்கையில் அச்சிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மல்லிகைப்பந்தல் ஊடாக வெளியிட்டிருந்தார். முனியப்பதாசனின் கதைகளை தேடி எடுத்து தொகுத்தவர் செங்கை ஆழியான்.
இவர்களும் மல்லிகைப்பந்தலும் இல்லையேல் அந்தத் தொகுப்பு வெளிவந்தே இருக்காது. முனியப்பதாசனை ஈழத்து இலக்கிய உலகம் மறந்திருந்த வேளையில், அவரை நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக அந்த நூல் அமைந்தது.
சமீபத்தில் சில தமிழ் இணையத்தளங்களில் நிறைவடைந்த விழுதல் என்பது எழுகையே என்ற மெகா தொடர்கதைத் தொடரை புகலிட நாடுகளிலிருந்து பல படைப்பாளிகள் எழுதினர். அதிலும் அருண். விஜயராணியின் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது.
சமீபத்தில் சில தமிழ் இணையத்தளங்களில் நிறைவடைந்த விழுதல் என்பது எழுகையே என்ற மெகா தொடர்கதைத் தொடரை புகலிட நாடுகளிலிருந்து பல படைப்பாளிகள் எழுதினர். அதிலும் அருண். விஜயராணியின் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வீரகேசரியில் நாளைய சூரியன் தொடர்கதையில் சம்பந்தப்பட்டிருந்த அருண். விஜயராணி , மீண்டும் எழுதி அங்கம்வகித்த தொடர் சர்வதேச பார்வையுடன் நிறைவுபெற்றது.
படைப்பாளிகளின் படைப்புமொழி மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும் ஊடகங்களின் வடிவங்களும் காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.
இந்த மாற்றங்களுக்கு மத்தியில் அருண். விஜயராணி, தமிழ் இலக்கிய பரப்பில் பலதரப்பட்ட காலகட்டங்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய குரல் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்து, குறிப்பாக பெண்கள் சார்ந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
0 commentaires :
Post a Comment