தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கியமான இந்நாளில் இருந்து தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கான சபதம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலாநிதி றியாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், சமாதானக் கற்கை நெறிகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி றியாஸ் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் இன்று தங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த உறவுகளுக்கு உலகெங்கும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் இந்த நிகழ்வில் தமிழ் பேசும் இன்னோர் சமூகமான முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தால் அரசுக்கு பாரிய அழுத்தங்களும், தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பான போராட்டத்திற்கு பலமும் கிட்டியிருக்கும்.
எனினும் நமக்கிடையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களின் காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளி அதனைத் தடுத்து நிற்கின்றது.
காத்தான்குடிப் படுகொலைகள், வடக்கின் பலவந்த வெளியேற்றம், கிண்ணியாவின் குரங்குபாஞ்சான் பள்ளிவாசல் ஆக்கிரமிப்பு என கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை மறந்து எமது இனத்தின் எதிர்கால நலனுக்காய் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் அதற்கான முயற்சிகளில் நேர்மையான முன்னெடுப்புகள் காணப்படாமை துரதிருஷ்டவசமானதாகும்.
ஆனால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்திருந்த மேஜர் அன்பு என்ற பெயரில் அறியப்பட்ட எம் முஸ்லிம் சகோதரி மற்றும் ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள் எல்லாம் தமிழ் இன விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள்.
ஏனைய விடுதலை இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதது.
ஆயினும் தமிழ் பேசும் மக்களிற்கான போராட்டத்தை ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு மட்டுமான போராட்டமாக வரையறைத்துக் கொண்ட காரணத்தினால் இந்தப் பங்களிப்புகள் குறித்தோ, உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கோ முஸ்லிம் சமூகம் பின்னிற்கின்றது.
மறுபுறத்தில் இந்தளவு பங்களிப்புகளை வழங்கியுள்ள நிலையிலும் தமிழ் தலைவர்களின் ஏற்பாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் முஸ்லிம் சமூகம் தள்ளிவைக்கப்படுவது வேதனையானது.
எனவே எமது மக்களின் ஒற்றுமை விடயத்தில் இனியும் தாமதிக்கக் கூடாது. தமிழ் பேசும் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய நாளொன்றை நினைவு கூரும் இந்த வேளையில் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கான முயற்சிகளும் இன்று தொடக்கம் இதயசுத்தியுடன் முன்னெடுக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க முஸ்லிம்களும் முன்வரவேண்டும். எமது பிரச்சினைகளின்போது தமிழ்தரப்பின் நேசக்கரமும் நீட்டப்பட வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே எமக்கிடையிலான வேற்றுமைகள் புறந்தள்ளப்பட்டு ஒற்றுமைக்கான வழி செப்பனிடப்படும்.
தமிழ் மக்களின் இழப்புகள் தொடர்பாக சகோதர இனம் என்ற வகையில் எங்கள் ஆழ்ந்த வேதனைகளையும் இந்தத் தருணத்தில் நேசமுடன் பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் கலாநிதி றியாஸ் தனது அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
thks **batti natham
0 commentaires :
Post a Comment