11/30/2015

எரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் 10,000 புத்தகங்கள்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள்.
Image captionதென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இணைந்து யாழ் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்றனர்
கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது.
இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போயின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்படியாக புனரமைக்கப்பட்டு, பின்னர் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர், முதற் தடவையாக பெருமளவிலான புத்தகங்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து இந்த நூலகத்திற்கு இப்போதுதான் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த உப்புல் சாந்த சன்னஸ்கல நாவலாசிரியரின் அம்மா என்ற நாவல், கவிஞரும் எழுத்தாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்ட நிகழ்வையொட்டி இந்தப் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
Image captionஎழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல
யாழ் நூலகத்தை மதவாதிகளும், இனவாதிகளுமே எரியூட்டினர் என இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல பிபிசி தமிழோசயிடம் தெரிவித்தார்.
அதன் பாதிப்பை உணர்ந்த தம்மைப் போன்றோருக்கு அதனைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவா காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும், சிறுகதை, நாவல், இலக்கியம், கலை, கலாச்சாரம், அறியியல், சமூகவியல், சுயசரிதை என்று பல்துறை சார்ந்த நூல்களும் இவற்றில் அடங்கியிருக்கின்றன.
யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட வன்செயலை மூடிமறைப்பதற்கோ அல்லது அந்தப் பாதிப்புக்ககான நிவாரணமாகவே இந்தப் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவில்லை என யாழ் பல்கலைக்கழக மொழியியல் பிரிவின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதம் விமல் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நூலகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அறிவுசார்ந்த நடவடிக்கைக்குத் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
இந்த நடவடிக்கையானது கடந்துபோன வரலாற்றை நோக்கிய ஒரு செயற்பாடல்ல. எதிர்காலத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும் என்றும் சுவாமிநாதன் விமல் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment