"மலையக மக்களும் இலங்கைத் தேசியத்திற்குல் உள்வாங்கப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவர்கள் தனியார் துறையின் கீழ் அந்நியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் இனப்பிரச்சிணைக்குத் தீர்வுகாணும் போது மலையக மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டு அனைத்து மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழவும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் கூடிய அரசமைப்பையும், அபிவிருத்தித் திட்டங்களையும் ஏற்படுத்த வேண்டும்'' இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலகராஜ் தெரிவித்தார்.
புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவித்தி அமைச்சில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் ""சுடர் ஒளிக்கு'' இவ்வாறு கூறினார்.
அவருடைய முழுமையான செவ்வி பின்வருமாறு:
கேள்வி:நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவாகியுள்ளீர்கள். மலையகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துடிப்புடன் உள்ளீர்கள்?
பதில்: நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மூலமே தற்போது குறிப்பிட்டளவு பிரதிநிதித்துவங்கள் கிடைந்துள்ளன. ஆனால், எமது மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப கிடைக்கப்பெற்ற பிரதிநிதித்துவங்கள் அல்ல. விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றப்பட்டால் தற்போதுள்ள பிரதிநிதித்துவம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தொடர்பில் தெளிவில்லாமல் உள்ளது. மாவட்ட பிரதிநிதித்துவம் இருந்தும் கூட மலையக மக்கள் வாழும் ஏனைய பகுதிகளில் எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. குறிப்பாக, கேகாலை, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே, இதை முதலில் சரிசெய்ய வேண்டும்.
என்னுடைய பிரதான இலக்கு என்பது அரசமைப்பு அல்லது தேர்தல் முறை மாற்றத்தின் போது தற்போது உள்ள பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதுடன், எமது மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை உறுதிச்செய்வதாகும். தற்போது கிடைக்கப் பெற்றுள்ள பிரதிநிதித்துவங்கள் மூலமே குறைந்த பட்ச அபிவிருத்தியாவது எமது சமூகத்தை நோக்கி நகர்கின்றது. எனவே, உள்ளூராட்சி, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகிய அனைத்திலும் எமது விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது எனது முதலாவது இலக்கு.
இரண்டாவது மக்கள் தனியார்துறையினர் மூலம் நிர்வகிக்கப்படும் முறை மாற்றப்பட்டு ஏனைய சமூகங்கள் போல் அரச பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், மலையயக மக்களின் பின்னடைவுக்கு இவ்விடயம் பிரதான காரணமாகக் காணப்படுகின்றது. இதனை நான் என்னுடைய உரைகளில் தற்போது வலியுறுத்தி வருகின்றேன். சர்வக்கட்சிக் கூட்டத்திலும் எடுத்துரைத்துள்ளேன்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் தற்போது பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மலையக மக்கள் இன்னமும் இந்த நாட்டின் முழுமையான நிர்வாகக் கட்டமைப்புகுள் வரவில்லை. எனவே, இலங்கை அரச பொது நிர்வாகத்தின் கீழ் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களின் உரிமைகளும் ஏனையக சமூகத்திற்கு நிகராக உறுதிப்படுத்த வேண்டும்.
முன்றாவது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்கள். இதுவரை மலையகத்தில் அபிவிருத்தி நடைபெறவில்லையென்று சொல்லவில்லை. ஆனால், ஆங்கிலேயக் காலனித்துவ காலத்தில் குடியமர்த்தப்பட்டது முதல் இன்றுவரை ஏனைய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளைவிட மலையக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக கல்வித்துறை தவிர ஏனைய அனைத்துத் துறைகளும் அரச நிர்வாகத்தின் கீழ் இல்லை. சுகாதாரத் துறையில் தோட்ட வைத்தியர் என்று ஒருவர் உள்ளார். இதற்கு அடையாளம் நாங்கள் இன்னமும் அரசின் தேசிய வைத்திய முறைக்கு உள்வாகப்பட வில்லை என்பதுதான். குடிநீர் திட்டமும் அவ்வாறுதான் இவை வெறும் உதாரணம்தான் இதுபோன்ற பல்வேறு விடயங்கள் இன்னமும் பாரபட்சமாகவே நடைபெறுகின்றன.
இதன் காரணமாகக் குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயிக்கப்பட்டு எமது மக்களின் அடிப்டை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். கடந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் கவனம் செலுத்தாததால் ஐ.நாவின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டம் எமக்கு கிடைக்காமல் போனது தற்போது அதனை மீண்டும் கொண்டுவந்துள்ளோம். இதை துரித 5ஆண்டு அபிவிருத்தித் திட்டமாக மேற்கொள்ளும் படி பிரதமரும், ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர். இது எமக்கு கிடைத்த வெற்றியாக கருதமுடியும். கடந்த காலங்களில் எமது தலைவர்கள் விணைத்திறனாகச் செயற்பட்டிருந்தால் மலையக மக்களின் அவலநிலை இத்தணையாண்டுகள் நீடித்திருக்காது. எனவே, ஒரு கால எல்லையை நிர்ணயித்தது மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் போதுதான் அதன் பிரதிபலனை அடைய முடியும்.
கேள்வி: கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் இலங்கையில் அரசைப்பும் உருவாக்கப்படும் போதும், தேர்தல் முறை மாற்றம் மேற்கொள்ளும் போதும் மலையகத்திற்கு தனியான அதிகாரப் பகிர்வு அவசியமென வலியுறுத்தியுள்ளீர்கள். எனவே, மலையத்திற்கு எவ்வாறான அதிகாரப் பகிர்வு அவசியமானது எனக் கருதுகின்றீர்கள்?
பதில்: எம்மை இன்னமும் இந்தியத் தமிழர்கள் என்று கூறும் போது இலங்கையில் நாங்கள் அந்நிய படுத்தப்படுகின்றோம். இலங்கைத் தேசியத்துக்குள் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக சமவுரிமையுடன் வாழவே இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். இலங்கைத் தேசியத்திற்குள் மலையக மக்கள் உள்வாங்கப்படாமையும் இவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக உள்ளது. எமக்கும் அந்த உணர்வு வரவேண்டும் அப்போதுதான் நாங்களும் இந்த நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்து கிடைக்கும்.
இதற்காண தீர்வு என்னவென்றால் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் நாங்களும் பங்குதாரராக எமது பிரதிநித்துவங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சமஷ்டி முறையோ அல்லது அதிகாரப் பகிர்வோ கோருவதற்கு மலையகத் தமிழர்கள் எல்லைப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் வாழ வில்லை. முஸ்லிம், சிங்கள மக்களோடு இரண்டறக் கலந்துதான் வாழ்கின்றோம். எமக்குச் சாத்தியமான விடயமாக விகிதாசாரத்துக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமக்கான கிராம சேவையாளர் பிரிவுகள் உருவாக்க வேண்டும். எப்போதுதான் எமது உரிமைகளை நிலைநாட்ட முடியும். ஆகவே, சாத்தியமான அதிகாரப் பகிர்வுகளை நாங்கள் கோரி வென்றெடுப்பதே எமக்கான இலக்காகும். இன்று பரவலாக பேசப்படும் விடயம்தான் உள்நாட்டு பொறிமுறைக்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுகொள்வதா இல்லையா என்பது. உள்நாட்டு விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாமையினால்தான் சர்வதேச மத்தியஸ்தம் கோரப்படுகிறது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே மலையக மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. இதனை தீர்க்க எந்தவிதமான விசாரணையும் இதுவரை நடைபெற வில்லை. எமது வாக்குரிமை பறிக்கப்பட்டது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடுகடத்தப்பட்டோம். பிரதேச சபை சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது மலையக மக்கள் உள்வாங்கப்பட வில்லை. இன்னமும் தனியாரின் கட்டமைப்பில் கீழ் இருக்கின்றோம். எல்லை நிர்ணயத்தில் பாகுபாடு. தேசிய ரீதியில் எமது மக்களின் பிரச்சினையை இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. முதலில் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும் செல்ல முடியும்.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விடயம் தொடர்பில் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன?
பதில்: முதலாளிமார் சம்மேளனம் 770 ரூபாவை கொடுப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை நாங்கள் மறுக்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1,000 ரூபா கோரிக்கையை முன்வைத்தது. அதனை எந்த அடிப்படையில் அவர்கள் முன்வைத்தார்கள் எனத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் குறைந்த பட்சம் 800ரூபா என நிர்ணயித்துள்ளோம். 1,000 ரூபா என்பது ஒரு விதந்தாத வாதத் தொகை. நாங்கள் பேசி தீர்மானிக்கும் தொகையில் கையொழுத்திட வேண்டிய பொறுப்பு அவர்கள் கையில்தான் உள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும்.
கேள்வி: கடந்த காலங்களில் 60வீதம் மக்கள் பலமுடைய தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கும் தொழிற்சங்கங்களாக உருவாகின. அந்தவகையில் தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் பலம் காணப்படுகின்றது. எனவே, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்கும் தொழிற்சங்கமாக உங்களால் உருவெடுக்க முடியாதா?
பதில்: வாக்களிப்பு என்பது வேறு. தொழிற்சங்கம் என்பது வேறு. அரசியல் ரீதியாக மக்கள் சந்தா தாரர்கள் அல்ல. ஒட்டு மொத்த வாக்காளர்களும் தொழிலாளிகள் அல்ல. சம்பளப் பிரச்சினை என்பதும் வேறு. சம்பளம் தொடர்பிலான விடயங்கள் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு இடையில் கைச்சாத்திடப்படுவது. தொழிற்சங்க உறுப்புரிமையை மக்கள் இதுவரை காலமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம்தான் வைத்துள்ளனர். தற்போதைய சூழலில் எங்களால் சவால் விட முடியும். ஆனால், உள்ள பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். இல்லாமல் சவால் விட்டால் தொழிலாளர்களுக்கு மேலும் பிரச்சினைகளைதான் தோற்றுவிக்கும்.
கேள்வி:அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒரு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாக போட்டியிடுமா அல்லது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுமா?
பதில்: அது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்பட வில்லை. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படையில் புதிய முறையை நாங்கள் எதிர்க்கின்றோம். காரணம் எல்லை நிர்ணய விடயத்தில் முறைகேடு நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த அரசின் ஆட்சியாளர்கள் அவர்களின் ஆட்சியைதக்க வைத்துகொள்ளும் வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். புதிய முறை என்ற காரணத்தினால் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. தேர்தல் முறைக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துகொள்ளும் வகையில் எங்களது வியூகங்கள் அமையும் அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி எப்போதும் ஓர் அணியாகதான் போட்டியிடும். தற்போது பொது சின்னமொன்று தொடர்பிலும் ஆராப்படுகிறது.
கேள்வி: புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தால் பசுமை பூமி திட்டத்தின் கீழ் தனி வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீங்கள் கூறுவது போல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படுமா?
பதில்:சாத்தியபடுமா என்பது ஒரு புறம் இருக்க மக்களின் மனங்களில் நாங்கள் தனி வீட்டுத்திட்டத்திற்குல் போக வேண்டுமென்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முதலாவது வெற்றிதான் அமைச்சின் பெயர் மாற்றப்பட்டமை. ஐந்து வருடத்தில் சாத்தியப்படுமா என்பது நிதி சம்பந்தகப்பட்ட விடயம். லயன் அறைகள் உடைக்கப்பட்டு ஒரு கிராமமாக உருவாக்கப்பட வேண்டும். நாங்கள் அமைச்சில் இருக்கும் போது ஒரு நிலையான கட்டமை உருவாக்கி வைத்து சென்றால் அடுத்து வருபவர்களும் அதே வழியில் செல்வார்கள். அதற்கான அத்திவாரத்தை தான் நாங்கள் இட்டுவருகின்றோம்.
கேள்வி: வரும் 20ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களின் போது மலையக மக்கள் சார்ந்த முன்மொழிவுகள் பெரும்பாலும் குறைந்தளவே காணப்பட்டன. இம்முறை இரண்டுமுறை ஆட்சி மாற்றத்திற்கும் மலையக மக்களின் பங்கு என்பது அளப்பரியது. எனவே, இவர்களுக்காக எத்தகைய நன்மை உள்வாங்கப்பட்டுள்ளன?
பதில்: எல்லோரும் வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர்தான் அதைப் பற்றி பேசுவார்கள். ஆனால், நான் எனது கன்னி உரையிலேயே வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெரிவித்தேன். சம்பள அதிகரிப்புத் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் ஏதும் ஏற்பாடுகள் முன்மொழியப்பட மாட்டாது. சம்பளப் பிரச்சினை முதலாளிமார் சம்மேளனத்துடன், ஏற்படுத்தப்படும் விடயமாகும். நாடாளுமன்றத்தில் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் பிரேரணையொன்றை முன்வைத்து விவாதம் நடத்தினோம். அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். மலையக மக்களின் அபிவிருத்தி, வீடமைப்புத் திட்டம் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் இருக்கும் என்றார்.
நன்றி - சுடரொளி