பெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாபா நல்மா ஹம்சா தெரிவித்தார்.
இன்று (14.10.2015) புதன்கிழமை காலை காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் நடைபெற்ற மாணவிகளுக்கான தலைமைத்துவ செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே சல்மா ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் நிதியுதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண்கள் வலுவூட்டலும் நல்லிணக்கமும் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடைபெற்றது.
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சல்மா ஹம்சா பெற்றார்கள் ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்ற வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டும்.
ஆண்பிள்ளைகளை ஒருவாறும் பெண் பிள்ளைகளை ஒருவாறும் பார்த்து அவர்களை வளர்க்கும் போது இளமையிலேயே பிள்ளைகளின் உள்ளம் பாதித்து விடும். அதனால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு விடுவார்கள்.
சிறுபிராயத்திலிருந்தே நல்லிணக்கமும் ஐக்கியமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்த்தொடுக்கப்படல் வேண்டும். மாணவர்கள் மத்தியில் இந்த நல்லிணக்க வேலைத்திட்டம் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறான செயற்திட்டத்தினை மேற் கொண்டுவருகின்றோம்.
தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக இவ்வேலைத்திட்டமுள்ளது.
பெண்கள் சமூகப்பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்களாக மாறவேண்டும்.
பெண்கள் சமூகப்பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்களாக மாறவேண்டும்.
இயலாதவர்களாக பெண்கள் காணப்படக் கூடாது. இயலுமானவர்களாக சமூகத்தில் பெண்கள் காணப்படல் வேண்டும் என்றார்.
இந்த செயலமர்வில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகளும், மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலை மாணவிகளுமாக 28 தமிழ் முஸ்லிம் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தச் செயலமர்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் மற்றும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
இந்தச் செயலமர்வு மூன்று தினங்களுக்கு இடம் பெறுமென சல்மா ஹம்சா குறிப்பிட்டார்.