பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு PRECIFAC (பி.ஆர்.இ.சி.ஐ.எப்.ஏ.சி) தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்களை நிராகரித்த ஆணைக்குழு, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றது.
இந்த ஆணைக்கு அதிகாரபூர்வமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று ஆணைக்குழு நேற்று (15) வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
ஆணைக்குழுவுக்கு வருகைத்திருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினரின் கடும் ஆட்சேபனையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழு நேற்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்டிசியில் தேர்தலுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமை, விளம்பரப்படுத்த விருந்த எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை, குறிப்பிட்ட அளவுக்கு குறைந்தளவில் பிரசாரப்படுத்தியமையால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கவேண்டிய நிதி இல்லாமல் செய்யப்பட்டது தொடர்பில் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்கே, மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்றும் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்றும் இந்த ஆணைக்குழு சட்டவிரோதமானது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி மாரப்பன தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.