10/18/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ரகுவின் படுகொலை மீதான விசாரணை எப்போது?

 (இலங்கை மீதான யுத்தகுற்ற விசாரணைகளும், படுகொலைகள் மீதான அனுதாபங்களும், மனிதஉரிமை கூச்சல்களும் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் பயன்படுகின்றதா? அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா? தமிழ் தேசிய கூட்டமைப்பினதும்- ரணில் அரசாங்கத்தினதும் பழி வாங்கும் ஆட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி வழிவிட்டு மெளனம் காத்தார் என்று வரலாறு எழுதுமா?)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்  முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் 14/11/2008 ல் கொழும்பு அத்துருகிரிய என்னும் இடத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியவர் ரகுவாகும். இவருடன் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானாவினுடைய சாரதி சமீர் என்பவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
ரகு அவர்கள் முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பியதில் இவரின் பங்கு அளப்பரியதாகும். முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்றதில் இருந்து கட்சித் தலைமைப் பொறுப்புடன் முதலமைச்சருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றிவந்தார்.
இவரது சொந்த வாழ்வில் அவுஸ்ரேலியாவில் பொறியியலாளராக வாழ்ந்து வந்த இவர் மூன்று  குழந்தைகளின் தந்தையாவார். கிழக்கு மாகாணத்தில் ஒரு ஜனநாயக மீட்சியை உருவாக்கும் பணியில்  கிழக்கு மாகாணத்துக்கு திரும்பி வந்து தனது அயராத உழைப்பை மக்களுக்காக்க வழங்கி வந்தார்.   யுத்தத்தின் பிடியில் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்து செயல்பட்ட இவர் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்துக்காக  பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஓரு கட்சியின் தலைவராக இருந்த ஒருவர் கொழும்பில் வைத்து அதுவும் அதி உச்ச பாதுகாப்பு வலையத்தினுள் வைத்து எவ்வாறு கொல்லப்பட்டார்? அவர் கொல்லப்பட்ட இடத்தில் வைத்து அந்த இடத்தினை உடனடியாக பார்வையிட்ட அன்றைய முதலமைச்சர் சந்திரகாந்தன் “இது புலிகளால் செய்யப்பட்டதல்ல” என பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியானால் அது யாரால் செய்யப்பட்டது? அதுபற்றிய விசாரணையை கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அன்றைய ஜனாதிபதிக்கு இருமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இன்று வரை ரகுவின் படுகொலை குறித்த எந்த விதமான விசாரணைகளையும் இலங்கையரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இப்போது நல்லாட்சி நடக்கின்றது, சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கமைய படுகொலைகள் விசாரிக்கப்படுகின்றன,  மனிதஉரிமைகளை மீட்டெடுப்பதாக ரணிலின் அரசாங்கம் உரத்து சொல்கின்றது, அப்படியானால் ஒரு கட்சியின் தலைவரது கொலையை  கண்டு கொள்ளாமல் எப்படி  நல்லாட்சி நடக்க முடியும்? அதுவும் நீண்ட யுத்தத்தின் பின்னர் ஒரு ஜனநாயக கட்டமைப்பை முன்னின்று உருவாக்கிய கட்சியின் தலைவர், இதுபற்றி மனித உரிமை பற்றி கோஷமிடுகின்ற எத்தனை பேர் இதுவரை வாய் திறந்துள்ளனர்?  எந்த தமிழ் கட்சி இந்த கட்சித்தலைவர் மீதான படுகொலையை விசாரிக்க சொல்லி கோரியது?
இலங்கை மீதான யுத்தகுற்ற விசாரணைகளும், படுகொலைகள் மீதான அனுதாபங்களும், மனிதஉரிமை கூச்சல்களும் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் பயன்படுகின்றதா? அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா? தமிழ் தேசிய கூட்டமைப்பினதும்- ரணில் அரசாங்கத்தினதும் பழி வாங்கும் ஆட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி வழிவிட்டு மெளனம் காத்தார் என்று வரலாறு எழுதுமா?
மீன்பாடும் தேனாடான்