10/27/2015

த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு' -

Résultat de recherche d'images pour "விநாயகமூர்த்தி முரளிதரன்"இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனைவரும் முன்வரவேண்டும் எனவும், அப்படிச் சேர்வதற்காக தங்களுடைய கதவு எப்பொழுதும் திறந்திருக்கும் எனவும் ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்திருந்தார். இந்த அழைப்பின் அடிப்படையில், 2, 3 கட்டப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இந்தப் பேச்சுக்களில் திருப்தியான பதில்கள் கிடைத்திருந்தன. இருப்பினும், மத்திய குழுவினைக் கூட்டி - அவர்களின் ஆலோசனையினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது முடிவினை அறிவிப்பதாக சங்கரி ஐயா என்னிடம் தெரிவித்திருந்தார். இதனை மோப்பம் பிடித்த சிலரினால், இப்பொழுதே நான் கட்சியில் இணைந்துவிட்டேன் என்பதுபோன்ற செய்தியினை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது பாரம்பரியம் மிக்க கட்சி. இக்கட்சியினூடாகத்தான் அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித் தலைவராகினார். ஆனந்தசங்கரி ஐயாவும் தமிழ் மக்களைச் சுரண்டி வாழ நினைப்பவரில்லை. மக்களின் நன்மைக்காகவே குரல்கொடுத்து வந்திருக்கின்றார். ஆகையினால்தான், ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் அக்கட்சியுடன் சேர்ந்து செயற்படும் எனது ஆசையினை அறிவித்திருந்தேன். இது, தமிழ் மக்களுக்கு எதிரான முடிவில்லை, மாறாக அவர்களைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட, என்னுடைய தனிப்பட்ட முடிவே.

0 commentaires :

Post a Comment