இன்று (29/10/2015) கொழும்பு வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் நான்கு வருட கற்கை ஆண்டாக இருந்த தேசிய அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மூன்றாண்டாக குறைத்து, இந்த கற்கை நெறியின் தராதரத்தை குறைத்துள்ளமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசானது தண்ணீர்த் தாங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியதுடன்; கலகம் அடக்கும் விசேட படையினரை ஏவி விரட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது.
இதுவரை 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 40 ற்றும் அதிகமான மாணவர்கள் மோசமான அடிகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரு பிக்கு மாணவர்கள் மற்றும் ஜந்து பெண் மாணவிகள் அடங்கும்.
உலக நாணய நிதி நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கமைய மகிந்த அரசு இலவச கல்வியினை இல்லாதாக்கும் காரியத்தை முடுக்கி விட்டது. அதன் ஒரு அங்கமாக தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி அவற்றை பல சலுகைகளுடன் ஆரம்பித்து வைத்து இலவச கல்விக்கு சங்கு ஊதும் பணியினை தொடங்கியது. இதனை எதிர்த்து தொடர்ச்சியாக பல போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
நான்கு வருட கற்கை நெறியான HNDA -Higher National Diploma in Management and Bachelor of Commerce, பட்டப்படிப்பினை மகிந்த அரசு மூன்று வருடங்களாக குறைத்ததுடன் கற்கும் பாடவிதான அளவினையும் குறைத்து இந்த பட்டப்படிப்பின் தராhதரத்தினை குறைத்திருந்தது. மேலும் இன்னும் ஒரு வருடம் மேலதிகமாக பட்டப்படிப்பின் பின்னர் கற்பதன் மூலம் சரியான தராதரத்தினை பெற்றும் கொள்ள முடியம் என அறிவித்திருந்தது. மேலதிக ஒரு வருட படிப்பினை கட்டணம் செலுத்தி படிக்கும் வண்ணம் மாற்றி அமைத்தது. இந்த நடவடிக்கை ஆனது மெல்ல மெல்ல இலவச கல்வியினை இல்லாதாக்கி அனைத்து பட்டப்படிப்புகளையும் விற்பனை செய்யும் நடவடிக்கையானதாகும். கல்வியை காசுக்கு விற்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த மகிந்த அரசு காலத்தில் மாணவர்கள் பல பெரும் போராட்டங்களை நடாத்தி இருந்தமையும் மகிந்த அரசு அரச குண்டர் படையான ராணுவத்தினை ஏவி அந்தப் போராட்டங்களை அடக்க முனைந்ததுடன் பல மாணவர்களை போலி விபத்துக்களில் கொலை செய்ததுடன் மாணவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி இருந்தது. எனினும் மாணவர்கள் அஞ்சாது தொடர்ந்து போராடினர்.
மார்கழி 205, 22ம் திகதி மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னால் கல்விக்கான வெட்டுக்களுக்கு எதிராகவும் தனியார் பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்ட மாணவர்களின் விடுதலை கோரியும் பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது. இதனை மகிந்த அரசு படையினரைக் கொண்டு வன்முறை மூலம் அடக்கியது.
மைத்திரியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார விளம்பரம் பல்கலைக்கழக மாணவர் மீதான மகிந்த அரசின் தாக்குதல் குறித்தான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை பயன்படுத்தி கல்வி உரிமையை பாதுகாத்து, ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என்று தொடங்கியது.
ஆனால் இன்று அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தேர்தல் கால வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் காற்றிலே பறக்க விட்டு விட்டனர் “நல்லாட்சி” அரசினர். கல்விக் கொள்கையில் முந்தைய அரசின் கொள்கையே தொடந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கல்வியினை ஒரு விற்பனை பண்டமாக மாற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த அழிவுச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மீது முன்னைய அரசு போலவே இன்றைய “நல்லாட்சி” அரசும் தாக்குதல் நடாத்த தயங்கவில்லை.
0 commentaires :
Post a Comment