10/26/2015

'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்' - விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.
பட்டப்படிப்பு முடிந்த பின்னர், பொறியியல் மற்றும் மருத்துவ துறைசார்ந்தவர்கள் திறன்சார் குடிபெயர்வில் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு, உள்நாட்டில் ஈழம் வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரம் அனுப்பினால் போதாது, யுத்தத்தினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக இங்கு வந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, பட்டப்படிப்பு முடிந்ததும் துறைசார்ந்தவர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது உள்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment