மும்பையில் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக மும்பை துணைப் போலிஸ் ஆணையர் தனஞ்ஜெய் குல்கர்னி கூறினார்.
இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து வலதுசாரி இயக்கமான சிவசேனைக் கட்சியினர், இதன் ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானியும் இந்த சம்பவத்தைக் கண்டித்தார்.
இதனையடுத்து சிவசேனை புத்தக வெளியீட்டு விழாவின்போது நடத்தத் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விலக்கிக்கொண்டது.
மை பூசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல்கர்னி, இந்த சம்பவத்தை "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்று வர்ணித்தார்.