10/18/2015

| |

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி அபராதம்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலையில் பி.டெக்., மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்புக்கு சாப்ட்வேர் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி யிருந்தனர். இத்தொழில்நுட்பம் அதிவேகமாக செயல்படக்கூடியது. இதற்கான காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

இவர்கள் உருவாக்கிய இத்தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியன் கோன்லி, விஸ்கான்சின் பல்கலைகழக ஆராய்ச்சி அமைப்புக்கு, ரூ.1,400 கோடி ரூபாயை இழப்பீடாக ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி என, விஸ்கான்சின் பல்கலைகழக ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கார்ல் குல்பிரான்ட்சென் தெரிவித்துள்ளார்.