ஜெனிவாவில் வைத்து ஒரு திருவாசகம் சொல்லப்பட்டிருக்கிறது, "நாங்கள் என்ன மாடு மேய்த்து விட்டா வந்தோம்". தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்கு வந்த போது ஜெனிவா நகரத் தெருவில் வைத்து தான் வணக்கம் சொல்லியபோது தனக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதால் வெகுண்டெழுந்த ஒரு அறிவாளியின் அறிக்கை இது. சுமந்திரன் வணக்கம் சொல்லாமல் ஒரு தனிமனிதனை அவமதித்தார் என்றால் இந்த அறிவுக்கொழுந்து உழைக்கும் மக்கள் எல்லோரையும் தனது மேட்டுக்குடித்தனத்திலும், சாதிவெறியிலும் அவமதிக்கிறது.
சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எம்மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சவின் கட்சியிலும், ஆட்சியிலும் கூட்டாளியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுடன் கூட்டுச் சேர்ந்து மரணித்த எம்மக்களை அவமதிப்பது குறித்து அவருக்கு கோபம் வரவில்லை. கோணேஸ்வரி, கிரிசாந்தி, இசைப்பிரியா என்று எண்ணற்ற எம்பெண்களை பாலியல் வன்முறை செய்து கொன்று குவித்த இலங்கை இராணுவத்தின் தலைமைத்தளபதி சரத் பொன்சேகாவை வன்னியில் இன்ப்படுகொலை நடந்த சில மாதங்களிலேயே ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு ஆதரித்து எம்பெண்களை அவமதிப்பது குறித்து இந்த மாடு மேய்க்காத விஞ்ஞானிக்கு கோபம் வரவில்லை. அரச பயங்கரவாதத்தால் இன்பம், செல்வம், பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், சுபாஸ், பாலேந்திரா என்று எண்ணற்ற எம்போராளிகளை 1979 ஆண்டிலேயே அவசரகாலச்சட்டத்தின் மூலம் கொன்று குவித்த கொலைகாரன் ஜெயவர்த்தனாவின் நெருங்கிய உறவினனும், ஐக்கிய தேசியக் கட்சிக்காரனுமான ரணில் விக்கிரமசிங்காவுடன் கூட்டமைப்பு கூடிக் குலாவி கொஞ்சுவதைப் பற்றி இந்த பரமார்த்த குருவிற்கு கோபம் வரவில்லை.
தமிழ்மக்களை இனப்படுகொலை செய்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று ஜெனீவாவில் புலம்பெயர் பிழைப்புவாதிகள் நடத்தும் ஊர்வலத்தில் உலக மகாபயங்கரவாதிகளான அமெரிக்காவின் நட்சத்திரங்களும், கோடுகளும் கொடிகளை பிடித்துக் கொண்டு தமிழ்மக்களிற்கு நேர்ந்த கொடுமைகளிற்கு நீதி கேட்கிறார்கள். அமெரிக்க கொடியை இவர்கள் பிடித்துக் கொண்டு நின்ற அந்த நேரத்திலேயே அப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் நேரடியாகவும் மற்ற எத்தனையோ நாடுகளில் மறைமுகமாகவும் எத்தனையோ அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள். தமிழ் மக்களை மகிந்த ராஜபக்ச அரசு இனப்படுகொலை செய்த போது சேர்ந்து கொன்ற அமெரிக்க, மேற்கு நாடுகளின் கொடிகளை இந்த வியாபாரிகள் தூக்கிப் பிடித்து எம்மக்களை அவமதிப்பது குறித்து இந்த மானஸ்தனிற்கு கோபம் வரவில்லை.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையானவர்களின் அரசியல் மதிப்பீடுகள், அரசியல் அறிவு என்பன இப்படித் தான் இருக்கிறது. வாழ்க, ஒழிக கோசம் போட்டு ஊர்வலம் போவது தான் அரசியல் என்று அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் அவர்களை பழக்கி வைத்திருக்கிறது. தமிழ்ச்சினிமா குப்பைகள்; அம்புலிமாமாவின் வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்கும் கேள்விகள் முடிந்தாலும் முடியாத சீரியல்கள்; நகைக்கடை, புடவைக்கடை விளம்பரங்கள் போடாத நேரத்தில் தமிழ்த்தேசியத் தொண்டு செய்யும் புலம்பெயர் தொலைக்காட்சிகளில் வரும் அரசியல் விஞ்ஞானிகள் நடத்தும் "அரசியல் ஆய்வுகள்" பராக் ஒபாமா, டேவிட் கமரோன் போன்ற உலகத்தையே விழுங்கும் ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களிற்கு நீதியையும், தீர்வினையும் பெற்றுத் தருவார்கள் என்று அவர்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.
இதுகளின் அரசியல் அறிவு வல்லரசுகளிற்கு வால் பிடிப்பதாக இருக்கும் போது சமுக அறிவு உழைக்கும் மக்களைக் கேவலப்படுத்துகிறது. இவர்களைப் போன்ற மேட்டுக்குடித்தனமும், சாதித்திமிரும் கொண்டவர்களிற்கு மாடு மேய்ப்பது; வயலில் வேலை செய்வது; கடல் தொழில் செய்வது; தென்னை, பனை ஏறிக் கள் இறக்குவது; நெசவு செய்வது; முடி வெட்டுவது; மண்ணைக் குழைத்து மட்பாண்டம் செய்வது; துணி துவைப்பது; பறை முழங்குவது; மரணித்த மனிதர்களிற்கு இறுதிச்சடங்குகள் செய்வது போன்றவை மதிக்கதக்க தொழில்கள் அல்ல. அந்த உழைப்பாளிகள் மதிக்கத்தக்க மனிதர்கள் அல்ல. சமுதாயத்திற்கு தேவையான அடிப்படைகளை செய்பவர்களை சாதி குறைந்தவர்கள் என்று அவமானப்படுத்துவது தான் இந்து சமயம் என்னும் மண்டை கழண்ட மடையர்களின் இது நாள் வரையான வரலாறு.
"பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்" என்று எமது இணையத்தில் கட்டுரை வந்த போது இந்த மாடு மேய்க்காத விஞ்ஞானி போன்ற ஒரு அறிவாளி முகப்புத்தகத்தில் " இந்த கட்டுரையை வரைந்தவரிடம் ஓரேயொரு கேள்வி, நீங்கள் நிர்வாக உறுப்பினராக இருந்த அல்லது இருக்கின்ற ஆலயத்தினுள் வேற்று சாதியினர் அல்லது வேற்று மதத்தவர் செல்ல அனுமதிப்பீர்களா??? என்று ஒரு அணுகுண்டைப் போட்டு விட்டு "இதை எழுதிய திரு.விஜயகுமாரனின் சாதிக்கலவரத்திற்கு என்றைக்குமே கரவெட்டி இரையாகாது" என்று வீர சபதம் இடுகிறார். வேறு சாதியினர் அல்லது வேறு மதத்தவரை கோவிலிற்குள் விடுவீர்களா என்று கேட்பது சாதிவெறியின் அநாகரீகம் என்பது கூட தெரியாத அளவிற்கு சாதிவெறியில் மூழ்கி இருக்கும் ஒருவர் சாதிக்கலவரத்திற்கு இரையாக மாட்டோம் என்று சொல்வது சாதிக்கொடுமை எந்த அளவிற்கு இவர்களில் ஊறிக் கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதைத் தான் தமிழ்மக்களிற்காக குரல் கொடுக்கிறேன் என்று விட்டு "நான் ஒன்றும் மாடு மேய்த்தவன் இல்லை" என்று அந்த மக்களின் ஒரு பகுதியினரை அவமதிப்பவனும் செய்கிறார்.
இனம், மதம், மொழி, சாதி என்பன மக்களை பிரிப்பவர்களின் கருவிகளே என்பதை "மாடு மேய்த்து விட்டு வரவில்லை" என்ற சாதித்திமிரும்; அமெரிக்க கொடி பிடிக்கும் அடிமைத்தனமும் மறுபடியும் எடுத்துக் காட்டுகின்றன. ஒன்று சேர்ந்து ஏமாற்றும் முதலாளித்துவ, மேட்டுக்குடித் தலைமைகளிற்கு எதிராக இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைக்கும் மக்கள் ஒன்று சேருவோம்.