இலங்கையில் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமில்லை. கடந்த 25 வருடங்களாக சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படும் தமிழ்மக்களுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல பல தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.
அதில் குறிப்பிடத்தக்க ஒரு தொண்டு நிறுவனம் தான் லைக்கா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் ஞானம் பவுண்டேஷன்.
கடந்த சில வருடங்களாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி வரும் ஞானம் பவுண்டேஷன் கடந்த மாதம் வீடுகள் இல்லாமல் தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்கும் மகத்தான பணியை ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் இலங்கை பூந்தோட்ட அகதி முகாமில் வசித்து வரும் 104 குடும்பங்கள் உட்பட 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில், வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரந்தர லைக்கா குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
‘லைக்கா கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் என்ற ரீதியில் வீடு வழங்கப்பட்டதுடன் அவர்களுடையை பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு விவசாய நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
லைக்கா மொபைல்ஸ் நிறுவனத் தலைவரும், ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஞானம் அறக்கட்டளையின் இணை ஸ்தாபகர் ஞானாம்பிகை அல்லிராஜா பங்கேற்றதுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லைக்கா கிராமத்திற்கான நினைவுச் சின்னத்தை திறந்து வைத்ததுடன், லைக்கா கிராமத்திற்கான பெயர் பலகையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக சந்திரிக்கா குமாரதுங்க முதலாவது அடிக்கல்லை நாட்ட அவரைத் தொடர்ந்து, துமிந்த திஸாநாயக்க, லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானாம்பிகை அல்லிராஜா உட்பட பலரும் அடிக்கல்லினை நாட்டினர்.
இவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, லைக்காவின் முதன்மைத் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரியும் ஞானம் அறக்கட்டளையின் முக்கிய செயற்பாடுகளுக்கான தலைவருமான பாலசிங்கம் ராஜ்சங்கர், லைக்கா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரி ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இந்நாள் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் தமது கைகளை அசைத்து அவர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தனர். தொடர்ந்து மக்களுக்கான வீட்டுத் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தமது சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுக்கு உதவி செய்வதில் தன்னிகரற்ற மனிதராக சுபாஸ்கரன் அல்லிராஜா திகழ்வதாக பெருமையுடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சந்திரிக்கா அம்மையார், லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா உதவி செய்வதில் ஒப்பற்றவர் எனவும், அவரிடம் பேசிய போது யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி வழங்குவதாகவும் உத்தரவாதம் தந்ததாகக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்த, தமது உரையை ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், சுபாஸ்கரன் அல்லிராஜா போன்று உதவி செய்ய பலர் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கான வீடுகளுக்காக உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதைப்பெற்றுக்கொண்ட மக்கள் லைக்கா நிறுவனத் தலைவருக்கு தங்களது சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஊழியர்களுடன் உரையாற்றிய திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா மக்களின் வாழ்த்துக்களுடன் அங்கிருந்து விடைபெற்றார்.
தொடர்ந்து ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முன்னணியின் இருக்கும் லைக்கா நிறுவனம் தமிழகத்தின் திரைப்படத்துறையிலும் சரித்திர சாதனை படைத்து வருகிறது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் கத்தி படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தின் தமிழக உரிமையையும், விசாரணை உலக உரிமையையும் சமீபத்தில் வாங்கியிருக்கிறது.
இப்படி எல்லையில்லாமல் தனது தொழிலை விஸ்தரித்து வரும் லைக்கா நிறுவனம் உதவிகளையும் எல்லையில்லாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.