9/29/2015

| |

இறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்

ஷோபா சக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவலில் ஓரிடத்தில் இப்படி ஒரு வரி மேற்கோள் காட்டப்படுகிறது. “இந்த உலகத்தில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றிய வரலாறும் உண்மையாக, நடந்தது நடந்தபடி எழுதப்பட்டதில்லை. அந்த பொது விதிக்கு இந்த யுத்தமும் விதிவிலக்கல்ல.”
ஆம், யுத்தத்தின் உண்மையான வரலாறுகள் காலத்தின் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்படுகின்றன. மறதியின் ஆழத்தில் அவை எங்கோ ஒரு கூழாங்கல்லைப் போல அமிழ்ந்துபோகின்றன. ஷோபா சக்தியின் நாவல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய மானுட அவலத்தையும் ஆறாத் துயரங்களையும், அந்த துயரக் கதைகளின் ஊடே யுத்த காலத்தின் சித்ரவதைகள், வன்புணர்ச்சிகள், படுகொலைகளின் துர்க்கனவுகளையும் எழுதிச் செல்கிறது. யுத்தத்தின் நெருப்பில் கனவுகளும் லட்சியங்களும் மனித கவுரவமும் மிகக் குரூரமாகச் சிதைக்கப்பட்ட சாமானிய மனிதர்களின் உறைந்த சொற்களின் வழியே இந்தக் கதை சொல்லப்படுகிறது.
யுத்தத்தின் வெற்றிகளையும் தோல்விகளையும் வரலாறு எப்போதும் அரசியல் கணக்குகளாக எழுதுகிறது. அல்லது இறந்த உடல்களின் எண்ணிக்கையாக எழுதுகிறது. இப்படி எழுதப்படும் வரலாறுகள் எல்லாமே ஒரு யுத்த காலத்தின் நெருக்குதல்களின் ஊடே ஒரு குடிமைச் சமூகத்தின் சாமானிய மனிதர்கள் அடைந்த, கற்பனைக்கெட்டாத பேரவலங்களையும் பேரழிவுகளையும் சொல்லாமல் இருப்பதன் மூலம் புதிய யுத்தங்களுக்கான வாய்ப்புகளை மிச்சம் வைத்துக்கொள்கிறது. புதிய லட்சியவாதங்களின் பெயரால் மனிதர்களை, புதிய கொலைக் களங்களுக்கும் சித்ரவதை முகாம்களுக்கும் அனுப்புவதற்கான ஏற்பாட்டை வரலாறு தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
பெரிய பள்ளன் குளம் என்ற கிராமத்தை மையமாக வைத்து இந்த நாவல் பின்னப்படுகிறது. அந்தக் கிராமத்தை நோக்கிச் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் வந்துசேர்கிறான். வாய்பேச முடியாத சிறுவன் அவன். காவல்துறை அவனைத் தேடுகிறது. அவன் அந்த கிராமத்தில் மக்களோடு கலந்துவிடுகிறான். அங்குள்ள ஒரு கல்லறை வீட்டைத் தன் இருப்பிடமாக்கிக்கொள்கிறான். அந்த கிராமம் முழுக்க குண்டு வீச்சில் கைகால்களை இழந்த சிறுவர்களும் சிறுமிகளும் போர்முனைக் காட்சிகளையே நாடகமாக்கி விளையாடுகிறார்கள்.
அந்த அந்நிய சிறுவன் அந்தப் பேரவலத்தினூடே தன்னை ஐக்கியமாக்கிக்கொள்கிறான். அந்த கிராமத்தின் கதையினூடே யுத்தத்தின் கதைகள் சொல்லப்படுகின்றன. கதைக்குள் வரும் கதாபாத்திரங்கள் பிறகு யுத்தத்தில் தங்கள் ரத்த சாட்சியங்களைப் பேசத் தொடங்குகின்றன. இந்த நாவல் எண்ணற்ற பிரதிகளின் சிலந்தி வலையாக மாறுகிறது. அந்த சிலந்தி வலையை அறுத்து வெளியேறுவது சாத்தியமே அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இடையறாத பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண் போராளிகளின் கதைகள், சிங்கள ராணுவத்தின் சித்ரவதை முகாம்களில் நிர்வாணமாக மாடிப் படிகளில் படுக்க வைத்து, இழுத்துவரப்பட்டு, மண்டை உடைத்துக் கொல்லப்படும் இளைஞர்களின் கதைகள், புலிகளின் ரகசியச் சிறைச்சாலைகளில் கொடூரமாகக் கொல்லப்படும் கைதிகளின் கதைகள் என நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது. யுத்தத்தைப் பற்றி எழுத வரும் சைபீரிய எழுத்தாளன் ஒருவன், பாலியல் தொழில் நடைபெறும் பிரபலமான விடுதியொன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறான்.
ரகசியமான விடுதி அது. உள்ளூர் செல்வந்தர்களாலும் பணக்காரர்களாலும் அதிகம் விரும்பப்படும் விடுதி என்றும், அந்த விடுதியில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் அனைவரும் புலிகள் ராணுவத்தில் முக்கியமான தளபதிகளாகவும் போராளிகளாகவும் இருந்தவர்கள் என்றும், அவர்கள் தன்னகங்காரமும் உடலுறுதியும் மிக்கவர்கள், அவர்களைப் பாலியல் அடிமைகளாக நடத்துவது உங்களை முழு ஆண்மகனாக உணர வைக்கும் என்றும் அந்த எழுத்தாளனுக்குச் சொல்லப்படுகிறது.
ஆனால், அவர்கள் யாரும் புலிகள் அல்ல என்பதையும், கிராமப்புறங்களிலிருந்து கடத்திவரப்பட்ட, வீட்டு வேலைக்கென்று ஏமாற்றி அழைத்துவரப்பட்ட பெண்கள்தான் அவர்கள் என்பதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் அறிகிறான். பிறகு எதற்காக இந்தக் கட்டுக் கதை? ஒரு இனம் அல்லது ஒரு போராட்டம் முழுமையாக வெல்லப்பட்ட உணர்வை அடைய வேண்டும் என்றால் அதற்கு, தோற்றவர்களின் பெண்களைப் பாலியல்ரீதீயாக வெல்ல வேண்டும், சிதைக்க வேண்டும் என்பது ஆதி யுத்த கால பாலியல் அரசியலின் நியதி.
BOX என்பது என்ன? அது நான்கு புறமும் சூழப்பட்டு நெருக்கப்படுவது. பத்ம வியூகம். நாவலின் ஆரம்பத்தில் ஒரு சிறிய அட்டைப் பெட்டிக்குள் நிர்வாணமாக மணிக்கணக்கில் நிற்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களின் பாதங்கள் லேசாகப் பெட்டியை விட்டு நகர்ந்தாலும் அவர்கள் விரல்கள் நறுக்கப்படுகின்றன. பிறகு, யுத்தத்தில் நாலாபுறமும் போராளிகள் சூழப்பட்டு வெளியேற முடியாதபடி பாக்ஸ் அடிக்கப்படுகிறார்கள்.
பாலியல் தொழில் நடக்கும் விடுதிக்கு வரும் சைபீரிய எழுத்தாளனைப் பெண்கள் அட்டைப் பெட்டி வடிவில் சூழ்ந்துகொண்டதாக ஒரு வரி வருகிறது. முள்ளிவாய்க்காலில் மக்கள் எப்படிச் சூழப்பட்டார்கள் என்பதையும் நாம் இப்போது நினைத்துக்கொள்ளலாம். பாக்ஸ் என்பது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கொடுங்கனவின் சின்னம்.
பெரிய பள்ளன் குளம் ஒரு நாள் ராணுவதளமாக மாற்றப்படுகிறது, மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். வாய்பேசாத சிறுவன் மட்டும் போக மறுத்து ஊரிலேயே கல்லறை வீட்டுக்குள் மறைந்துகொள்கிறான். ராணுவத்தினர் அவனை வெளியே கொண்டுவருகின்றனர். அவன் உயர் சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்த, பெளத்த மடாலயத்தில் துறவியாக விடப்பட்ட, அங்கிருந்து ஓடிவந்துவிட்ட சிறுவன் என்று தெரிந்து ராணுவம் அவனுக்குத் தலை வணங்குகிறது. இனவெறுப்புக்கு அப்பால் பெளத்தத்தின் மகத்தான மானுடப் பேரன்பின் ஒரு துளியை தரிசிக்கும் அனுபவத்தை இந்த நாவல் அந்த சிறுவனின் வழியே வழங்குகிறது. BOX கதைப் புத்தகம் ஒரு யுத்த கால சிவில் சமூகத்தின் கதை.
- மனுஷ்ய புத்திரன், கவிஞர்,